பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடக பணி

பேராசிரியர் கணபதிபிள்ளை
பேராசிரியர் கணபதிபிள்ளை

அறிமுகம்

ஈழத்து தமிழ் வரலாறானது பல்வேறு வளர்ச்சி கட்டங்களினூடாக வெவ்வேறு விதமான ஆளுமைகளுடன் நகரந்து, இன்று பரிணாம வளர்ச்சி அடைந்து, முக்கிய பிரிவாக உள்ளது. இத்தகைய ஈழத்து அரங்க வரலாற்றில் வளர்ச்சிக்கு அரங்கவியலாளர்களினதும் ஆளமையாளர்களினது உயர்ந்த செயற்பாடுகள் காரணம் என்று கூறலாம். இதன் அடிப்படையில் உத்வேக தன்மையுடையவராகவும் ஈழத்து அரங்கிற்கு ஒரு திருப்புமுனை ஏற்படுத்தியவராகவும் பேராசிரியர் க.கணபதிபிள்ளை விளங்குகிறார்.

கந்தசாமி கணபதிபிள்ளை அவர்கள் யாழ்பாண மாவட்டம் பருத்திதுறை புலோலி கிழக்கில் பிறந்தார்.  தமிழ் கூறும் நல்லுலகில் போற்றப்படும் பேராசிரியர்களுள் க.கணபதிப்பிள்ளை முதன்மையானவர். இவர் வடமராட்சியில் வளர்ந்து வந்த காரணத்தினால் ஒரு புலமைத்துவ மரபு இவருடைய கல்வி வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. ஏனெனில் அக்கால கட்டத்தில் தமிழ்மொழியிலும் வடமொழியிலும் புலமை மிக்க குழுவினர் வடமராட்சியில் சிறப்பற்று விளங்கினர். முத்துக்குமாரசுவாமி குருக்கள் போன்றோர் இக்குழாத்தினைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இருமொழிக் கல்வியை வளப்படுத்தினர்.

ஆரம்பக்கல்வியை வேலாயுதம் மகா வித்தியாலயம், ஹார்ட்லி கல்லூரி ஆகியவற்றில் கற்றார். பண்டிதர் பிரம்ம சிறி முத்துக்குமாரசுவாமி குருக்களிடம் தமிழையும், இசையையும் கற்றுக்கொண்டார். இவர் இளமையிலையே தமிழ், வடமொழி ஆங்கிலம் ஆகிய மொழிகளை கற்று, கணபதிப்பிள்ளை 1903ம் ஆண்டிலே இலங்கைப்பல்கலைகழகத்தில் கலைமாணிப் பட்டத்தினை முதற்பிரிவில் பெற்றார். இங்கு தமிழ், வடமொழி, பாளி மொழி ஆகியனவற்றை கற்றார். பின்னர், அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் விபுலாநந்த அடிகளாரிடமும் சோழவந்தான் கந்தசாமி ஆகியோரிடத்திலும் தமிழை நன்கு கற்று, வித்துவான் பட்டத்தினையும் பெற்றார். பின்னர் இலண்டன் பல்கலைகழத்தில் நவீன மொழியியல் அறிவினைப் பெற்று பேராசிரியர் ரேணர் அவர்களின் வழிகாட்டலிலே இடைக்கால தமிழ் கல்வெட்டுக்களின் மொழிநடை பற்றி ஆராய்ந்து கலாநிதிப் பட்டம் பெற்றார். 1936 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இவரது பெரு முயற்சியால் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்புக் கலைத் தேர்வு ஏற்படுத்தப்பட்டமையும் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைத்தேர்வு தொடங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். 1947ல் தமிழப் பேராசிரியராயிருந்த அருட்திரு விபுலாநந்த அடிகள் நோய்வாய்ப்பட்டு இவ்வலகை நீக்க கலாநிதி கணபதிபிள்ளை தமிழ்த்துறையிலே பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். இவர் நாடகப் பணி, கவிதை, சிறுகதை ஆக்கமுயற்சிகள், இலக்கிய, வரலாற்று, கல்வெட்டு ஆய்வுகள் எனப்பல துறைகள் சார்ந்து பணியாற்றினார்.

பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடக பணி

ஈழத்து நாடக பணியில் பேராசிரியரின் பங்கு அலப்பரியதாகும். இவரது நாடகப்பணியை பற்றி கலாநிதி கா.சிவத்தம்பி தான் எழுதிய ஈழத்து வாழ்வும் வளமும் எனும் நூலில் பினவருமாறு குறிப்பிடுகிறார்.

“படைப்புத்துறையில் நாடகமே இவரது பிரதான ஆக்கத்துறை எனலாம். இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் இவரது படைப்புக்கள் ஒரு முக்கிய மைல் கல் எனலாம். நானாடகம் (1940), இரு நாடகம் (1952), எனும் நாடகத் தொகுதிகளும், சங்கிலி (1956) எனும் வரலாற்று நாடகமும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. பிரசுரிக்கப்படாத சுந்தரம் எங்கே (1955), துரோகிகள் என்பன மிக முக்கயமானவையாகும்.”

இக்கூற்றினூடாக பேராசிரியரின் நாடகப் பங்களிப்பினை நாம் அறியலாம். மேலும் பேராசிரியரின் ஆக்கங்களை எல்லாம் நிரைப்படுத்திய வித்துவான் க.சொக்கலிங்கம் அவர்கள் பைந்தமிழ் வளர்த்த பதின்மர் என்னும் நூலிலே இறுதியாக

“இவற்றை எல்லாம் ஆக்கியிருப்பினும் பேராசிரியர் கணபதிபிள்ளை அவர்களின் பெயர், அவர் ஒரு சிறந்த நாடக ஆசிரியர் என்னும்; வகையிலே தான் தமிழக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பது எனது கருத்தாகும்.   என சுட்டிக்காட்டுகிறார். சொக்கன் கூறிய இக்கூற்றுக்கள் மெய்மை அடைந்துள்ளதை நாம் அவதானிக்கலாம்.

ஈழத்து நாடக வரலாற்றில் தமிழ்ப் பேராசிரியர் எழுதிய நாடக நூல்கள் நான்கு வெளிவந்துள்ளன. அவை: நானாடகம், இருநாடகம், சங்கிலி, மாணிக்கமாலை ஆகியனவாகும். இவர் விரிவுரையாளராக நியமனம் பெற்ற 1936 லிருந்தே பல்கலைகழக ஆண்டு விழா மேடை ஏற்றுவதற்காக நாடகம் ஏழுதத் தொடங்கினார். பேராசிரியர் யாழ்பாணத்தில் சமூக நிலையிலே உயர்ந்தோர், தாழ்ந்தோர் நடுத்தர வகுப்பினர் என்ற பல பிரிவினர்களுடன் பழக,p அவர்களின் மனபோக்குகளையும் சிந்தனைகளையும் எல்லாம் நன்கு அறிந்திருந்தார். இந்த அனுபவ அறிவினால் தமக்கு எனத் தனிப்பாதை வகுத்து அப்பாதையில் உயரந்த நாடகங்களை ஆக்குதல் அவருக்கு எளிதாயிற்று.

அந்தவகையில் அவர் இயற்றிய நானடாகம் மற்றும் இருநாடகம் ஆகிய நூல்கள் இரண்டும் ஈழத்துத் தமிழர் சமுதாய நிலையைச் சித்தரிக்கும் ஆறு சமூக நாடகங்களை கொண்ட தொகுதியாகும். சங்கிலி என்ற நூல்  ஒரு வரலாற்று நாடகமாகும். ஈழத்து யாழ்பாண அரசை கண்ட செகராசசேகரன் என்னும் பெயர் கொண்ட சங்கிலி (க.பி 1519 – 1565) மன்னனே இந்த நாடகத்தின் கதாநாயகன் ஆவான். மாணிக்கமாலை என்பது ஒரு மொழிபெயர்ப்பு நாடகமாகும். இது கன்னோசி நாட்டை ஆண்ட ஹர்;~வர்த்தனன்  என்னும் புலமை மிகுந்த மன்னரால் வடமொழியில் எழுதப்பட்ட ரத்னாவளி என்னும் நாடக நூலைப் பின்பற்றியதாகும். எனவே பேராசிரியர் சமூக நாடகம், வரலாற்று நாடகம், மொழிபெயர்ப்பு நாடகம்  என நாடகத் துறையில் மூவகைப்பட்ட பகுதிகளுக்கும் தொண்டாற்றியுள்ளார்.

