போர்த்துக்கேயர் காலத் திருச்சபைகள் வளர்த்த கல்வி

போர்த்துக்கேயர் காலத் திருச்சபைகள் வளர்த்த கல்வி
www.edutamil.com

போர்த்துக்கேயர் ஆட்சிக்காலக் கல்வி முறைமை (1505-1658) போர்த்துக்கேயர் காலத் திருச்சபைகள் வளர்த்த கல்வி இலங்கையில் நிலவிய போர்த்துக்கேயர் ஆட்சி பற்றி நீங்கள் என்ன அறிவீர்கள்? போர்த்துக்கேயர் 1505 இல் இலங்கைக்கு வந்து இந்நாட்டின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றினர் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். போர்த்துக்கேயர் இலங்கையில் தரையிறங்கிய காலத்திலே கோட்டை இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம், கண்டி இராச்சியம் என்னும் மூன்று அரசுகள் இங்கு நிலவின. கோட்டை மன்னன் விஜய பராக்கிரமபாகு VII அவர்களை சமாதானமாகவும் நட்புறவாகவும் வரவேற்றான்.

போர்த்துக்கேயரின் ஆதிக்கம் இலங்கையின் வடபகுதி. மேற்குப்பகுதி, தென்பகுதி என்பனவற்றில் மட்டுமே நிலவியது. அவர்களின் ஆட்சிக்காலம் போரும், பூசலும் நிறைந்த காலப்பகுதியாகவே விளங்கியது. அவர்கள் கோட்டை, கண்டி, யாழ்ப்பாண மன்னர்களோடு எப்போதும் பூசல்கள் பூண்டனர். அதனால் அவர்களின் ஆட்சிக்காலத்திலே கல்வி வளர்ச்சிக்கு மிகச் சிறிய வாய்ப்பே அமைந்தது.

கோட்டை இராச்சியத்தின் இளவரசன் தர்மபாலன் மதம் மாற நேரிட்டாலும் அவர்களின் செல்வாக்கு கொழும்பைச் சூழ்ந்த பிரதேசத்தில் மட்டும் காணப்பட்டது. பின்னர் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரின் வசமாக நேரிட்ட போதும் கண்டி இராச்சியம் தொடர்ந்தும் சுதந்திரமாகவே இயங்கியது.

இக்காலத்தில் கல்வியின் நோக்கம் கத்தோலிக்க மதத்தைப் பரப்புதல், வாசிப்பு, எழுத்துப் போதனை என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டது. கல்வி புகட்டல் முழுக்க முழுக்கக் கிறிஸ்தவ திருச்சபை மதப் பிரசாரகர்களின் பணியாக இருந்தது. இக்கல்விப்பணிக்கு அரசின் ஆதரவு கிடைத்தாலும் கல்வியூட்டல் திருச்சபையின் பொறுப்பில் விடப்பட்டது. கோயில் நிலங்கள் திருச்சபைக்கு வழங்கப்பட்டன. இவற்றிலிருந்து கிடைத்த வருவாய் கல்விச் செலவிற்கு உதவியது.

இக்காலப் பகுதியிலே நான்கு திருச்சபை மதப் பிரசாரகர் குழுக்கள் இலங்கைக்கு வந்து கல்வி புகட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டன.

பிரான்சிஸ்கன் பிரிவு பிரசாரகர்கள் – (1543) கோட்டை இராச்சியத்தில் சுதந்திரமாய் இயங்கித் தமது சமயத்தைப் பரப்ப மன்னன் புவனேகபாகு அனுமதி வழங்கினான். அவர்களின் நடவடிக்கை மாத்தறையில் மையநிலை கொண்டது. 

