பரணியில் குறிப்பிடப்படும் குலோத்துங்கச் சோழனின் புகழ்

குலோத்துங்கச் சோழனின் புகழ்

1. அறிமுகம்

சோழர் காலத்தில் புகழ் பெற்ற ஒரு பிரபந்தம் பரணியாகும். பரணி பிரபந்தங்களும் நனி சிறந்தது கலிங்கத்துப்பரணி.  கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் சயங்கொண்டார். போர்க்களத் தெய்வமான கொற்றவையை பாடும் நூல். “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி” என்று இலக்கண விளக்கப் பாட்டியல் பரணி நூல்களுக்கு விளக்கம் தருகின்றது. பரணி 13 உறுப்புக்களை உடையது தனியே ஒரு போர் பற்றி எழுந்த நூல் பரணி நூல். முதல் பரணி நூலாக கலிங்கத்துப் பரணி விளங்குகிறது. முதலாம் குலோத்துங்கனின் படைத் தளபதி கருணாகரத் தொண்டைமானுக்கும் கலிங்க மன்னன் ஆனந்தவர்ம சோடங்கனுக்கும் நடந்த போர் பற்றி கூறுகிறது.

  கடவுள் வாழத்து, கடைதிறப்பு, காடு பாடியது, கோவில் பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, பேய் முறைப்பாடு, காளிக்கு கூளி கூறியது, களம் பாடியது, கூழடுதல் இப்பத்து உறுப்புக்களும் எல்லா பரணி இலக்கியங்களுக்கும்  பொதுவானவையாகும். கலிங்கத்துப்பரணியில் இப்பத்து உறுப்புக்களுடன் இந்திரசாலம், இராசபாரம்பரியம், அவதாரம் என்றும் மூன்று உறுப்புக்கள் கூடுதலாக  இடம்பெற்று  மொத்தம் பதின்மூன்று உறுப்புக்கள் காணப்படுகின்றன. கலிங்கத்துப்பரணியில் வரும் இராசபாரம்பரியம்  அவதாரம் என்றஇரு உறுப்புக்களும் சோழ மன்னனது வரலாற்று பெருமையை தெரிவிக்க ஆசிரியர் அமைத்துக் கொண்டனவாகும்.. இராச பாரம்பரியம் என்பதற்கு திருமுடி அடைவு என்னும் பிறிதொறு பெயர் மோகவதைப் பரணியில் காணப்படுகிறது.

  பரணியின் உறுப்புக்கள் கடவுள் வாழ்த்து முதலாகக் கூழடுதல் என்பது ஈறாக, ஒரே சீராக எல்லாப் பரணி நூல்களிலும் காணப்படுவதில்லை. கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, காடு பாடியது, என்ற மூன்று உறுப்;புக்களும் எல்லாம் பரணி நூல்களிலும் முதல் மூன்று  உறுப்புக்களாக இடம்பெற்றுள்ளன. கோயில் பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது என்னும் மூன்று உறுப்புக்களும் பரணி நூல்களில் மாறி மாறி அமைந்திருக்கக் காண்கிறோம்.

2. குலோத்துங்கச் சோழனின் புகழ்

இவ்வாறாக பல சிறப்புக்கள் பரணியில் காணப்படுவதைப் போன்றே கலிங்கத்துப்பரணியின் பாட்டுடை தலைவனாக விளங்கும் குலோத்துங்கச் சோழன் பெருமைகளையும் நாம் காணலாம். கலிங்கத்து பரணியின் கடவுள் வாழ்த்து முதல் களம் பாடியது வரையிலான அனைத்து பகுதிகளிலும் சயங்கொண்டனால் சோழனின் புகழ் சுட்டிக்காட்டிக்காட்டப்படுகிறது. கடவுள் வாழ்த்து  பகுதியில் கலிங்க வெற்றிக்கு உரியவன் முதற் குலோத்துங்க சோழன். நீண்ட நாள் வாழ வேண்டி  வாழ்த்துபவராக கவிச்சக்கரவர்த்தி சயங்கொண்டார் கடவுளர்களை துதித்துப் பாடுகிறார். “சிறந்த வேதங்களில் கூறப்பட்டுள்ள நல்லொழுக்கங்களை மக்களுக்குத் தெரிவிப்பதற்காக உலகைக் காப்;பாற்றும் உரிமையினால் பிரம்மனால் படைக்கப்பட்டவன்” எனும் சோழன் பிறந்ததின் செய்தியை உலகறிய எடுத்துக்காட்டுகிறார். இதனையே

“அண்டங் காக்கும் உரிமையினால் கைப்பிடித்த உபயகுலோத் தமன்” எனும் அடிகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். மேலும் சோழர் குலம், சாளுக்கியர் குலம் என்னும் இருவகை குலங்களிலும் சிறந்த சோழன் வாழ்க என்று பெருமைப்படுத்துகிறார். மேலும் தன்னுடைய பிறப்பினால் தன்னுடைய குலத்தின் பெருமையை விளங்கச் செய்யக்கூடியவன். வறுமையுற்று வருபவர்களுக்கு இல்லாது கொடை வழங்கக்கூடிய கொடை வள்ளலாகவும் போற்றப்படுகின்றான்.

