வழங்கல் வகை :
குறுவிடை வகை, நிரப்பல் வகை தெரிதல் வகை: பலவுள் தெரிவு வகை, பொருத்தல் வகை, இரண்டுள் தெரிவு வகை
இவற்றுள் பலவுள் தெரிவு வகையின் பிரயோகமானது எல்லாக் கல்வி மட்டங்களிலும் காணப்படுகின்றது. ஏனைய வகைகள் ஆரம்ப, கனிட்ட, இடைநிலை வகுப்புக்களில் அதிகளவில் இடம் பெறுகின்றன. எனவே இச்சோதனை வகைகளைப் பற்றிக் குறிப்பிடு கையில், பலவுள் தெரிவு வகை இங்கு கூடுதலான அளவு விளக்கத் தைப் பெறுகின்றது.
வழங்கல் வகை வினாக்கள்:
கட்டுரை வகை வினாக்களின் ஒரு வகையாகக் குறுவிடை வகை வினாக்களைக் கருத முடியுமெனவும் இவற்றுக்குப் புள்ளி வழங்குதலில் உயர் புறவயத் தன்மையை ஏற்படுத்த முடியுமெனவும் முன்னியலிற் கண்டோம். ஒரு சொல், ஓர் எண் அல்லது ஒரு கூற்றி னால் மிகச் சுருக்கமாக விடை அளிக்கக்கூடிய வகையில் சோதனை உருப்படிகள் அமைக்கப்படுமாயின் புள்ளி வழங்கல் முழுக்க முழுக் கப் புறவயமாக அமையும். இவ்வகைச் சோதனைகளில் நேரடியான வினா அல்லது முற்றுப் பெறாத கூற்றுக்குரிய இடத்தில் மாணவன் விடையளிக்கின்றான். குறுவிடை வகை, நிரப்பல் வகை ஆகிய இரண்டுக்குமிடையே மிகச் சிறிய வேறுபாடே உண்டு. குறுவிடை வகையை நிரப்பல் வகையாகவும், நிரப்பல் வகையைக் குறுவிடை வகையாகவும் இலகுவில் மாற்றியமைக்க முடியும். பாட அடைவின் மதிப்பீட்டின் போது சில சமயங்களில், இவ்விரு வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், ஆரம்பப் பள்ளி மாணவருக்கு வழங்குகையில், இவ்வகைகளைத் தனித்தனியாக வழங்குதல் சிறந்த பயனை அளிக்கும். வழங்கல் வகை உருப்படிகளுக்குப் புள்ளி வழங் குகையில் சில சமயங்களில், ஓரளவு அகவயத் தன்மையும் சேர்ந்து விடுகின்றது என்னும் காரணத்தினால் சில அளவீட்டியலாளர்கள் இவ்வகையைப் புறவயச் சோதனைகளாகக் கருதுவதில்லை.
ஊகத்தின் மூலம் சரியான விடையை அளிக்கும் வாய்ப்பு அரி தாக்கப்பட்டிருத்தல் இவ்வகையின் ஒரு சிறப்பம்சமாகும். இதன் காரணமாகத் தெரிதல் வகை வினாக்களை விட இவ்வகை வினாக் கள் கடினமானவையெனக் கருதுவோரும் உளர். உயர் உளத் தொழிற்பாடுகளை இவ்வகை வினாக்கள் மூலமாக மதிப்பிடுதல் இயலாதென்பது இங்குள்ள ஒரு பெருங் குறைபாடாகும். மதிப்பீட் டுத் தொழிற்பாட்டில் இவ்வகைச் சோதனைகளின் பிரயோகம் குன்றியிருப்பதற்கும் இக்குறைபாடே காரணமாகும். வழங்கல் வகைச் சோதனை உருப்படிகளை அமைத்தல்:
