வேற்றுமையும் தற்கால பயன்பாடும்

வேற்றுமையும் தற்கால பயன்பாடும்
வேற்றுமையும் தற்கால பயன்பாடும்

வேற்றுமை என்றால் என்ன?

வேற்றுமை என்பது ஒரு பெயர்ச்சொல்லின் இலக்கண தொழிற்பாடு வேறுபடுவது வேற்றுமை எனப்படும். இலக்கண தொழிற்பாடு என்பது  ஒரு வாக்கியத்தின் பெயர்ச்சொல்லிற்கும் வினைச்சொல்லிற்கும் இடையிலுள்ள வாக்கிய ரீதியான உறவை குறிப்பதாகும்.

எடுத்துக்காட்டாக

  • சுமந்திரன் வந்தான்
  • சுமந்திரனைப் பார்த்தான்
  • சுமந்திரனால் வரையப்பட்டது

இந்த மூன்று வாக்கியங்களையும் அவதானித்து பார்த்தால், முதல் வாக்கியத்தில் சுமந்திரன் எழுவாயாகவும் இரண்டாவது வாக்கியத்தில் உள்ள சுமந்திரன் செயப்படுபொருளாகவும் மூன்றாம் வாக்கியத்தில் சுமந்திரன் கருத்தாகவும் வேறுப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. இவ்வாறாக பெயர்ச்சொல்லின் பெயரை வேறுப்படுத்தி காட்டுவது வேற்றுமை ஆகும.

வேற்றுமை தொடர்பாக முதன்முதலில் தனது கோட்பாட்டை முன்வைத்தவர் தொல்காப்பியர் ஆவார். தொல்காப்பியர் வேற்றுமையை முதலில் ஏழு எனக் குறிப்பிட்டு பின்பு விளி என்பதையும் சேர்த்து வேற்றுமை எட்டென வரையறுக்கிறார்.

‘வேற்றுமை தாமே ஏழ் என மொழிப

விளி கொள்வதன்கண் விளியொடு எட்டே’

                                                                        (தொல்.சொல். 63,64)

மேலும் தொல்காப்பியர் உருபின் அடிப்படையில் பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விழி எனப்பெயர் சூட்டுகிறார். இவற்றில் விழி என்பது வேற்றுமையின் பொருள் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏனையவை உருபின் அடிப்படையில் சூட்டப்பட்டுள்ளன.

இவ்வேற்றுமையே நன்னூலார்

‘ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப், பொருள்

 வேற்றுமை செய்வன, எட்டே வேற்றுமை’  (291)

என்கிறார். எவ்வகைப்பட்ட பெயர்க்கும், ஏற்குமிடத்தில், இறுதியில் நின்று, அப்பெயரின் பொருளை வேறுபடுத்தி உணர்த்துவது ‘வேற்றுமை’ எனப்படும். அது எட்டுவகைப்படும் எனக் கூறுகிறார்

வேற்றுமையின் பெயர்களையும் அவற்றின் வரிசை முறையையும்,

பெயரே ஐ ஆல் கு இன் அது கண்

 விளி என்று ஆகும் அவற்றின் பெயர் முறை’ (292)

என்கிறார் நன்னூலார். நன்னூலார் வேற்றுமைகளை எண் அடிப்படையில் வகைப்படுத்துகிறார்.  ( 1,2,3,4,5,6,7,8) அத்துடன் எழுவாய் வேற்றுமையானது ஏனைய ஆறு வேற்றுமைகளின்; உருபுகளையும் ஏற்கும் என்றும் நீயிர்,நீவிர்,நான் ஆகிய பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபினை ஏற்காதும் எனக் குறிப்பிடுகிறார். இதனை பின்வரும் நன்னூல் சூத்திரம் எடுத்துகாட்டகிறது

ஆறன் உருபும் ஏற்கும் அவ்வுருபே (நன்னூல், 293)

இன்றைய மொழியியலாளர்கள் பெயர்வைக்கும் முறையில் வேற்றுமை பொருளை அடிப்படையாக கொண்டு 9 வேற்றுமைகள் எனக்கூறுவர். அந்தவகையில் தற்கால மொழியியலாளரான பேராசிரியர் நுஃமான் அவர்களின் ஆய்வின்படி வேற்றுமைகளை பெயர் கொண்டு அழைக்கப்படுதல் வேண்டும் என சுட்டிக்காட்டுகிறார். அதாவது எழுவாய் வேற்றுமை, செயற்படுபொருள் வேற்றுமை,பொருள் வேற்றுமை, கருவி கருத்தா வேற்றுமை, உடன்நிகழ்ச்சி வேற்றுமை, கொடை வேற்றுமை, நீங்கள் வேற்றுமை, உடைமை வேற்றுமை, இட வேற்றுமை,விழி வேற்றுமை போன்ற பெயர்கள் ஆகும்

வேற்றுமையும் தற்கால பயன்பாடும்

எழுவாய் வேற்றுமை

இதனை முதலாம் வேற்றுமை என்றும் அழைப்பர். ஒரு பெயர்சொல் வாக்கியத்தில் எழுவாயாகச் செயற்படுவது எழுவாய் வேற்றுமை எனப்படும். எழுவாய் வேற்றுமைக்கு உருபு இல்லை.