அடுத்தாக கோயில் பாடியது எனும் பகுதியானது காளிக்காக அமைக்கபெற்ற கோயிலின் இயல்புகள் கூறப்படுகின்றன. இப்பகுதியில் குலோத்துங்க சோழன் வெண்கொற்றக்குடையினை உடையவனாகவும். தன்னை எதிர்த்து போரிட்ட பாண்டிய மன்னரின் படைகளை கொன்;று குவித்தவனாகவும், மிதிலை எனும் இடத்தில் யானைகளை கொன்று அந்த யானைகளின் விலா எழும்புகளை பரப்பிப் பரப்பு மரங்களாக அடுக்கி காளி கோயிலின் ஒரு பாகத்தை கட்டினான் எனக் கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியினூடாக வரலாற்று சம்பவம் ஒன்றையும் நாம் அவதானிக்கலாம். அதாவது முதற் குலோத்துங்க சோழன் அரசாண்ட நாளில் குந்தளம் என்னும் நாட்டை ஆறாம் விக்கிரமாதித்தன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். ஆறாம் விக்கிரமாதித்தனையும் அவன் தம்பி சயசிங்கனையும் முதற் குலோத்துங்கன் வென்று துங்கப்த்திரை என்னும் ஆற்றுக்கப்பால் துரத்தினான். அத்துடன் அப்போரில் கவர்ந்த யானைகளின் முகப்போர்வைகளை எடுத்து காளிகோயிலின். வெற்றிடம் மறையும்படி மேலே மூடினான் எனும் இவனுடைய வீரம் எடுத்துக்காட்டப்படுகிறது.

தேவியைப் பாடியது எனும் பகுதியில் ஆதிசேடன் என்னும் பாம்பும் எட்டுத்திக்கு யானைகளும் நிலத்தை சுமந்து கொண்டிருந்த போதினும் காளிதேவி தன் பாதங்களை பெயர்த்து வைத்ததும், பள்ளம் விழுந்த நிலம் அசையத் தொடங்கும் அந்த நேரத்தில் முதற் குலத்துங்கன் தோன்றி தரணியை தாங்கிகொண்டான் என உலகை படைத்த இறைவனுக்கு ஒப்பானவனாக இவன் சயங்கொண்டரினால் போற்றப்படுகின்றான்.

பேய்கள் பாடியது எனும் பகுதியில் குலோத்துங்கள் சோழன் சின்ன வயதிலையே குதிரைகளை செலுத்தி, போர் செய்தவனாகவும் திமிர் என்ற இடத்தில் யானைப்டையை அழித்தான் எனவும்

ஆனை சாய அடு பரி ஒன்று உகைத்து 

ஐம்படை பருவத்து அபயன் பொரும்

சேனை வீரர்நின்று ஆர்த்திடு ஆர்ப்பினில்

திமிர் வெங்களத்தில் செவிடு ஆனவும்   (150) 

பாடல் கூறுகிறது. குலோத்துங்கனின் பெருமைகளையும் கீர்த்திகளையும் நாம் கலிங்கத்து பரணியில் அவதாரம் எனும் பகுதியில் அவனுடைய பிறப்பு மற்றும் பெருமைகளை காணலாம். திருமாலே அவதாரம் எடுத்து குலோத்துங்கனாக அம்மங்கா தேவியின் வயிற்றில் பிறந்தான் என இவனுடைய பிறப்பின் சிறப்பை கீழ்வரும் பாடல் மூலம் எடுத்துகாட்டுகிறார் சயங்கொண்டனார்.

இருள் முழுதம் அகற்றும் விதுகுலத்தோன் தேவி

இகல்விளங்கு தபனகுலத்து இராசராசன்

அருள் திரிவின் திருவயிற்றில் வந்து தோன்றி 

ஆல்நிலையில் அவதரித்தான்: அவனே மீள ( -235)