வழங்கல் வகை வினாக்களாவன உயர் புறவய மதிப்பீட்டுக்கு வழிகோலும் வகையிலும் அவற்றினைக் கூடுதலாகப் பயன்படுத்தும் ஆரம்ப, கனிட்ட, இடைநிலை வகுப்பு மாணவரின் தன்மைகளை முன்னிட்டும், இவ்வகைச் சோதனை உருப்படிகள் மிகக் கவனமாக ஆக்கப்படல் வேண்டும். ஒவ்வொரு வினாவும் ஒரேயொரு சரியான விடையை அல்லது விடைத்தொகுதியைக் கொண்டதாகவும் எதிர் பார்க்கப்படும் விடையானது தெளிவாகவும் குறுகியதாகவும் இருக் கும் வகையிலும் சோதனை உருப்படிகள் ஆக்கப்படல் வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் புள்ளி வழங்கலில் புறவயத் தன்மையை அதிகரிக்க முடியும். வினாக்களை அமைக்கும்போது மாணவரிட மிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகின்றது என்பதனைச் சுற்றி வளைத் துக் கூறாமல் நேரடியாக வினாவில் தெரிவிக்க வேண்டும். வினா நேரடியாக அமையாதவிடத்து, வினா பற்றிய விளக்கம் வேறுபட்டுக் காணப்படவுங் கூடும். இது சோதனையின் தகுதியைப் பாதிக்கும். பாடநூல்கள், பாடக்குறிப்புக்கள் என்பவற்றிலுள்ள கூற்றுக்கள், வசனங்கள் ஆகியவற்றை அப்படியே வினாவில் புகுத்தும் வழக்கம் சில தேர்வாளர்களிடையே காணப்படுகின்றது. இது தவிர்க்கப்பட வேண்டியது. ஏனெனில், மாணவருக்குப் பரிச்சயமான கூற்றுக்கள் தென்படும்போது போதியளவு விளக்கமின்றியே வினாவுக்குச் சரி யான விடைகளை அளிக்கும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. மாணவரின் மொழியாற்றலானது, குறிப்பாக ஆரம்ப வகுப்புக்களில், பலதரப் பட்டுக் காணப்படும். மொழியாற்றலைச் சோதிக்கும் நிலைமை தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் சோதிக்கப்படும் பாட விடயத் திலுள்ள தனது தேர்ச்சியைப் புலப்படுத்துவதற்கு அவனது மொழி யாற்றல் இடையூறாக இருக்கலாம். ஆயினும் இந்த இடையூறு வினா விற் காணப்படும் கடினமான பதங்கள், வசன அமைப்பு என்பவற்றி னால் ஏற்படுதல் முறையல்ல. எனவே மொழிப்பாடம் தவிர்ந்த ஏனைய பாடங்களில் மாணவனின் அடைவை அளவிடுதலில், வினாக்கள் மாணவனது மொழியாற்றலைச் சோதிப்பவையாக அமையக்கூடாது.
நிரப்பல்வகை வினாக்களில் மாணவர் நிரப்ப வேண்டிய வெற்றி டங்களை வினாவின் ஆரம்பத்தில் புகுத்தாது அவை வினாவின் பிற்பகுதியில் வருமாறு வினாக்களை அமைக்க வேண்டும். வெற்றி வினாவின் முற்பகுதியில் இடம்பெறல் காரணமாக வினா வின் கடினத்தன்மையிற் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுவதுண்டு. மேலும், ஒரு வினாவில் தேவைக்கதிகமான வெற்றிடங்களைப் புகுத்துதல் தவிர்க்கப்பட வேண்டியதாகும். நிரப்பப்பட வேண்டிய வெற்றிடங்களை அதிகரிக்கும்போது, வழங்கப்பட்ட கூற்றானது தொடர்பற்ற பல துண்டங்களாக மாற ஏதுவாகின்றது. இதன் விளை வாக, வினாவின் பிரதான கருத்தைக் கண்டுபிடிப்பதில் மாணவர் அநாவசியமாக இடர்படுவர்.