தர்மன் வந்தான்   கோகுலன் எழுதினான் நான் வந்தேன்

இதல் வரக்கூடிய தர்மன் , கோகுலன், நான் ஆகிய பெயர்ச்சொற்கள் எழுவாயாகும். இவை திரிபடையாத பெயர்ச்சொற்களாகும். ஒரு வாக்கியத்தின் எழுவாயை அறியும் போது குறிப்பிட்ட வாக்கியத்தின் வினையோடு திணை, பால், எண், இட, உறவு கொண்டு காணப்படும் சொல் எழுவாய் வேற்றுமை பெயர் என்று அடையாளம் கண்டுக்கொள்ளலாம்.

தொல்காப்பியர் , பவனந்தி முனிவர் இவ்வேற்றுமைகளை பெயர் வேற்றமை என்று அழைப்பர். தொல்காப்பியரின் கூற்றுப்படி முதல் வேற்றுமை என்பது பெயர் தோன்றி துணையாக நிற்கும் நிலை என்கிறார். இதற்கு உருபு இல்லை  என்றும் இது பயனிலையாக

  • பொருண்மை கூட்டல்
  • வியங்கோல் வருதல்
  • வினைநிலை உண்தல்

வினா, பண்பு,குணம்,பெயர்  முதலியவற்றை கொண்டு வரும் எனக் கூறுகின்றார்.

மேலும் எழுவாய் வெள்pப்படையாக தோன்றியும் தோன்றாமலும் எழுவாய் வேற்றுமை இடம்பெறும்.

உதாரணம் – பசு பால் தரும் ( எழுவாய் தோன்றியுள்ளது)

                    பால் தரும்    (தோன்றவில்லை)

இதற்கு அடுத்த காலகட்டமான இடைக்காலமான, சோழர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு நன்னூலார் குறிப்பிடும் போது “முதலாம் வேற்றுமை திரிபடையாத பெயர்”; என்று கூறுகிறார். அத்தோடு தொல்காப்பியரை போன்றே இவரும் வினை,பெயர்,வினா ஆகியவற்றை பயனிலையாக கொண்டு வரும் என்கிறார்.

உதாரணம் – சோழன் வென்றான் – வினை

            அவன் மாணவன்         – பெயர்

            நிமலன் வந்தானா? – வினா

மேலும் அதற்கு ஆனவன், ஆகின்றவன,; ஆவான் அகிய சொல்லுருபுகளும் உண்டு எனக்கூறுகிறார்.

தற்காலத்தை பொருத்தவரை எழுவாய் வேற்றுமைக்கு என்பவன், ஆனவன், என்பவள், ஆனவள்  போன்ற சொல்லுருபுகள் உண்டு என்றும் கூறுவர். ஆனால் இவைகள் அனைத்தும் சொல்லுருபுகள் அல்ல என்ற கருத்தையும் கூறுவர். பேராசிரியர் எம்.ஏ நுஃமானின் கருத்துப்படி ஒரு வேற்றுமையின் உருபு சொல்லுருபு பிற வேற்றுமை உருபுகளுடன் இணைந்து வருவதில்லை என்றும் சொல்லுருபுகள் என்று குறிப்படப்படுபவை  அறிமுகச்சொல் என்றே கூறல் வேண்டும் என எடுத்துக்காட்டுகிறார்.

உதாரணமாக                         1.     கண்ணன் வந்தான்

                                                2.     கண்ணன் என்பவன் வந்தான்

என்ற கூற்றுக்களில் இரண்டாவது கூற்றானது பேசுவோருக்கும் கேட்போருக்கும் அல்லது இருவரில் ஒருவருக்காவது கண்ணன் முன்பின் அறிமுகம் அற்றவராக இருந்தால் மாத்திரமே இரண்டாவது வாக்கியம் பயன்படுத்தப்படும் என்கிறார். அத்துடன் ஒரு வேற்றுமை உருபு பிற வேற்றுமை உருபுகளுடன்  இணைந்து வருவதில்லை ஆகவே என்பவன் என்பவள் முதலிய சொற்கள்  சொல்லுருபுகள் அல்ல இவைகள் பெயர்ச்சொற்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

03. செயப்படுப்பொருள் வேற்றுமை

இவ்வேற்றுமையை இரண்டாம் வேற்றுமை என்றும் அழைப்பர். ஒரு வாக்கியத்தில் ஒரு பெயர்ச்சொல் செயப்படுபொருளாக தொழிற்படுவது செயப்படுபொருள் வேற்றுமை எனப்படும். இவ்வேற்றுமைக்கான உருபு ஐ ஆகும். தொல்காப்பியர் கருத்துப்படி 2ஆம் வேற்றுமை உருபு ஐ என்றும் அது வினை குறிப்புவினை  ஆகியவற்றை  கொண்டு வரும் என குறிப்பிடுகிறார். இவர் இரண்டாம் வேறு;றுமை 28 பொருள்களில் வரும் என்கிறார்.