இவர் இயற்றிய நாடகங்கள் உடையார் மிடுக்கு, கண்ணன் கூத்து(1936), நாட்டவன் நகர வாழ்க்கை (1941), பொருளோ பொருள் (1950) முருகன் திருகுதாளம் (1951) சங்கிலி போன்ற நாடகங்கள்  கொழும்பு வளாக மேடைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பல்கலைகழக மாணவர்களால் நடிக்கப்பட்டு மேடையேற்றபட்டவையாகும்.

யாழ்பாணத்தின் நிலபிரபத்துவ கலாசாரத்தினதும் ஏகாத்திபத்தியவாதிகளினதும் வாரிசுகளாக செயற்படும் ஆங்கிலமோக ஆதிக்கத்தையும், முக்கியத்துவத்தையும் முறியடிக்க நாடகக்கலையைப் பயன்படுத்தியவர் பேராசிரியர் கணபதிபிள்ளையவர்கள். இவருடைய நாடகங்களை ஆராய்வதன் மூலம், அவற்றில் காணப்படும் தனிப்பண்புகள் ஆசிரியருடைய நாடகத் திறமை ஆகியனவற்றையும் அறிந்துக்கொள்ளலாம்.

பொதுவாக இலக்கியங்கள் படைக்கப்படும் போது எழுத்து மொழி அல்லது பேச்சு மொழி கையாளப்பட்டு படைக்கப்படுவது வழக்கம். ஆரம்ப கால இலக்கியங்கள்,  நாடகங்கள் அனைத்துமே எழுத்து வழக்கினை அடிப்படையாக கொண்டே படைக்கப்பட்டது. ஆனால் தமிழைக் கற்ற மேனாட்டர் எழுத்து மொழியினை மேடைப்பேச்சு மொழியென்றும் செயற்கைத் தன்மை வாய்ந்ததென்றுங் குறிப்பிட்டுள்ளார். இவ்வுண்மையை மொழியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் கணபதிப்பிள்ளை உணர்ந்து கொண்டதன் விளைவாக இவர் தன்னுடைய நாடகங்களில் அதிகமாக பேச்சு வழக்கினையே கையாண்டார். இது பற்றிப் பேராசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“தமிழை இயல், இசை, நாடகம் என வகுத்த முன்னோர் இயற்றமிழ் வேறு நாடகத் தமிழ் வேறு என்பதை வறுபுறுத்தற் பொருட்டன்றே, இதனை அறியாது இயற்றமிழில் நாடகமெழுதப் புகுந்தாரத பேதைமை என்னே! இக்குற்றத்தை திருத்துவான் நாடகத் தமிழில் எழுதினாலும் இவற்றை அன்றியும் நாடகம் என்பது உலக இயல்பை, உள்ளது உள்ளபடியே காட்டுவது ஆகவே வீட்டிலும் வீதியிலும் பேசுவது அரங்கிலும் ஆடுவார் பேசல் வேண்டும். எனும் இவ்வுரைகள் பேராசிரியரது எண்ணத்தை எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

மேலும் பொருளோ பொருள் நாடகத்தில் வரும் சிவில் சேவன்ற் வடிவேலு பேசுகின்ற மொழியும் முருகன் திருகுதாளத் தில் வரும் பேராசிரியர் சோமசுந்தரம் பேசும் மொழியும் அவர்கள் வீட்டிலே அன்றாடம் பேசும் மொழியேயாகும். படிப்பு, அந்தஸ்து, பணம் என்ற காரணத்தினால் வீட்டிலே பேசுகின்ற தமிழ்மொழி மாறிவிடாதல்லவா? இதையே பேராசிரியர் தன்னுடைய நாடகப் பாத்திரங்கள் மூலமாகப் புலப்படுத்தி இருப்பதை காணலாம்.

இவர் அதுவரைக் காலமும் இருந்து வந்த மரபு வழியான புராண, இதிகாச, நாடக வகைகளை கைவிட்டு புதிய சமூக நாடகங்கள் தோற்றம் பெற வேண்டிய சூழ்நிலையில், இந்தத் தேவையை அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் ஈழத்தில் அரம்பித்து வைத்தவர் என்கின்ற பெருமை பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களுடையதாகும். யாழ்பாண வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் நாடகங்கள் இவருடையவை என்றும்; யாழ்பாண பேச்சுவழக்கை மிக அற்புதமாக பதிவு செய்பவை இவருடைய நாடக உரையாடல்கள் என்றுக் கூறினாலும,; யாழ்பாணத்தின் சமூக விடயங்கள் பற்றிய கண்டன விமர்சனங்களாகவே இவருடைய நாடகங்கள் அமைந்தன எனலாம்.