ஜெசுயிற்/இயேசு பிரிவு பிரசாரகர்கள் – (1602) இந்தியாவில் மிகவும் ஊக்கத்தோடு செயற்பட்ட இப்பிரிவினர் கல்விச் செயற்பாடுகளில் புகழ் ஈட்டினர். அவர்கள் போர்த்துக்கேய ஆட்சியாளர்களின் பேராதரவைப் பெற்றுக் கொண்டனர். இவ்விரு பிரிவினருக்கும் இடையே போட்டி நிலவியது. எனவே “சத்கோரளை” என்னும் பகுதியிற் சுதந்திரமாகச் செயலாற்றும் உரிமை ஜெசுயிற் பிரிவினருக்கு கிடைத்தது.

அகஸ்டினியப் பிரிவு பிரசாரகர்கள் (1606)

இப்பிரிவினர் நான்கு கோரளைகளிற் செயலாற்றினர்.

டொமினிக்கன் பிரிவு பிரசாரகர்கள் – (1606)

இப்பிரிவினர் பணி ‘சப்பரகம’பிரதேசத்தில் மையநிலைகொண்டது. இந்த மதப் பிரசாரக்குழுக்கள் யாவற்றினதும் தலைமையகங்கள் கொழும்பிலே இருந்தன.

போர்த்துக்கேயர் ஆட்சிக்காலக்கல்வி நிறுவனங்களின் ஒழுங்கமைப்பு

பங்குப் பாடசாலை

மதப்பிரசாரகர்கள் பங்குப் பாடசாலைகளைச் சிற்றூர்களில் பெரிய அளவில் தொடங்கினர். இவற்றில் வாசிப்பு, எழுத்து எண்கணிதம் ஆகிய மூன்று பாடங்கள் போதிக்கப்பட்டன. இப்பங்குப் பாடசாலைகள் சிறுபள்ளிகளாகவே காணப்பட்டன. இவற்றின் கலைத்திட்டத்தில் மதபோதனை மிக முக்கிய இடம் பெற்றது. வினா விடை முறை கற்பித்தலுக்கு பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பங்கும் அதாவது திருச்சபையின் நிருவாகத்துக்குட்பட்ட “கோயிற்பற்றும்” தனக்குரிய பள்ளியைக் கொண்டிருந்தது.

 

கல்லூரிகள்

போர்த்துக்கேயப் பிள்ளைகள் இக் கல்லூரியில் கல்வி பயின்றனர். உள்நாட்டு உயர் குடும்பத்தினரின் பிள்ளைகள் சிலரும் இவற்றிலே கல்வி பயின்றனர். துறவு மடங்கள்” எனவும் பெயர் பூண்ட இக் கல்லூரிகளிலே “மதபோதகர்கள்” ஆக விரும்பியோரும் கல்வி கற்றனர். இக்கல்வி நிலையங்களின் கலைத்திட்டத்திலே சமயம். வாசிப்பு, எழுத்து, துதிபாடுதல், இலத்தீன் மொழி, நற்பழக்கவழக்கங்கள் என்பன இடம்பெற்றன. இக் கல்லூரிகள் தீவிர சமயச்சார்புள்ள உயர்கல்வி நிறுவனங்களாக அங்கீகரிக்கப்பட்டன. இத்தகைய கல்லூரிகள் கொழும்பு, யாழ்ப்பாணம், நவகமுவ என்னும் இடங்களில் இருந்தன்.

ஜெசுயிற் கல்லூரி

போர்த்துக்கேயப் பிள்ளைகளின் நலனுக்காகக் கொழும்பில் ஜெசுயிற் கல்லூரி ஒன்று இயங்கியது இக்கல்லூரி 1609இல் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க நிலைப்பிரிவில் சமயம் போர்த்துக்கேய மொழி வாசிப்பும் எழுத்தும் என்ற பாடங்கள் போதிக்கப்பட்டன. இதன் உயர் கல்விப் பிரிவில் இலத்தீன், இறையியல், என்பனவும் வேறு சில பாடங்களும் பயிற்றப்பட்டன. இலங்கை மன்னர் குடும்ப இளவரசர்கள். உள்நாட்டு உயர் குலத்தினரின் பிள்ளைகள் ஆகியோரும் இக்கல்லூரியிற் படித்தனர்.