பவனந்தி முனிவரை பொருத்தவரை 2 ஆம் வேற்றுமை உருபு ஐ என்றும்  இது ஆக்கல் அழித்தல் அடைதல், ஒத்தல், உடைமை, நீத்தல் ஆகிய 6  பொருள்களில்  வரும் எனக் குறிப்பிடுகிறார்.

வீட்டை கட்டினான்         – ஆக்கல்

வீட்டை இடித்தான்                 – அழித்தல

வீட்டை அடைந்தான்                 – அடைதல்

குமார் யானையை ஒத்தான்         – ஒத்தல்

பணத்தை வைத்திருந்தான்         – உடைமை

ஜனாதிபதி பதவியை நீத்தார்         – நீத்தல்

தொல்காப்பியரின் 28 பொருள் உண்டெனக் கூற பவனந்தி முனிவர் அவை அனைத்தையும் 6 பொருளில் அடைத்து விடலாம் என எண்ணி ஆறு வகையாக விளக்கி கூறுகிறார்.

ஆனால் நவீன மொழியிலாளர்கள் பொருத்தவரை 2 ஆம் வேற்றுமையின் பொருள் செயப்படுபொருள்  எனக் கூறுகின்றனர். ஒரு பெயர்ச்சொல் வாக்கியத்தில் செயற்படுபொருளாக தொழிற்படுவதே இரண்டாம் வேற்றுமை எனக் கூறுகின்றனர். பேராசிரியர் எம்.ஏ நுஃமான் அவர்களின் கருத்துப்படி சில வகையான பெயரச்சொற்களுடன்  ஐ உருபானது எப்போதும் இணைந்தே வரும் என்கிறார்.

எடுத்தக்காட்டாக – அப்பாவை பார்த்தேன்

                        கண்ணனைக் கண்டேன்

இவ்வாக்கியங்களில் ஐ உருபு இல்லாமல் எழுதும் போது அப்பா பார்த்தேன், கண்ணன் கண்டேன் என பொருத்தமற்றதாகவே அமையும். அத்துடன் செயப்படுபொருள் வேற்றுமையின் போது பேசுவோனுக்கும் கேட்போனுக்கும் அடையாளம் தெரிந்த குறிப்பான ஒன்றைச் சுட்டும் பெயரை குறிப்புடைய பெயர் என்றும் அவ்வாறு இல்லாத பொதுவான ஒன்றைச் சுட்டும் போது குறிப்பிலா பெயர் என்றும்; அழைக்கப்படுதல் வேண்டும் என பேராசிரியர் எம் ஏ நுஃமான் மேலும் குறிப்பிடுகிறார்.

உதாரணம் – குமாரன் மரம் வெட்டினான்         – குறிப்பிலாப் பொருள்

குமாரன் மரத்தை வெட்டினான்-குறிப்புடைய பொருள்

கருவி வேற்றுமை

இதனை மூன்றாம் வேற்றுமை என்றும் கூறுவர். இவ்வேற்றுமை ஆல் என்னும் உருபினால் உணர்த்தப்படுகிறது. இவ்வேற்றுமையை பழந்தமிழ் இலக்கணகாரர்களான தொல்காப்பியர் இவ்வேறறுமையை ஒடு என விளக்குகிறார். இது வினையோடு கருவி பொருளில் வரும் எனக் குறிப்பிடுகிறார்.

மூன்றாம் வேற்றுமை தொடர்பாக ஆ வேலுப்பிள்ளை கருத்து தெரிவிக்கையில் தொல்காப்பிய காலத்தில் ஒடு என்ற உருபு உடன்நிகழ்ச்சியை மாத்திரம் குறிக்கவில்லை ஆன் என்பது போல கருவியையும் குறித்து நிற்கிறது என்கிறார்.

   சோழர்காலத்தை அடிப்படையாக கொண்டு இலக்கணம் கூறிய நன்னூலார் புதிய கருத்தினை முன்வைக்கிறார்.