தெரிதல் வகை வினாக்கள்:
இங்கு, வினாவுடன் சேர்ந்து வழங்கப்படும் தகவல்களிலிருந்து சரியான விடைக்குரியனவற்றைத் தெரிவு செய்தல் மாணவரிட மிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. வழங்கல் வகையிலுள்ளதை விடக் கூடுதலான அளவுக்கு இங்கு மாணவரின் துலங்கல் கட்டுப்பாட்டுக் குட்படுவதாகக் கருதப்படுகின்றது. ஆயினும், உயர் உளத் தொழிற்பா டுகளின் அளவீட்டிலும் இவை பயன்படுத்தப்படக் கூடியன என்ப தால் இவ்வகையின் பயன்பாடு முன்னைய வகையிலும் பார்க்கக் கூடுதலாக உள்ளது. மேலும், இவ்வகையிலடங்கும் இரண்டுள் தெரிவுவகை, பொருத்தல் வகை, பலவுள் தெரிவுவகை ஆகிய மூன்று துணை வகைகளின் பல்வேறு மாற்று அமைப்புக்களும் சேர்மானங் களும் அடைவுச் சோதனைகளிற் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். ஒரு குறிப்பிட்ட துணை வகையிலுள்ள ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட வினாக்களோ சேர்ந்து, இன்னொரு துணை வகையினைச் சேர்ந்த ஒன்றாகவோ அல்லது பல வினாக்களாகவோ மாற்றமடையும் சாத்தியமும் இங்குண்டு உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு பாட அலகு சார்பாக ஐந்து வெவ்வேறு கூற்றுக்கள் வழங்கப்படுகின்றன எனக் கொள்வோம். அவற்றுள் மூன்று கூற்றுக்கள் சரியானவையெனவும் இரண்டு கூற்றுக்கள் பிழையானவையெனவும் கருதுக. இவற்றுள், சரியான கூற்றுக்கள் இரண்டும் பிழையான கூற்று ஒன்றும் ஒரு மாணவ னால் சரியாக இனங்காணப்படுகின்றன எனவும் கொள்வோம். ஒரு நிலைமையில் இவை ஐந்தும் சரி – பிழை வகையைச் சேர்ந்த ஐந்து வினாக்களாகக் கருதப்படலாம். இன்னொரு நிலைமையில், இவை ஐந்தையும் உள்ளடக்கிய ஒரு பலவுள் தெரிவுவகை வினாவாக நோக்க முடியும். சரி – பிழை வகையைச் சார்ந்த ஐந்து வினர்களாகக் கருதப்படும் சமயத்தில் குறிப்பிட்ட அம்மாணவனுக்கு மூன்று வினாக்களுக்குச் சரியான விடைக்குரிய புள்ளி கிடைக்கும். ஆனால், ஐந்து கூற்றுக்களும் வழங்கப்பட்டு அவற்றுள் சரியான கூற்றுக்களை இனங்காண வேண்டிய பலவுள் தெரிவு வகை வினாவாக இவை மாற்றியமைக்கப்படும் போது குறிப்பிட்ட மாணவனுக்குப் புள்ளி எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. இங்கு, பலவுள் தெரிவு வகையின் தத்துவமும் சரி- பிழை வகையின் தத்துவமும் இணைந்த சேர்மான மாக வினா அமைகின்றது. இதே போன்று பல்வேறு வகையான சேர்மானங்களில் வினாக்கள் அமையலாம்.
இரண்டுள் தெரிவு வகை வினாக்கள்:
இரண்டுள் தெரிவு வகை வினாக்களை அமைத்தல்:
இரண்டுள் தெரிவுவகை வினாக்களை அமைப்பது இலகுபோற் தோன்றிடினும், குறிப்பான சில நடைமுறைகளைப் பின்பற்றி இவை அமைக்கப்படாவிடின், பல குறைபாடுகளைப் பெற்றுவிட இடமுண்டு. எனவே, இவ்வகை வினாக்களை அமைக்கும் போது கருத்துக்கு எடுக்கப்பட வேண்டிய சில விடயங்களை இங்கு நோக்குவோம்.
நிச்சயமாகச் சரியானது அல்லது பிழையானது எனக் கருதப் படக்கூடிய கூற்றுக்களே சோதனை உருப்படிகளாகத் தெரிவு செய்யப்படும் தகுதியை உடையன. சில சமயங்களிற் சரியாகவும் சில சமயங்களிற் பிழையாகவும் காணப்படும் கூற்றுக்கள் தெரிவு செய்யப்படுமாயின் சரியான விடையாக எதனை ஏற்பது என்னும் பிரச்சினை எழுகின்றது. அத்துடன் சோதனை உருப்படி ஒவ்வொன் றும் குறிப்பிட்ட ஒரு மையக் கருத்தைக் கொண்டு அமைதல் விரும் பத்தக்கது. இதன் மூலம் வினாவையும் குறுகியதாக அமைக்க முடிகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட பிரதான கருத்துக்களைச் சோதிக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின் வேறு பொருத்தமான சோதனை வகையைத் தெரிவு செய்தலே சிறந்தது. சோதனைக்கெனத் தெரிவு செய்யப்பட்ட சரியான, பிழையான கூற்றுக்களை வினாத்தா ளில் ஒழுங்குபடுத்தும் போது அவற்றினைக் குறிப்பிட்ட ஒரு வரிசைக் கிரமத்தில் அமைத்தல் நல்லதல்ல. எழுமாற்றுமுறைமூலம் இந்த ஒழுங்குமுறை தீர்மானிக்கப்படலாம்.