முகத்துவார ஆதுலர்சாலை

பிரான்சிஸ்கன் பிரிவினர் நிறுவிய இந்த அநாதை இல்லம் மிக எளிய, குறைந்தபயன் உள்ள தொடக்க நிலைக் கல்வியைப் புகட்டியது.

 

போர்த்துக்கேய கல்விமுறையின் தாக்கம்

இப்போது நாம் போர்த்துக்கேயக் கல்வி முறையின் தாக்கத்தைப் பரிசீலிப்போம். முதன்முதல் மேற்கத்திய கல்வியை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள் போர்த்துக்கேயரே ஆவர். அவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரும்பாலும் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறத்திலும் ஒருமுனைப்பட்டு நிகழ்ந்தன. அவர்களின் பங்குப் பாடசாலைகள், கல்லூரிகள் என்னும் இரண்டிலுமே கல்வி பயின்ற மாணவர் தொகை மிகக்குறைவாகும்.

இவர்களின் காலத்திற் கூட சமூகத்தின் உபர்மட்டத்தினர்க்கு மட்டுமே கல்வி வாய்ப்பு எட்டியது. தொடக்க நிலைக்கலைத்திட்டம் மிகக் குறுகியதாகவும் கத்தோவிக்கச் சார்புடையதாகவும் விளங்கியது. அரச ஆதரவு குன்றிய காரணத்தினால் அதுவரை பயனுள்ள கல்விச் சேவை ஆற்றிய கோயிற் பாடசாலைகள் வீழ்ச்சியுற்றன. எனவே போர்த்துக்கேயர் தங்கள் சமயத்தையும் மேனாட்டுப் பண்பாட்டையும் இலங்கைச் சமூகத்தின் மேல் வர்க்கத்தினர் இடையே பரப்பினர் முழு நோக்கில் கூறுவதாயின் போர்த்துக்கேயர் இலங்கையை விட்டுச் சென்றபோது காணப்பட்ட கல்வி முறையின் நிலை அவர்கள் இலங்கைக்கு வந்த போது நிலவிய கல்வி நிலையை விட வறியது என்றே சொல்ல வேண்டும்.

 

இலங்கையில் டச்சுக் கல்வி முறைமை (1658 – 1796) டச்சுக் கல்வி முறையின் பிரதான இயல்புகள்.

டச்சுக்காரர் ஆட்சிக்காலம் போர்த்துக்கேயர் காலத்தை விட அமைதியானது என்பது உங்கள் நினைவுக்கு வரலாம். எனினும், கல்வியைப் பொறுத்த வரையில் அவர்களின் பிரதான குறிக்கோள்களுக்கும் போர்த்துக்கேயரின் குறிக்கோள்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருக்கவில்லை, அவர்களின் பிரதான குறிக்கோள் கல்வி மூலம் சமயத்தை (டச்சு சீர்திருத்தச் சபை) பரப்புதல் ஆகும்.

அவர்களின் கல்வித்துறை அணுகுமுறை நல்ல அமைப்புக் கொண்டது; ஒழுங்கானது. அவர்கள் பாடசாலைகளில் கற்பிக்க சமயப் போதகர்கள் அல்லாத ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர் ஒல்லாந்தில் இருந்து தமது தேவைக்குரிய ஆளணியைக் கொண்டு வர இயலாமையால் தங்கள் சேவைகளின் சிறு பதவிகட்கு உரிய ஆளணியினர்க்கு இங்கு பயிற்சி அளித்தனர். பின்னர் அளித்தனர். மதபோதகர்களாகப் பணிபுரியவும் உள்நாட்டு மக்களுக்கு அவர்கள் பயிற்சி

கல்வி கற்றல் கட்டாயம் ஆயிற்று. டச்சு சீர்திருத்த சபைக்குச் சார்பான மதமாற்றத்தை உறுதிப்படுத்தச் சட்டத்தின் மூலம் இலவசக் கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. பதினைந்து வயது வரை கல்வி கற்றல் கட்டாயமாக்கப்பட்டது. பதினைந்து வயதான நிலையில் பள்ளித்தேர்வின் பின்னர் லாஜர்டீன் என்னும் மாணவர் விடுகைப் பத்திரம் வழங்கப்பட்டது.