மூன்றாம் வேற்றுமை  ஆல், ஆன், ஒடு, ஓடு  என்றும் ஆல் ஆன் கருவி கருத்தா பொருளிலும் ஒடு ஓடு என்பன உடன்நிகழ்ச்சி பொருளிலும் வரும் என்கிறார். ( நன்னூல் சூத்திரம் 297)

ஆல் ஆன் – கருவி வேற்றுமையானது இருவகையாக பிரிப்பர்

முதற் கருவி- இரும்பாலான கோடர்

துணைக்கருவி-மரத்தால் செய்த பலகை

கருத்தாப் பொருள்

ஏவுதல் கருத்தா -அமைச்சரால் கட்டிய கட்டிடம்

இயற்றுதல் கருத்தா-குயவனால் செய்த பானை

ஓடு, ஓடு –    உடன்நிகழ்ச்சி வேற்றுமை

தந்தையோடு மகன் சென்றான்

இன்றைய மொழியிலாளர்களின் கருத்துப்படி 3ஆம் வேற்றுமை பிரித்து நோக்கப்பட வேண்டியவையாகும் எனக் குறிப்பிடுகின்றனர்.

கருவி வேற்றுமை

உடன்நிகழ்ச்சி வேற்றுமை

அத்துடன் தற்கால இலக்கணக்காரர்களின் கருத்துப்படி மூன்றாம் வேற்றுமை கருவி கருத்தா மட்டுமன்றி வேறு பொருள்களிலும் வருகின்றது என சுட்டிகாட்டுகின்றனர்.

காரணப்பொருள் – ஜனகன் வறுமையால் இறந்தான்

மூலப்பொருள்         – இறப்பரால் செய்த பாதனி

சிறுபான்மை நீங்கள் பொருள் – மரத்தால் வீழந்தவனை மாடேறி மிதித்தது போல

தற்காலத்தில் மூன்றாம் வேற்றுமைக்கு சொல்லுருபுகளாக கொண்டு, மூலம் பயன்படுத்தப்படுகிறது

கொண்டு – கோடரி கொண்டு வெட்டினான்

மூலம்         – மிதிவண்டி மூலம் வந்தான்

அத்துடன் கொண்டு என்னும்; சொல்லுருபானது பொதுவாக தற்காலத்தில் ஐ உருபை ஏற்று பெயர்ச்சொல்லை அடுத்து வருகிறது

உதாரணம் – கத்தியைக் கொண்டு மரத்தை வெட்டினான்.

முக்கியமாக உடன்நிகழ்ச்சி வேற்றுமையை தற்கால மொழியியலாளர்கள் இவ்வேற்றுமை உருபாலும் பொருளாலும் வேறுபடுவதனால் தனியான வேற்றுமையாக கொள்வர். அத்துடன் ஓடு உருபு உடன் நிகழ்ச்சி பொருளில் மட்டுமன்றி வாக்கியத்தில் வேறு பொருள்களிலும் வருகின்றது.

அடைமொழி பொருள்        –     அவர் ஆர்வத்துடன் எழுதினார்

கலப்புப் பொருள்               – பெற்றோர்கள் குழந்தைகளோடு சேர்ந்தனர்

கூட்டல் அல்லது சேர்த்தல் பொருள் – ஐந்தோடு ஒன்றை கூட்டினால் ஆறு

ஓர் இடத்தில் தொடர்ந்திருத்தல்    – நண்பனின் வாழ்க்கை வேலையோடு கழிகிறது

வரையறைப் பொருள்                    – இவ்வளவோடு நிறுத்திக்கொள்கிறேன்

வினையடை ஆக்கி            – கதையோடு கதையாக

கொடை வேற்றுமை

இவ்வேற்றுமையை தமிழ் இலக்கண நூல்கள் நான்காம் வேற்றுமை என்றும் கூறுவர். இவ்வேற்றுமைக்கான உருபு கு ஆகும். தொல்;காப்பியரை பொருத்தவரை இது எப்பொருளையும் கொள்ளும் எனக் கூறுகிறார். இவர் அடுத்த சூத்திரத்தில் அப்பொருளை நற்பு, பகை, காதல், சிறப்பு என நான்கு பொருள் பற்றி குறிப்பிடுகிறார்.

நற்பு – கமலனுக்கு நிமலன் நன்பன்

பகை – கீரிக்கு பாம்பு பகை

காதல் – தசரதனுக்கு இராமன் மீது அதிக அன்பு இருந்தது

சிறப்பு – அரசனுக்கு வீரம் புகழைத்தரம்

நன்னூலார் பொருத்தவரை 4ஆம் வேற்றுமை உருபு கு என்றும் அது கீழ்வரும் பொருள்களில் வரும் எனவம் குறிப்பிடுகிறார்.