பொருத்தல் வகை வினாக்கள்:
குறிப்பிட்ட ஒரு பொதுத் தொடர்பைக் கொண்டுள்ள இரு பட்டியல்கள் வழங்கப்படுகின்றன. ஒரு பட்டியலின் ஓர் உறுப்பானது மறு பட்டியலின் எந்த உறுப்புடன் இத்தொடர்பைக் கொண்டுள்ளது என்பதனை மாணவன் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே இவ்வகை வினாவின் அடிப்படைக் கோட்பாடாகும். பாடவிடயம், சோதிக்கப் படும் தேர்ச்சியின் மட்டம் என்பவற்றைப் பொறுத்து வேறுபட்ட பல அமைப்புக்களில் இவ்வகை வினாக்கள் காணப்படுகின்றன. இரு பட்டியல்களிலும் சமமான உறுப்புக்களைக் கொண்டோ அல்லது சமமற்ற உறுப்புக்களுடனே வினாக்கள் ஆக்கப்படலாம். குறிப்பிட்ட ஒரு சோதனை நேரத்தில் பல விபரங்கள் சோதிக்கப்படலாம் என்ப தால் வகுப்பறைக் கற்பித்தலின் நிறை குறைகளை அறிவதற்கு இவ்வகை வினாக்கள் மிக உதவியாக அமைகின்றன. உயர் உளத் தொழிற்பாடுகளை அளவிடுவதற்குப் பொருத்தமற்றது என்பதும் இவ்வகையில் சிறந்த வினாக்களை ஆக்குதல் கடினமான செயலென் பதும் இங்கு காணப்படும் குறைபாடுகளாகும்.’ பொருத்தல் வகை வினாக்களை அமைத்தல்:
இரு பட்டியல்களின் உறுப்புகளுக்கிடையே ஒரு பொதுத் தொடர்பு இருக்க வேண்டும் என்பதால் அத்தொடர்பு என்ன என் பதனை மாணவன் தெளிவாக விளங்கிக்கொள்ளுதல் வேண்டும். எனவே, என்ன அடிப்படையில் இரு தொகுதி உறுப்புக்களுக்கு மிடையில் இணைபு காணப்பட வேண்டுமென்பது வினாவில் இயன்றளவுக்குத் தெளிவாக்கப்படுதல் மிக அவசியமாகும். குறிப்பிட்ட ஒரு பட்டியலிலுள்ள எந்த ஓர் உறுப்புடனும் தொடர்பு கொண்டிராத சில உறுப்புக்களை மறுபட்டியல் உள்ளடக்குதலும் ஒரு பட்டியலிலுள்ள ஏதேனும் ஓர் உறுப்பானது மறு தொகுதியின் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புக்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் வகையில் உறுப்புக்களைத் தெரிவு செய்தலும் வரவேற்கத் தக்கது. இப்படிச் செய்வதனால் ஊகத்தின் மூலமாக மாணவன் சரியான விடையைத் தெரிவு செய்யும் வாய்ப்பு அரிதாக்கப்படுகின்றது. அடுத் ததாகப் பட்டியல்கள் மிக நீண்டதாக அமைதல் தவிர்க்கப்பட வேண் டும். ஏனெனில் மிக நீண்ட பட்டியல்கள் காணப்படும்போது பாட விடயம் தொடர்பானது மட்டுமல்லாது வேறு உளத் திறன்களும் அளவிடப்படும் நிலை ஏற்படுகின்றது. இறுதியாகச் சோதனை வினாத்தாளை உருவமைக்கையில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் ஒன்றுண்டு. வழங்கப்படும் பட்டியலானது முழுமையாக ஒரே பக்கத்தில் அமைய வேண்டும். ஒரு பட்டியலின் ஒரு பகுதி யானது வினாத்தாளின் ஒரு பக்கத்திலும் அதன் மறுபகுதி இன் னொரு பக்கத்திலும் இருக்குமாயின் விடையளிப்போனுக்குத் தேவையற்ற இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன.