பேராசிரியரின் நாடகங்களில் குறிப்பிடக்கூடிய ஒரு நாடகம் எனின் அது உடையார் மிடுக்கை (1953) குறிப்பிடலாம். இது கண்டி திருத்தவக் கல்லூரியில் மேடையேறியது. இந்த முதல் மேடை ஏற்றத்தின் போது அமரர்களான பேராசிரியர் கா. சிவத்தம்பி உடையாராகவும், பேராசிரியர் கைலாசபதி உடையாரின் மகனாகவும், திருப்புகழ் பாடுபவராக தினகரன் பிரதம ஆசிரியரும் வழக்கறிஞருமான ஆர்.சிவகுருநாதனும் நடித்தனர் என்பது குறிப்பிட்டுக்கூறக் கூடிய ஒரு விடயமாகும்.

உடையார் மிடுக்கு நாடகத்தினை பொருத்தவரை யாழ்பாணத்தில் அந்த நாட்களில் உடையார் பதவியினால் கிடைத்த அந்தஸ்தும் அதன் மூலம் உடையார்கள் மற்றவர்களை மதிக்காமல் தலைக்கனம் கொண்டு நடந்து கொண்டதையும,;  தொழிலாளர்களை அவமதித்து அவர்களை ஒடுக்கியும், அடக்கி வைப்பதையும் போன்ற சமூக அனைத்து அங்கங்களையும் நடை உடை பாவனைகளையும் நாடக பாத்திரங்கள் உரையாடல்கள் மூலம் வெளிக்கொண்டு வந்த நாடகம் இது. கல்வி பீடங்களை கடந்தும் சமூகத்திலும் இந்த நாடகம் பெரும் வரவேற்புடன் அரங்கேறியது.

இவருடைய நாடகங்கள,; அதிகமாக யாழ்பாணத்து வாழ்வையும், அதே வேளை யாழ்பாண உயர்மட்;ட வாழ்வின் அடாவடித் தனத்தையும் சித்தரித்து காட்டின.

யாழ்பாணத்தில் காணப்பட்ட குடும்பங்களின் மேனிலை வாதம்,  நீ பெரிதா? நான் பெரிதா? எனும் குடும்பப் போட்டிகள், சீதனம் மற்றும் ஆங்கில மோஸ்தர் வாழ்க்கை முறை, கொஞ்சம் அங்கிலம் கற்றதும் தமிழ் தெரியாதது போன்ற நடிப்பும் போலியான வாழ்க்கையும் இவ்வாறான போலி வாழ்க்கை முறையை கிண்டல் நிறைந்த கண்டனங்களாகவே இவருடைய சமூக நாடகங்கள் அமைந்திருந்தன. இவ்வாறு சமூகத்தில் மேல் நிலையில் உள்ளவர்களை விமர்சனங்களை செய்தமையால் இவர் அதற்காக பல்வேறு இடங்களிலும் புறக்கணிக்கப்பட்டார் என பல்வேறு எழுத்தாளர்கள் குரல் எழுப்பி இருந்தனர்.

எடுத்துக்காட்டாக 1936ல் இருந்து பல்கலைகழகக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவாரக இருந்த இவர் 1942 ல் பல்கலைக்கழக கல்லூரி தலைவராக தெரிவுசெய்யப்படவில்லை. மாறாக சுவாமி விபுலாநந்தருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் தமிழறிஞர் க.சொக்கலிங்கம் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

 1946ல் யாழ்பாணத்தின் நடைபெற்ற ஈழத்தமிழ்ப் புலவர் மன்ற தமிழ் விழாவுக்கு பேராசிரியர் கணபதிபிள்ளைக்கு அழைப்பிதல் கூட அனுப்பாமல் புறக்கணித்திருக்கிறது என்றெழுதிருக்கின்றார்.   (மாருதம் இதழ் 4 ஐப்பசி 2003)