கொடைப்பொருள் – முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

பகைப்பொருள் – பாம்புக்கு கீரி பகை

நற்புப்பொருள் – குகனுக்கு நண்பன் இராமன்

தகுதிப்பொருள்         – மாணவர்களுக்கு தகுதி மான்பு

அதுவாதல்ஃ முதற் காரணகாரியப் பொருள் – பிட்டுக்கு மா பிசைந்தார்

நிமித்தகாரணம்      – விளையாடுவதற்கு மைதானம் சென்றான்

முறையியற் பொருள்        –     இராமனுக்கு சீதை மனைவி

தற்கால மொழியியலாளர்கள் இதனை கொடை வேற்றுமை என்றும் இதன் உருபு கு மாத்திரமல்ல க்கு, அக்கு, உக்கு ஆகிய மாற்று வடிவங்களும் உண்டு என்கின்றனர். மேலும் கீழ்வரும் அம்சங்களையும் பெற்று வரும் என்று தற்கால மொழியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கு உருபானது இன் அல்லது அன் சாரியை பெற்று வருகின்றது

நாடு +         இன்     +     கு      –     நாட்டிற்கு

விடு +          இன்     +     கு     –     வீட்டிற்கு

அது +         அன்     +      கு     –     அதற்கு

அக்கு உருபு என், எம், நம், உன், உம், தன், தம் ஆகிய மூவிடப் பெயர்களின் Nவுற்றுமை ஏற்கும் வடிவங்களுடன் வருகின்றது.

என் +     அக்கு   – எனக்கு

எம்         +     அக்கு   – எமக்கு

நம்        +     அக்கு   – நமக்கு

தம்         +     அக்கு   – தமக்கு

க்கு, உருபு இ, ஈ, ஐ, ய் ஈற்றுப் பொயர்களை அடுத்தும் குற்றியலுகர ஈற்றுப் பெயர்களை அடுத்தும் வருகின்றது

எலி +     க்கு   – எலிக்கு

மூக்கு +     க்கு   – மூக்குக்கு

தலை +     க்கு   – தலைக்கு

உக்கு உருபு ஏனைய எல்லாப் பெயரச்சொற்களையும் அடுத்து வருகின்றது

அப்பா +     உக்கு   – அப்பாவுக்கு

அவர்கள் +    உக்கு   – அவர்களுக்கு

ஆண் +     உக்கு   – ஆணுக்கு

மகர ஈற்றுப் பெயர்கள் அத்து சாரியை பெற்றும் அவை, இவை, எவை என்பன அற்று சாரியை பெற்றும் உக்கு உருபு ஏற்கின்றன

பணம் +     அத்து +     உக்கு    – பணத்துக்கு

அத்துடன் இவ்வேற்றுமையானது

எல்லைப்பொருள் – இலங்கைக்கு வடக்கில் இந்திய அமைந்துள்ளது

ஓர் இடம் நோக்கி நகர்தல் – நான் கொழும்புக்கு போகிறேன்

வா,போ,ஓடு,நட முதலிய வினைகளைப் பயனிலையாகக் கொள்ளும் வாக்கியங்களில் இடப்பெயரகளுடன் சேர்ந்து வரும்

அனுபவப்பேறு – எனக்கு திராட்சை பிடிக்கும்

உண்டு, இல்லை, வேண்டும்? தெரியும், பிடிக்கும், பசிக்கிறது போன்ற வினைகளுடன் கு உருபு ஏற்ற பெயர்கள் வரும்போது, அப்பெயர்கள் முலம் உடல் உளநிலை அனுபவம் என்பன உணர்த்தும்.

காலக்குறிப்பு – எத்தனை நாட்களுக்கு இங்கு இருப்பீர்? காலம் உணர்த்தும் பெயர்களுடன் கு உருபு சேர்ந்து கால வரையறையை காட்டும்

வீதம், விகிதாசாரம் – நூற்றுக்கு எண்பது , ஆறக்கு ஒன்று

காலம் உணர்த்தும் பெயர்களுடன் கு உருபு சேர்ந்து  நூற்று வீதம் விகிதாசாரம் ஆகியவற்றை  உணர்த்தப் பயன்படுகிறது.

வினையடை ஆக்கப்பொருள் – நாளுக்கு நாள் , ஆளுக்கு ஆள் போன்ற அடுக்கு வினையடைகளை ஆக்குவதிலும் கு உருபு பயன்படுகிறது.

நீங்கள் வேற்றுமை 

இதனை ஐந்தாம் வேற்றுமை என்றும் அழைப்பர். இவ்வேற்றுமையை தொல்காப்பியர் இதன் உருபு இன் என்றும் இது எலலை, நீங்கள், ஒப்பு, ஏது எனும் பொருளில் வரும் என குறிப்பிடுகின்றார். இப்பொருளை பாகுப்படுத்தும் நோக்கோடு தனது சூத்திரத்தில் வெண்மை, கரமை முதலான வண்ணங்களும் வட்டம், சதுரம்  முதலான வடிவம் உயர்வு, கட்டை

முதலான அளவு புளிப்பு, இனிப்பு முதலான  சுவை போன்ற அடிப்படையில் வரும் எனக் குறிப்பிடுகின்றார்.

நவீன மொழியிலாளர்களை பொருத்தவரை இதனை நீங்கள் வேற்றுமை பொருளில் அழைக்கின்றனர். பழந்தமிழ் இலக்கணக்காரர்கள் குறிப்பிட்டதை போன்றே  அதே நான்கு பொருளிலையே  இவ் வேற்றுமை இன்று வழக்கில் உள்ளது. எனினும் அதன் உருபை பொருத்து பொருளிலும் மாற்றம் வரும் எனக் கூறுகின்றனர். இக்கால தமிழில் இன் உருபு  நீங்கள் பொருளில் வருவதில்லை இல்- இருந்து என்னும் சொல்லுருபே இப்பொருளை தருகிறது என பேராசிரியர் எம். ஏ நுஃமான்  குறிப்பிடுகிறார்.