பதினைந்து வயதின் பின்னர் 17 வயதில் நியவ் லாஜர்டீன் என்னும் புது விடுகைப்பத்திரம் பெறும் வரை மாணவர் ஒருவர் இரு வருட காலம் பகுதி நேர அடிப்படையில் பள்ளிக்குச் செல்லும் நிலை நீடித்தது. மேலும் 19வயதில் ஓட் லாஜர்டீன் என்னும் பூரண விடுகைப் பத்திரம் பெறும் வரை இன்னும் இரு வருட காலம் ஒரு மாணவர் பள்ளிக்குத் தொடர்ந்து செல்லும் நிலைமை நிலவியது.

டச்சுக்காரர்களே கல்வியளித்தலை அரசின் பொறுப்பாக முதலில் ஏற்றுக் கொண்டவர்கள் ஆவர். கல்விக்குரிய நிதி வழங்கும் பொறுப்பையும் அரசே ஏற்றுக் கொண்டது. அரசு கல்விக்கென தனி முகவர் நிலையமொன்றை நிறுவிக்கொண்டது. “பாடசாலைக்கல்வி ஆணைக்குழு” என்னும் அம் முகவர் நிலையம் ஆளுநருக்கு நேர்ப்பொறுப்புடையதாக விளங்கிற்று.

பின்வருவன இப் பாடசாலைக்கல்வி ஆணைக்குழுவின் கடமைகளாகும்.

ஆசிரியர் நியமனமும் கட்டுப்பாடும்.

பாடசாலைப்பரிசோதனை-இதனைப் பரிசோதகரான மதகுரு ஒருவர் ஒழுங்காகவும் சீராகவும் செய்தார். குறிக்கப்பட்ட பாடசாலை வருடத் தொகையைப் பூர்த்தி செய்த பிள்ளைகளுக்கு லாஜர்மன் என்னும் விடுகைப்பத்திரம் வழங்கல்,

ஞானஸ்நானம் அதாவது கிறிஸ்தவ நாமகரணவைபவம் பெற விரும்பும் பெற்றோரைப் பரீட்சித்தல்

சமய ஆராதனை நிகழ்த்தல், திருமணப்பதிவு நடவடிக்கைகள் பற்றிய பூரண பரிசீலனை செய்தல்.

டச்சு ஆட்சியின் கீழ் பள்ளி ஒழுங்கமைப்பு பங்குப் பாடசாலைகள்

டச்சுக்காரரின் ஆள்புலப்பரப்பில் இடம்பெறும் ஒவ்வொரு மாகாணமும் அல்லது பிரதேசமும் கோட்டங்களாகவும், கோட்டங்கள் பங்குகள் அல்லது சிற்றூர்கள் ஆகவும் பிரிக்கப்பட்டன. பங்குப் பாடசாலைகள் பங்கு தோறும் அல்லது சிற்றூர் தோறும் தொடங்கப்பட்டன. எனவே டச்சுக்கார் கால நிலப்பகுதிகளில் பாடசாலையே இல்லாத கிராமமோ குக்கிராமமோ இருக்கவில்லை. பங்குப் பாடசாலையின் கலைத்திட்டத்தில் வாசிப்பு, எழுத்து, கிறிஸ்தவக் கோட்பாடுகள் என்னும் பாடங்கள் இடம் பெற்றன.

டச்சுக்காரர் காலத்தில் இருவகைப் பாடசாலைகள் இருந்தன. ஒருவகை: உள்ளூர் மக்களுக்கு உள்ளூர் மொழிகளில் கல்வியூட்டின. மற்றையவகை டச்சுக்காரர் பிள்ளைகட்காக டச்சுமொழி மூலம் நகரங்களிற் பணிபுரிந்தன.