இவன் பிறந்த தருணத்தில் மண்ணுலகமும் நான்கு மறைகளும் தங்கட்கு வரும் கேடுகளின்றும் நீங்கின என்று பேரிகை வாத்தியம் மளிர்ந்ததாக சொல்லப்படுகிறது. அத்துடன் பாட்டியார் வாயிலாகவும் சோழனின் பெருமை பேசப்படுகிறது. அதாவது குலோத்துங்கள் பிறந்ததும் “என் வயிற்றுப் பிளளையாகிய இவன் எமக்கு சுவீகார புத்திரனாகச் சூரிய குலத்தை வளர்த்து விளக்க வல்லவன் ஆவான்”  என கூறுகின்றனர். அத்துடன் நடை கற்பது, முதலில் பேசியது, பூணூல் அணிந்தது, வீரவாள் ஏந்தியமை, யானையேற்றம் கற்றமை, குதிரையேற்றம் கற்றமை மற்றும் அறிஞர்களே வியக்கும்படிhயக பல்கலைகளையும் கற்றுத் தேர்ந்தான் எனவும் மிகச் சிறப்பாக சயங்கொண்டார் இங்கு புகழ்கிறார்.  அத்துடன் இளவரசராக பதவி ஏற்றதுமே

“குடதிசை புகக்கடவு குரகத் ரதத்து 

இரவி குறுகலும் எறிக்கும் இருள்போல்

வடதிசை முகத்து அரசர் வரு கதம் உகத்

தனது குரகதம் உகைத்து அருளியே”  என

குதிரைகள் பூட்டிய தேரினையுடைய, ஞாயிறு கீழக்கு திசையில் தோன்றி மேற்கு திசை Nநூக்கி செல்லும்போது இருள் அழிதல்போல், வடதிசையில் உள்ள அரசர்களிடம் தோன்றும் வீரம் அழியும்படி, குலோத்துங்கன் தென் திசையிலிருந்து தனது குதிரைப் படையைச் செலுத்தி வட அரசர்களுடைய வீரத்தை அழித்தான் என இவனின் இளவயது வீரம் சொல்லப்படுகிறது. அத்துடன் சிவன் எவ்வாறு திரிபுரங்களை அழித்து அருள் புரிந்தாரோ அதனைப்போன்று குலோத்துங்க சோழனும் வயிராகம் எனும் ஊரைத் தீ மூட்டி பகையரசரை அழித்தான் என சிவனின் செயல்களுடன் இவனுடைய வீரம் ஒப்பிட்டு பேசப்படுகிறது.

மேலும் குலோத்துங்கனின் வீரத்தை வெளிகாட்ட சயங்கொண்டார் பின்வருமாறு தனது உயர்வு நவிற்சி அணியை கையாள்கிறார்.

“மனுக்கோட்டம் அழித்த பிரான்

வளவர் பிரான் திருப்புருவத் 

தனுக்கோட்ட நமன் கோட்டம்

பட்டது சக்கரக் கோட்டம்.”

அதாவது மனிதர்களின் தீய ஒழுக்கங்களை போக்கியவனும் சோழநாட்டவர்க்கு அரசனும் ஆகிய குலோத்துங்கள் தனது அழகிய புருவமாகிய வில்லை வளைத்தான். அவ்வளவில் சக்கரக் கோட்டத்திலுள்ள பகைவர்கள், யமன் கோட்டம் போய்ச் சேர்ந்தனர் என குலோத்துங்கனின் வில் வீசும் திறன் வெளிகாட்டப்படுகிறது.

மேலும் முக்கியமாக சோழ நாட்டின் வீரராசேந்திரன் விண்ணுலகம் சென்றதும் அவன் ஆட்சி  செய்த சோழ நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளானது. எடுத்துக்காட்டாக மறையவர்கள வேள்வி குன்றினர், மனுநீதி முழுமையும் மாறுபாடு அடைந்து, பல்வேறு சீர்கேடுகள் நடந்தது, அத்துடன் சாதிகள் ஒன்றோடு ஒன்று தலை தடுமாறின அனைவரும் தங்கள் தங்களுக்குரிய ஒழுக்க நெறிகளை நிற்காமல் அவற்றை மறந்தனர். ஒருவரை ஒருவர் மிஞ்சினர், கோயில்களில் பூசைகள் நடைபெறவில்லை, பெண்கள் கற்பு நெறியில் தவறினர், அவரவர்களுக்குரிய

கடமைகளை மறந்து செயற்பட்டனர். இவ்வாறு சோழ நாடானது சீர்கெட்டு இருந்த சமயம் வடநாட்டிலிருந்து வருகைத்தந்த குலோத்துங்க சோழன் அவற்றை எல்லாம் சீர்செய்து நாட்டை நற்பாதையில் கொண்டு சென்ற பெருமை உடையவனாக போற்றப்படுகின்றான். இதனை

“காப்பு எலாம் உடைய தானே 

படைப்பதும் கடனாக் கொண்டு

கோப்பு எலாம் குலைந்தோர் தம்மைக்

குறியிலே நிறுத்தி வைத்தே (263) 

எனும் அடிகளினூடாக அறியலாம்.”  