நீங்கள் என்பது ஒரு இடத்திலிருந்து  விலகுவதைக் குறிக்கும். இந்த இடம் பருப்பொருள் சார்ந்ததாக அல்லது பருப்பொருள் சாராததாக அமையலாம்.

  1. பருப்பொருள் சார்ந்த இடம்
  2. கமலா ஊரிலிருந்த வந்தாள்
  3. குருவி கூட்டிலிருந்து புறப்பட்டது
  4. மரத்திலிருந்து பழம் கீழே விழுந்தது

பருப்பொருள் சாராத இடம்

  • மகிழ்ச்சியில் இருந்து என்னால் வெளிவர முடியவில்லை
  • உன் நினைவை என் ஞாபகத்திலிருந்து அகற்றிவிட்டேன்

அங்கு, இங்கு, மேல், கீழ் முதலிய பெயர்ச்சொற்களுடன் இருந்து என்னும் சொல்லுருபு இணைந்தும் நீங்கள் வேற்றுமை இடம்பெறுகிறது.

உதாரணம் – அங்கிருந்து, இங்கிருந்து, மேலிருந்து, கீழிருந்து

இடமிருந்து எனும் உருபும் இணைந்து வருகின்றது

  • தங்கையிடமிருந்து கடிதம் வந்தது
  • தாயிடமிருந்து சேயை பிரிக்க வேண்டாம்

அஃறிணைப் பெயர்களுடனும் இடமிருந்து உருபு இணைந்து வருகின்றது

  • கீரியிடமிருந்து குருவி தப்பிச் சென்றது

ஒப்புப் பொருள்

பழந்தமிழில் இல் உருபானது ஒப்புப்பொருளிலும் வந்துள்ளது. இக்காலத்தில் விட, காட்டிலும், பாரக்கிலும் போன்ற இடைச்சொற்கள் இணைந்தே ஒப்புப்பொருள் வருகின்றது.

  • அவனைவிட இவன் கெட்டிக்காரன்
  • சிறுகதையை காட்டிலும் நாவல்; விருவிருப்பானது
  • கமலை பார்க்கிலும் கனகு உயரமானவன்

எல்லைப்பொருள்

எல்லைப்பொருள் உணர்த்தும் இடங்களில் இன் உருப இடம்பெறுகிறது. கிழக்கு, மேற்கு முதலிய திசை பெயர்கள் முன், பின், மேல், கீழ் முதலிய சொற்கள் இன் உருபை ஏற்ற பெயரை அடுத்து வந்து எல்லைப்பொருள் அல்லது இடக்குறிப்பை உணர்த்துகின்றன என பேராசிரியர் எம், ஏ நுஃமான் சுட்டிக்காட்டகிறார்.

உதாரணம் – பாடசாலைக்கு வடக்கில் விடு இருக்கிறது

ஏதுப்பொருள்

ஒன்றின் உயர்வு தாழ்வு போன்றவற்றுக்கு காரணமாக அமையும் பொருள் ஏதுப்பொருள்  ஆகும். இன்றைய தமிழில் ஏதுப்பொருள் இல், ஆல் ஆகியவற்றையும் கொண்டு வழங்குவதை காணலாம். தற்காலத்தில் இல் உருபு பாடல்களில் இடம்பெறுவதையும் காணலாம்.

உதாரணம் – ஞானத்தின் உயர்ந்த நாடு இலங்கை

        ஞானத்தால் உயர்ந்த நாடு இலங்கை

        உழைப்பில் சிறந்து உயர்ந்தான்

        உழைப்பால் சிறந்து உயர்ந்தான்

ஐந்தாம் வேற்றுமை தொடர்பாக பேராசிரியர் கால்டுவெல் குறிப்பிடம் போது ஐந்தாம் வேற்றுமை தேவையில்லை எனக்குறிப்பிடுகிறார். எனினும் நவீன மொழியியலாளர்கள் தற்காலத்தில் இன் உருபு எல்லைப்பொருளில் மட்டுமே பயன்படுகிறது என்றும் வேறு பொருள்களில் பயன்படுவதில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

உடைமை வேற்றுமை

தமிழ் இலக்கண நூல்கள் இதனை ஆறாம் வேற்றுமை என்றும் அழைப்பர். இன், அது, உடைய என்பன இதன் உருபுகளாகும். தொல்காப்பியர் இது தற்கிழமை, பங்தின் கிழமை ஆகிய பொருளி;ல் வரும் எனவும் குறிப்பிடுகின்றார்.