பலவுள் தெரிவுவகை வினாக்கள்:
பலவுள் தெரிவுவகை வினாக்களின் அமைப்பானது மேலே விபரிக்கப்பட்டது போன்று எப்போதும் இருக்காது. உயர் உளத் தொழிற்பாடுகளை அளவிடும் பொருட்டு இந்த அமைப்புக்களில் பொருத்தமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்படு கின்றன. இவை சிக்கலான பலவுள் தெரிவு வகை உருப்படிக ளெனப்படும்.
பலவுள் தெரிவுவகை வினாக்களின் சிறப்பியல்புகள்:
புறவயச் சோதனைகள் பற்றிப் பொதுவாகக் குறிப்பிடப்படும் சிறப்பியல்புகள் தவிர மேலும் சில சிறப்பம்சங்களைப் பலவுள் தெரிவுவகை வினாக்கள் கொண்டுள்ளன. அவற்றினைச் சுருக்கமாக இங்கு நோக்குவோம்.
சோதனையிடப்பட வேண்டிய பாடப் பரப்பினை நன்கு பிரதி நிதித்துவம் செய்வதற்கு இவ்வகை வினாக்களைக் கொண்ட சோதனை மிகச் சிறந்தது என்பது மிக முக்கியமான ஒரு சிறப்பம்சமாகும். இங்கு, குறிப்பிட்ட ஒரு நேர இடையில் மிகக் கூடுதலாதலானளவு சோதனை உருப்படிகளுக்கு மாணவன் விடையளிக்க முடியும். எனவே, பாடப்பரப்பின் பிரதான பகுதிகள் ஒவ்வொன்றிலிருந்தும்
வினாக்களைத் தெரிவுசெய்ய முடிகின்றது. எல்லா வகையான உளத் தொழிற்பாடுகளையும் இவ்வகை வினாக்களின் மூலம் அளவிட முடிகின்றமை இவ்வகையின் இன்னொரு சிறப்பம்சமாகும். புதுமை யான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் திறனையும் இங்கு சோதிக்க முடிகின்றது. புளூம் என்பாரின் பகுப்பியல் சார்பாகக் கூறுவதாயின் அறிவு தொடக்கம் மதிப்பீடு வரையிலான ஆறுவகை இலக்குகளை யும் அளவிட முடியும். பொருத்தமான ஒரு விடய – திறன் அட்டவணை யின் உதவியுடன் இவ்விரு பணிகளும் செம்மையடைகின்றன.
ஏனைய வகைப் புறவய வினாக்களை விட இங்கு விடைத் தெரிவுகள் கூடுதலாக இருப்பதால், மாணவன் ஊகத்தின் மூலம் புள்ளி பெறும் வாய்ப்புத் தாழ்த்தப்படுகின்றது. மேலும், ஏனைய வகைகளை விட இவ்வகை வினாக்களில் ஈரடியியல்பு எப்பொழுதும் குறைவாகவே காணப்படும். இதன் காரணமாக, வினா எதனைக் குறிப்பிடப்படுகின்றது என்பதனை மாணவன் சரியாக விளங்கிக் கொள்ளாத சந்தர்ப்பங்கள் மிக அரிதாகும். இறுதியாக, விடைத் தெரிவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் மாணவனதும், கற்பித் தற் செயற்பாட்டினதும் குறைநிறைகளைக் குறிப்பாக அறிந்து கொள்ள முடிகிறது.
இத்தகைய சிறந்த அம்சங்களோடு காணப்படுகின்றபோதும், சில கண்டனங்களும் பலவுள் தெரிவுவகைக்கெதிராக முன்வைக்கப் படுகின்றன. எழுத்தாற்றல், ஆக்கத்திறன் ஆகிய திறன்களை அள விடும் வாய்ப்பு மிக அரிதென்பது ஒரு குறைபாடெனவும் வினாக் களை அமைப்பதற்கும் அச்சிடுவதற்கும் அதிக அளவு நேரமும் பொரு ளுஞ் செலவிடப்படுகின்றது என்பதும் இன்னொரு குறைபாடென வும் கூறப்படுகின்றது.