தலைமை ஆசிரியர் பாடசாலைத் தோம்பு என்னும் பதிவேட்டைப் பேணல், சட்ட பூர்வ ஆவணங்களிற் கையொப்பமிடல், ஞானஸ்நானம் பெற விரும்புவோரை ஆயத்தப்படுத்தல், மதகுரு வராத வேளைகளிற் சமய ஆராதனை நிகழ்த்தல் என்னும் கடமைகளை ஆற்றினார். அவர் சமூகத்தின் மேல் மட்டத்தினராகவும் குருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்றவராகவும் விளங்கினார். தமக்குரிய கோலவுடை தரித்த தலைமை ஆசிரியர் சிற்றூரின் சமூகத் தலைவராக மதிக்கப்பட்டார்.

குருத்துவக் கல்லூரிகள்

டச்சுக்காரர் குருத்துவக்கல்லூரி என்னும் உயர் கல்வி நிறுவனங்களை யாழ்ப்பாணத்திலும் (16966) கொழும்பிலும் (1696) நிறுவினார்கள்.

கொழும்பில் இருந்த குருத்துவக் கல்லூரியில் தொடக்கநிலைப்பிரிவு, இடைநிலைப்பிரிவு, உயர்நிலைப்பிரிவு என்னும் முப்பிரிவுகள் அமைந்திருந்தன. இங்குள்ள இடைநிலை, உயர்நிலைப் பிரிவுகளில் டச்சு மொழியே பயிற்று மொழியாக விளங்கிற்று. மிகச் சிறந்த மாணவர்கள் மேலும் கல்வி பெற லெய்டன் செல்லப் புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. இறையியற் கல்வியில் நாட்டமுள்ள மாணவர்களே உயர் கல்வி பெறத் தெரிவு செய்யப்பட்டனர்.

நியமப்பாடசாலை

ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க “நியமப் பாடசாலை” என்னும் கல்வி நிலையம் ஒன்று நிறுவப்பட்டது. இது குருத்துவக் கல்லூரியோடு இணைக்கப்பட்டது.

டச்சுக்கல்வி முறைமையின் முக்கியத்துவம்

டச்சுக்காரர் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கல்வி முறையை இப்போது மீண்டும் ஒரு முறை நோக்குவோம். இந் நாட்டின் கல்வித் துறையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கக் கூடிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் சிலவற்றை உங்களால் கண்டு கொள்ள முடிகின்றதா?

கட்டாயக் கல்வியை அறிமுகஞ் செய்தலும் 19 வயது வரை எல்லாப் பிள்ளைகளுக்கும் கிரமமாகக் கல்வியூட்டும் முறையை நிறுவுதலும் டச்சுக்காரர் மேற்கொண்ட ஒரு பிரதான நடவடிக்கையாகும். பங்குப் பாடசாலைகளிலே உள்நாட்டு மொழிகள் பயன்படுத்தப்பட்டமையால் பெருந்தொகையானோர் கல்வி பயிலும் வாய்ப்புப் பெற்றனர். மேலும் அவர்களின் பாடசாலை முறைமை மிக நன்றாக ஒழுங்காக அமைக்கப்பட்டது. அரசினால் மேற்பார்வை செய்யப்பட்டது.

இப்பாடசாலை முறைமை சிறந்த தேர்ச்சியுள்ள மாணவர்கள் கல்வி ஏணியில் மேலே ஏறிச் சென்று உயர் கல்வியும் ஆசிரியர் பயிற்சியும் பெறவும் அதிருஷ்டசாலிகளான சிலர் கடல் கடந்து சென்று உயர் கல்வி பயிலும் பேற்றினை அடையவும் வழி வகுத்தது. இதே வேளையில், டச்சுக்காரர் வழங்கிய தொடக்க நிலைக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் போர்த்துக்கேயர் வழங்கிய கல்வியைப் போல மிக எளிதானதாகவும் சமயச்சார்பானதாகவும் நீடித்தது. மேலும் மதமாற்றமே இவ்விருசாராரும் மேற்கொண்ட கல்வி விரிவாக்கத்தின் உந்து சக்தியாக விளங்கியது.

 

Leave a Comment