“அதுவென பெயரிய வேற்றுமை கிளவி

தற்கிழமை, பிறதின்கிழமை என இருவகைப்படும்” (தொல். சூ.இல – 79)

நன்னூலாரை பொருத்தவரை  இதன் உருபு அது, ஆது, அ ஒருமைக்கும் அ என்பது பன்மைக்கும் வழங்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றார். இதன் தற்கிழமை பிறதின் கிழமை ஆகிய பொருளில் வரும் எனவும் கூறுகின்றார். அதுமட்டுமன்றி ஒருமை பன்மை என்ற பாகுபாட்டை தருவது ஆறாம் வேற்றுமை மாத்திரமேயாகும்.

உதாரணம் –     காகத்தின் இயல்பு – அது

                 எனாது நிலம் – ஆது

                 எனக்கைகள் – அ

தற்கால மொழயியலாளர்கள் 6 ஆம் வேற்றமையை உடைமை வேற்றுமை எனக்கூறுவர். இதன் உருபு அது, உடைய, இன என்பனவாகும். ஏனைய வேற்றுமைகள் பெயருக்கும் வினைக்கும் இடையிலான உறவை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் ஆறாம் வேற்றுமை மாத்திரமே இரு பெயர்ச்சொற்களுக்கு இடையிலான உறவை சுட்டிக்காட்டுகிறது. இவ்ஆவற்றுமை திரிபடையும் பெயர் சொற்களின் திரிந்த வடிவம். அது, உடைய, ஆகிய உருபுகளை ஏற்காமல் உடைமை பொருளை உணர்த்தும் எனக்கூறுகிறது.

உதாரணம் –

  • எனது புத்தகம்

எனினும் இன் உருபு தொடர்பாக சில விமர்சனங்களும் காணப்படுகிறது. இன் எனும் உருபானது உருபா? அல்லது சாரியையா? என்பதில் சந்தேகம் காணப்படுகிறது.

உதாரணம்  –

  • மரத்தினது கிளை  – மரம் ூ அத்து ூ இன் ூ அது ூ கிளை

இருந்தாலும் இவற்றில் வரும் இன் சாரியை என பழந்தமிழ் இலக்கணக்காரர்கள் கூற நவீன மொழியியலாளர்கள் இவற்றை உருபாகவே கருதுகின்றனர்.

உதாரணம்

  • மாட்டின் இறைச்சி

இன், அது உடைய ஆகிய மூன்றும் ஒனறுக்கு பதில் மற்றது வரக் காணலாம்

உதாரணம் – கண்ணனின் தங்கை

கண்ணனுடைய தங்கை

கண்ணனது தங்கை

இடவேற்றுமை

இதனை ஏழாம் வேற்றுமை என்றும் அழைப்பர். இதன் உருபு இல், இடம் ஆகும். தொல்காப்பியர் கண் என்றும் இது வினை, இடம், காலம் ஆகிய மூன்றையும் குறிப்பால் உணர்த்துவதன் ஊடாக வரும் எனக் குறிப்பிடுகின்றார். மேலும் 82 வது சூத்திரத்தில் கண், புறம், அகம், கீழ், மேல், முதலிய 19 பொருளிலும் வரும் எனவும் அவை பிறவும் வரும் எனவும் குறிப்பிடுகின்றார்.

நன்னூலார் ஏழாம் வேற்றுமையின் உருபு கண் என்றும் இது தற்கிழமை பிறதின் கிழமை இடமாக நின்று வரும் என்கிறார். மேலும் ஏழாம் வேற்றுமையின் உருபு 28 என்றும் நன்னூல் கூறுகிறது.

இன்றைய தமிழில் இவ்வேற்றுமையை இட வேற்றுமை எனக்கூறுவர். இங்கு இல், இடம் ஆகிய இரண்டுடே வேற்றுமை உருபாக வருகிறது.

உதாரணம்

  • அப்பா வீட்டில் இருக்கிறார்
  •  குருவி வானத்தில் பறக்கிறது.

இல் உருபு கால வரையறையையும்; உணர்த்துகிறது.

  • ஐந்து நாட்களில் திரும்பி விடலாம்

ஒரு குழவில் அமையும் பிறிதொரு குழுவைச் சுட்டவும் இல் பயன்படுகிறது

  • அறு தொழிலாளர்களில் மூவர் வரவில்லை

இற்கு இல் எனும் உருபக்கு பதிலாக உள் எனும் உருபும் பயன்படுகிறது

  • எடுத்துகாட்டு – நாவல்களுல், மாணவர்களுர், மனிதர்களுல்

இடம் உயர்தினை பெயர்களுடன் வருகிறது

  • உதாரணம் – தம்பியிடம் பணம் இருக்கிறது

கற்பனைக் கதைகளில் அஃறிணைப் பெயர்களுடன் இடம் உருபு வருகிறது

  • உதாரணம் – யானை புலியிடம் உதவி கேட்டது

இடம் உருபும் கு உருபும் ஒரே சூழலில் வந்து பொருள் வேறுபடுத்தும் சந்தர்ப்பங்களும் உண்டு

உதாரணம்

  • நாள் குகனிடம் பணம் கொடுத்தேன்
  • . நான் குகனுக்கு பணம் கொடுத்தேன்

விளி வேற்றுமை

தமிழ் இலக்கண நூல்கள் இதனை எட்டாம் வேறு;றுமை என்றும் கூறுவர். இங்க பேசுவோர் படர்க்கை இடத்திற்கு  உரியவரை முன்னிலைப்படுத்தி அழைத்து பேசுவதே விளி வேற்றுமை ஆகும்.