பலவுள் தெரிவுவகை வினாக்களை அமைத்தல்:
பலவுள் தெரிவுவகைச் சோதனையின் பரவலான பயன்பாடு சோதனை உருப்படிகளை ஆக்குதல் மிகக் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. பலவுள் தெரிவுவகை வினாக்க ளைச் சிறந்த முறையில் அமைப்பது தொடர்பான சில முக்கிய கருத்துக்களும் ஆலோசனைகளும் சுருக்கமாக இங்கு முன்வைக்கப் படுகின்றன.
அ.தண்டு சார்பானவை: வினாவின் தண்டானது பிரச்சி னையைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றமை உறுதி வேண்டும் முற்றுப்பெறாத வசனமாகத் தண்டு அமையும் சந்தர்ப்பங் களில் வினாவில் பிரச்சினை தெளிவாகப் புலப்படுந் தன்மை குன்று கின்றது. பிரச்சினை தெளிவாகப் புலப்படாதவிடத்து ஒவ்வொரு விடைத் தெரிவும் ஒவ்வொரு சரி – பிழை வகை உருப்படிக்குச் சமானமெனக் கருதத்தோன்றும்.
வினாவின் இயன்றளவு பகுதியைத் தண்டினுள் அடகக முயற் சிக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் விடைத் தெரிவுகளைச் சுருக்கமாகக் குறிப்பிடுதல் இலகுவாகின்றது. விடை காணப்படு வதற்கு அவசியமான தகவல்கள் யாவும் தண்டினுள் அமையுமாயின், சரியான விடையைக் காணும் பொருட்டு இத்தகவல்களை ஒழுங்க மைத்தலும் மாணவனுக்கு இலகுவாகின்றது. தேவைக்கு மேலான தகவல்கள் தண்டினுள் வழங்கப்படுதலைத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். இல்லாவிடின், அதனை வாசிப்பதிலும், இவையும் சரியான விடையை தெரிவு செய்வதற்கு அவசியமா எனத் தீர்மானிப்பதிலும் மாணவனது நேரத்தின் ஒரு பகுதி வீணாகின்றது.
ஏனைய வகை வினாக்கள் போன்று இங்கும் மொழிப் பிரயோ கம் சோதனை வழங்கப்படவுள்ள மாணவ தொகுதியின் சராசரியான மொழித் தேர்ச்சிக்கு ஒத்த நிலையிற் பேணப்பட வேண்டும். அதா வது இங்கு மாணவனின் மொழியாற்றலைச் சோதிப்பது வினாவின் நோக்கமல்ல. எதிர்மறைச் சொற்களின் பிரயோகம் அரிதாகவே இடம்பெற வேண்டும். வழுக்களைக் கண்டுபிடித்தல், விதிவிலக்கான விடயங்களை அறிதல் போன்ற நிலைமைகளில் எதிர்மறை வினாக் கள் பயனுள்ளவையாகும். ஆயினும் இவற்றின் பிரயோகம் குறிப் பிட்ட ஓரளவுக்கு மேல் இருக்குமாயின் இவை மாணவருக்கு வாசிப்புப் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.
ஆ. விடைத் தெரிவுகள் சார்பானவை: பொருத்தமான விடைத் தெரிவுகளைச் சேகரித்தல் வினாத் தயாரிப்பின் பிரதான அம்சங்களில் ஒன்றாகும். குறிப்பிட்ட ஒரு வினாவுக்கு ஒரேயொரு விடைத் தெரிவு சரியானதாகவோ அல்லது மிகப் பொருத்தமான தாகவோ இருப்பது மட்டும் போதாது. இதன் ஏனைய விடைத் தெரிவுகள் சிறந்த கவனக்கலைப்பான்களாகத் தொழிற்படவும் வேண்டும். அதாவது, சரியான விடை எதுவென அறியாதவருக்கு ஏனைய விடைத் தெரிவுகள் ஒவ்வொன்றும் சரியான விடை போன்று தென்பட வேண்டும்.