குலோத்துங்கன் பெருமை எட்டுத்திக்கும் பரவி காணப்பட்டது. பாண்டியர்கள் அரசனுக்கு பயந்து மறைந்து வாழ்ந்ததாக இவனுடைய வீரம் பேசப்படுகிறது. அத்துடன் இங்கு கலிங்க போர் வர்ணனை இடம்பெறுகிறது. வலிய சிறகுகளை உடைய கழுகுகளும் பருந்துகளும் அங்கே  இருந்து, இறந்து போன கலிங்க வீரர்களின் பிணங்களை தின்று, வயிறு வெடித்துப் போய் விட்டன, கலிங்க நாட்டில் மடிந்து கிடக்கும் யானைகள், குதிரைகள் ஆகிய பிணங்களைப் புசிக்க நம்முடைய வயிறுகளே  பற்றா! நம் வாய்களும் போதா! பழமையான பற்களோ என்றால் அவற்றைக் கடித்து மென்று விழுங்கப் போத மாட்டா! என்றாவாறு வர்ணிக்கப்படுகிறது. இவ்வர்ணனை மூலம் எவ்வளவு பெரிய படைகளை குலோத்துங்கன் வீழ்த்தியுள்ளான் என்பதை அறியமுடிவதுடன் குலோத்துங்க சோழனின் வீரத்தையும் நாம் கற்பனை செய்து பாரக்க கூடியதாக இருக்கிறது.

காளிக்கு கூளி கூறியது எனும் பகுதியில் இடம்பெறக்கூடிய ஒரு பாடல்

“பார் எலாம் உடையான் அபயன் கொடைப்

பங்கயக் கரம் ஒப்புஎனப் பண்டொர் நான்

கார் எலாம் எழுந்த ஏழரை நாழிகைக்

காஞ்சனம் பொழி காஞ்சி அதன்கணே 

இதில் முதற் குலோத்துங்க சோழன் எல்லா உலகங்களையும் தனக்கே உரிமையாகக் கொண்டிருந்தவன் மேலும் அவன் இரப்பவர்க்கு ஈகின்ற குணமுடையவனாகவும் விளங்கினான். அவனுடைய கை தாமரைப் போன்றது. அவனது கை வண்மைக்கு ஒப்பு என்று சொல்லும் படியாக ஒரே காலத்தில்

காஞ்சிமா நகரில் மேகங்கள் எல்லாம் வானில் திரண்டு எழுந்த, ஏழரை நாழிகை நேரம் பொன் மழையாகப் பொழிந்தன என குலோத்துங்க சோழனின் பெருமை பேயால் காளிதேவிக்கு கூறுவதினூடாகம் அறியக் கூடியதாக உள்ளது.

மேலும் இவன் குளிர்ச்சி பொருந்திய ஆத்தி மாலையை அணிந்தவன் திரண்ட தோள்களை உடையவன் என

“தண் ஆரின் மலர்த் திரள்தோள் அபயன்” அடிகளினூடாக பெருமை பேசப்படுகிறது. அத்துடன்

கவன நெடும் பரி வீர தரன்

காவிரி நாடுடையான் இருதோள்

அவனி சுமந்தமை பாடீரே!

அரவு தவர்ந்தமை பாடீரே! (529) 

எனும் பாடலின் கூடாக முதற் குலோத்துங்க சோழன் விரைந்து செல்லக்கூடிய உயர்ந்த குதிரைகளை உடையவன், வீரம் பொருந்தியவன், காவிரியாறு பாயும் வளநாடை;டை உடையவன், அவனுடைய இரண்டு தோள்களும் இவ்வுலகத்தை தாங்கியுள்ளன என குலோத்துங்கனின் பெருமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இறுதியாக பேய்களும் குலோத்துங்கனின் பெருமையை தன் வாயால் பாடின. எடுத்துக்காட்டாக – ஏழ கடல்களையும் அக்கடல் சூழ்ந்த நிலப் பகுதிகளையும் தனது ஒப்பற்ற ஆனைச் சக்கரத்திக் கீழ் அடங்கும்படி தனக்கு உரிiமாயகக் கடைத்த அகன்ற உலகத்தைப் பன்னெடும் காலமும் காத்து அருள் செய்யும் முதல் குலோத்துங்கன் வாழ்க என வாழ்த்தின.. இவ்வாறாக கலிங்கத்தப்பரணியில் மேற்கூறப்பட்ட அம்சங்களின் ஊடாக குலோத்துங்க சோழனின் புகழ் சயங்கொண்டரினால் ஒரு பேரரசனுக்குரிய வருணனைகளாக எடுத்துகாட்டப்பட்டுள்ளது.

Leave a Comment