  • உதாரணம்  – கண்ணா எங்கே போகிறாய்

தொல்காப்பியர் பொருத்தவரை இவ்வேற்றுமை தொடர்பாக எவ்வித கருத்துக்களும் கூறவில்லை . ஏனெனில் வேற்றுமை ஏழு என்றும் விழியோடு சேர்த்து எட்டாவது எனக் கூறும் போது இவர் எட்டாவது வேற்றுமையாக இதனை கருதவில்லை என்றே தெரிகிறது. ஆனால் பவனந்தி முனிவர் எட்டாம் வேற்றுமை விழி வேற்றுமை என்றும், இதன் உருபு ஏற்ற பெயர்ச்சொல்லின் இறுதி திரிபடைதல், குன்றல், மிகுதல், ஈற்று, இயல் திரிபடைதல் அகியவற்றில் இது அடங்கும் எனக் கூறுகிறார். மேலும் படர்க்கையோடு தன்முகத்தால் விழித்து அழைப்பதாக கூறுவர்

தற்கால மொழியியலாளர்கள் பொருத்தவரை இதை விளிவேற்றுமை என்றும்  தனியான உருபு இல்லை என்றும் பெயரச்சொற்களில் ஈறு அடையும் திரிபினால் இது உணர்த்தப்படும் எனக்கூறுவர். விளி வேற்றுமைக்கு ஏனைய வேற்றுமைக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. ஏனைய வேற்றுமைகள் தான் ஏற்றுக்கொண்ட யெரச்சொல் வாக்கியத்தில் எழுவாய் செயப்படுபொருள் போல் வாக்கிய உருபுகளாக தொழிற்படுகின்றன. ஆனால் விளி வேற்றுமை பெயர் வாக்கியத்திற்கு வெளியே நிற்கின்றது. இது வாக்கியத்தின் உருபு அல்ல எனக் கூறுவர்.

  • எடுத்துக்காட்டாக – கண்ணா நீ எங்கே போகிறாய்

மேற்கூறப்பட்ட தொடரில் நீ எங்கே போகிறாய் என்பதே வாக்கியம். நீ எழுவாய்  எங்கே போகிறாய் என்பது பயனிலை தொடர். கண்ணா என்னும் விளி வாக்கியத்திற்கு வெளியே நிற்கின்றது.

வினைக்கும் விளிக்கப்படம் பெயருக்கும் இடையே நேரடி உறவு இல்லை. இதனால் தற்கால மொழியியலாளர் சிலர், விளி வேற்றுமையை ஒரு வேற்றுமையாக கருதுவதில்லை. மேலும் நீ, நான், அவன், முதலிய மூவிடப் பெயர்கள் விளிக்கப்படுவதில்லை. மூவிடப் பெயர் அல்லாத படரக்கைப் பெயர்களே விளிக்கப்படுகின்றன.

விளிக்கப்படும் சில பெயரச் சொற்கள் ஏகார ஈறுப் பெற்றே வருகிறது.

  • உதாரணம் – மகன் + ஏ – மகனே

ஈற்று இகரம் ஈகாரமாதல்

  • உதாரணம் – கமலி – கமலீ  , தம்பி – தம்பீ

ஈற்று அயலட திரிதல்

  • மக்கள்  – மக்காள்

ஐ ஈற்றுப் பெயர்கள் ஆய் விகுதிப்பெறுதல்

  • அன்னை – அன்னாய்

இவ்வாறாக தற்காலத்தில் 8 வேற்றுமைகள் பயிலப்படுகிறது. தற்காலத்திலும் புதிய சீர்த்தீருத்தங்களுடன் வேற்றுமையானது காலத்திற்கு ஏற்ப மாற்றம் பெற்றுள்ளது.; வேற்றுமைகள் பற்றி தொல்காப்பியம் கூறிய விடயங்களை, நன்னூல் புதிய வடிவத்தில் வழங்கிய போதும் நவீன தமிழ் மொழியியலாளர்கள் தற்காலத்திற்கு எற்ற வகையில் அதன் அம்சங்களை குறிப்பிட்டு புதிய மாற்றங்களுடன் வழங்கியிருப்பது வேற்றுமையின் தேவையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

உங்களுக்கான குறிப்புக்களை கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Comment