பேராசிரியர் நாடகங்களின் ஒன்றான துரோகிகள் 1956ல் மேடையேறிய நாடகம். 1956ன் இனச்சங்காரத்தின் வரலாற்றை ஒரு தனித்துவ முத்திரையுடன் கொண்டு வந்த நாடகம் எனலாம். நல் மனத்துடன் வாழ விரும்பும் ஒரு சமூகத்தின் உண்மையான துரோகிகள் யார் என்பதற்கான விடையுடன் ஒரு தமிழர் எழுச்சிக்கு வித்திட்ட நாடகம் இது என அன்றைய ஏடுகள் விமர்சனம் கூறின. அத்துடன் தமிழினத்தின் மத்தியில் சுயநல நாட்டம் கொண்ட அரசியல் துரோகிகளினாலே தமிழ் மக்களுக்கு பரிதாபகரமான நிலைமை ஏற்படுகிறது என்று “காலத்தக்கு காலம் எமக்குத் தலைவர்களாய் வந்தோர் தங்கள் நன்மைகளுக்காக  எம்மக்களை மாற்றானுக்கு விற்று இரண்டகம் செய்துவிட்டார்கள் என்றும் எதற்கும் நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் தனது நாடக உரையாடல்களில் மூலம் பெரும விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அத்துடன்  வரவேற்பு பெற்ற நாடகமாகவும் இது திகழ்ந்தது. தவறான எண்ணம் ஒரு கற்பனையான நாட்டில் நடப்பதாக காட்டப்பட்டாலும், சுதந்திரத்திற்குப் பிறகான தமிழ் மக்களின் பிரச்சினைகளே படிப்படியாக காட்டப்படுகின்றன. சங்கிலி நாடகத்திலே சங்கிலியானை ஓர் இணையில்லாத மன்னனாக படைக்க முற்பட்டுள்ளார்.

நாடிரக என்ற நாடக  இலக்கணத்தக்கமைந்ததாகிய இரத்னாவளி நாடகத்தினை மாணிக்கமாலை எனத் தமிழிலே எழுதியதன் மூலம் அவரின் வடமொழி செல்வாக்கினையும் நாடகப் பண்பு குறையாமல் எழுதியதிலிருந்து அவருக்கு நாடகத்தில் உள்ள ஈடுபாட்டையும் அறியலாம்.

பொதுவாக இவருடைய நாடகங்ள் பாரம்பரிய முறையில் இருந்து விலகி சமூகத்திற்கு எற்ற வகையிலான நாடகங்களாக படைக்கப்பட்டமை

சமகால வாழ்வியல் அம்சங்களில் இருந்து கருவை தெரிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தினார்.

எடுத்துகாட்டு – சீதனப்பிரச்சினை, சமூக ஏற்றத்தாழ்வு

சாதாரண மக்களையும் பாத்திரங்களாக சித்திரித்தார்

எடுத்தக்காட்டு – நாகரீகம் மோகம் கொண்ட பெண்

மிடுக்கு நிறைந்த உடையார்

பழம்பெருமை பேசும் பண்டிதர்

யதார்த்தம் நிறைந்த நாடகங்களை உருவாக்கினார்

இயல்பான சொற்களையும் சொற்றொடர்களையும் தனது நாடகத்தில் கையாண்டார்

உதாரணம் – “ஞாயமாக் கிடக்கு” நெருப்பில்லாமல் புகையுமா

மக்கள் மத்தியில் காணப்பட்ட அங்கில வார்த்தைகளை தமிழுக்கு ஏற்ற வகையில் உரையாடலில் பயன்படுத்தினார்

பஸ், கவுன்சில்

போன்ற அம்சங்கள் பிரதானமாக காணப்பட்டது

முடிவாக ஈழத்து நாடக வரலாற்றில் பாரம்பரிய முறையை கடந்த ஒரு சமுதாய நோக்கமிக்க நவீன முறைகளை கையாண்டு பேச்சு வழக்கினை முதன்முதலில் நாடகத்தினுள் புகுத்தி நாடகங்களை அரங்கேற்றிய பெருமை பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையே சாரும். எவ்வளவு தடைகள் வந்தபோதிலும் சமூக பிரச்சிகைளை பேசி, நாடக அரங்கின் ஊடாக மக்களை விழிப்புணர்வூட்டிய பேராசிரியர் அவர்களுக்கு ஈழத்து நாடக வரலாற்றில் தனியிடம் காணப்படுகின்றமை இவரின் நாடக துறையின் பங்கினை நாம் அறிந்துகொள்ளலாம்.

Leave a Comment