சோதிக்கப்படும் பாட விடயத்திற் பெற்ற தேர்ச்சியின் காரண மாக மாணவன் சரியான விடைத் தெரிவை இனங்காண வேண்டு மென நாம் எதிர்பார்க்கின்றோம். எனவே, வினாவிற் பயன்படுத்தப் பட்ட மொழியமைப்புக் காரணமாகவோ அல்லது தர்க்க ரீதியான நியாயித்தல் மூலமாகச் சில விடைத் தெரிவுகள் பொருத்தமற்றன என இனங்காண்பதாலோ ஒரு மாணவன் சரியான விடைத் தெரி வைக் குறிப்பதற்கு வாய்ப்பளிக்கக்கூடாது. இவை அனைத்தும், இவற்றுள் எதுவுமில்லை, மேற்கூறிய யாவும் போன்ற கூற்றுக்கள் விடைத் தெரிவுகளுள் ஒன்றாக அமைய வேண்டுமாயின், இவை மிக அரிதாகவும், மிகக் கவனமாகவும் பயன்படுத்தப்பட வேண்டும். இன்னொரு பொருத்தமான விடைத்தெரிவு கிடைக்கவில்லை என் பதற்காக இவ்வகைக் கூற்றுக்களைப் பயன்படுத்துதல் நிச்சயமாகத் தவிர்க்கப்படல் வேண்டும். இதே நேரத்தில், சரியானதென ஏற்கப் படக்கூடிய, ஒன்றுக்கு மேற்பட்ட விடைத்தெரிவுகள் வழங்கப் படவுங் கூடாது, இது மாணவனின் நேரத்தை வீணடிப்பதுடன் அவனது மனநிலையையும் பாதிக்கக்கூடும்.
இ. பொதுவானவை: சரியான விடைத் தெரிவுகளைச் சுட்டிக் காட்டவல்ல சாடைகள், வினாவின் தண்டிலோ அல்லது விடைத் தெரிவுகளிலோ இடம்பெறாதிருக்க வேண்டும். விடைத் தெரிவின் நீளம், ஒழுங்கு வரிசை, பயன்படுத்தப்பட்ட மொழி என்பவை காரணமாக, விடய அறிவு குன்றிய மாணவனும் தனது தர்க்கத் திற னைப் பயன்படுத்துவதன் மூலம் சரியான விடைத் தெரிவை இனங் காண முடியும். ஒரு வினாவுக்கான சரியான விடையை, மாணவன் இன்னொரு வினாவிலிருந்து ஊகித்துக் கணிப்பதற்கான வாய்ப்பை வினாக்கள் அளிக்கக்கூடாது.
ஒரு வினாவின் தண்டினைக் குறிப்பிடும் கூற்றுக்களின் இறுதி யில் விடைத் தெரிவுகள் வரக்கூடியவாறு வினாக்களை அமைத்தல் பல வழிகளில் நன்மை பயக்கும். வினாவிலுள்ள பிரச்சினையை முதலில் வாசித்து விளங்குவதற்கு இது வழியமைக்கும். விடைத் தெரிவுகள் எழுதப்பட்ட பின்னரும் வினாவின் பகுதி தொடருமாயின் விடையளிப்போனின் சிந்தனைத் தொழிற்பாடு முறிவடையாது தொடர்ச்சியாக முன்னேறுவதற்கு இடையூறு ஏற்படும். அத்துடன் வினாக்களாவன இறுதியில் விடைத் தெரிவுகளைக் கொண்டு அமைக்கப்படும்போது, இவற்றினைக் கொண்டுள்ள வினாத்தாளும் ஒரு விரும்பப்படக்கூடிய தோற்றத்தைப் பெறுகின்றது. பலவுள் தெரிவுவகை உருப்படிகள் பலவற்றைக் கொண்ட ஒரு சோதனையில் சரியான விடைத் தெரிவுகளின் நிலைகள் ஓரளவுக்குச் சமமாகப் பரவியிருத்தல் விரும்பத்தக்கது. உதாரணமாக ஐந்து விடைத் தெரிவுகள் கொண்ட எழுபத்தைந்து உருப்படிகளை ஒரு சோதனை கொண்டுள்ளதென்போம். ஒவ்வொரு வினாவிலும் சரியான விடைத் தெரிவானது ஐந்து நிலைகளுள் ஏதாவதொன்றைப் பெறமுடியும். எனவே, முழு வினாத்தாளில் சரியான விடைத்தெரிவா னது ஒவ்வொரு நிலையையும் பெறும் வாய்ப்பு ஏறத்தாழப் பதினைந் தாக இருப்பது நன்று. வினாத்தாளில் சரியான விடைத்தெரிவுகளின் நிலைகள் குறிப்பிட்ட எந்த ஒரு வரிசைக் கிரமத்திலும் தீர்மானிக்கப் படாது எழுமாற்றாகப் பரவியிருத்தலும் விரும்பத்தக்க ஓர் இயல்பாகும்.