சிறப்புமிக்க கம்பராமாயணம்

சிறப்புமிக்க கம்பராமாயணம்
www.edutamil.com

அறிமுகம் – காப்பியம்

தமிழ் இலக்கியம் பல வகைப்படும். தன்னுனர்ச்சி பாடல்களும், அகம், புறம், பற்றிய பாடல்களும் சங்க இலக்கியமாக மலர்ந்தன. அற நூல்களும் நீதி நுல்களும் தோற்றம் பெற்றன. பிற்காலத்தில் பக்திப் பாசுரங்களும் இலக்கியத் தன்மை கொண்டு படைக்கப்பட்டன. இதனைப்போன்ற ஒரு இலக்கிய வடிவமாக படைக்கப்பட்டதே காப்பிய வகைகளாகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைப் பாடல்கள் என்ற விரிந்து கொண்டே வந்த இலக்கிய வளர்ச்சி காப்பியத்தில் முழுமை எய்தியது.

ஒரு சமுதாயம் ஒரு குறித்த காலத்தில் எவ்வகை இலக்கியத்தை ஏற்றுக் கொள்ளத்தயாராக இருக்குமோ, எவ்வகை இலக்கியத்தைக் கற்று மகிழ்ந்து இன்புறுமோ அவ்வகை இலக்கியம் அக்காலத்தில் உண்டாவது இயல்பு. சமுதாயத்தின் நிலைக்கும் சூழ்நிலைக்கும் அவற்றில் உண்டாகும் இலக்கியத்திற்கும் மிக நெருங்கிய, விட்டு விலகாத தொடர்புண்டு என்கிறார் எஸ்.வையாபுரிப்பிள்ளை. அதன்படி, காப்பியங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அக்காலத் தேவைக்கேற்பத் தோன்றியுள்ளன.

காப்பியம் என்னும் சொல்லுக்குத் தமிழ்ப் பேரகராதி “நால்வகை உறுதிப் பொருள்களையும் கூறுவதாய்க் கதை பற்றி வரும் தொடர்நிலைச் செய்யுள்” என்று பொருள் கூறுகிறது. காப்பியம் என்பது உயர்ந்த குறிக்கோள் உடைய தலைவனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் தொடர்நிலைச் செய்யுள் எனலாம். காப்பியம் என்னும் சொல் சீவக சிந்தாமணியில் முதன் முதலில் இடம் பெற்றுள்ளது. இதனைக் காப்பியக் கவிகள் (சீவக.சிந். – 1585) என்னும் சொல்வழி உணரலாம். காவியம், காப்பியம் என்னும் இவ்விரு சொற்களும் சில தமிழ் காப்பியங்களில் இடம்பெற்றிருக்கிறது. எடுத்துக்காட்டாக யசோதர காவியம், நாககுமார காவியம், இயேசு காவியம், இராவண காவியம் என்பவற்றை கூறலாம்.

காப்பியம் என்பது ஆங்கிலத்தில் நுPஐஊ எனப்படுகிறது. இச்சொல் நுPழுளு என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானது. இதற்குச் சொல் அல்லது பாடல் என்று பொருள்படும். காவியம் எனும் வட சொல்லின் தமிழ் வடிவமே காப்பியம் எனக் கொள்வதும் உண்டு. காவியம் என்பது கவியினால் செய்யப்பட்டது எனப் பொருள் தரும். அத்துடன் காப்பியம் என்பதைக் காப்பு + இயம் என்றும் பிரித்துப் பொருள் காணலாம். இப்பெயர் தொடக்கத்தில் இலக்கண நூல்களை சுட்டுவதாகவே அமைந்து, இடைக்காலத்தில் வடமொழித் தொடர்பால் ஒருவகை இலக்கிய வடிவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பர். காப்பியத்தை தொடர்நிலைச் செய்யுள் எனவும் குறிப்பர்.

அனைத்து இலக்கியங்களுக்கும் தனித்துவமான கட்டமைப்பு காணப்படுவதை போன்றே காப்பியத்திற்கும் இலக்கணம் காணப்படுகிறது. தமிழில் கிடைக்கப் பெற்ற முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் காப்பியத்திற்குரிய இலக்கணம் எதையும் வரையறுக்கவில்லை. கி.பி.12ஆம் நூற்றாண்டில் தோன்றிய தண்டியலங்காரம் என்னும் நூலே காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது. “பெருங்காப்பிய நிலை பேசுங்காலை” எனத் தொடங்கிக் ‘கற்றோர் புனையும் பெற்றியது என்ப’ என அச்சூத்திரம் முடிவுறுகின்றது. அச்சூத்திரம் வருமாறு :

பெருங்காப்பிய நிலை பேசுங்காலை

வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றில் ஒன்று

ஏற்புடைத்தாகி முன்வர இயன்று

நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்

தன்னிகர் இல்லாத் தலைவனை உடைத்தாய்…..

மேற்கூறப்பட்ட நூற்பா உணர்த்தும் காப்பிய இலக்கணப் பொருள்

  • வாழ்த்து, வணக்கம், வருபொருள் ஆகியவற்றில் ஒன்றினைப் பெற்று வரும்.
  • அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் கொண்டதாகக் திகழும்.
  • தன்னிகரில்லாத தலைவனை உடையது.
  • மலை, கடல், நாடு, நகர், பருவம், இருசுடர் ஆகியவற்றை உள்ளடக்கி வரும்.
  • நன்மணம் புரிதல், பொன்முடி கவித்தல், புனல் விளையாட்டு, சிறுவரைப் பெறுதல், புலவியில் புலத்தல், கலவியில் கலத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெறுதல் வேண்டும்.
  • மந்திரம், தூது, செலவு, போர், வெற்றி ஆகியவற்றைப் பெற்று வரும்.
  • சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் உட்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைப் பெறும்.
  • இலக்கிய நயமும் பாவமும் பெற்று விளங்கும்.
  • கற்றோரால் இயற்றப் பெறுவதாக அமையும்.

காப்பியங்களை பெருங்காப்பியம் என்றும்,  சிறுகாப்பியம் என்றும் பகுப்பர். அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும். நான்கு பொருள்களையும் பயக்காமல் சில பொருள்கள் மட்டும் பயக்கும் கதைநூல் சிறுகாப்பியம். இவ்வாறாக ஒரு காப்பியத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்களை நாம் பார்க்கலாம்.

கம்பராமாணம்

சோழர்காலத்தில் தோற்றம் பெற்ற மாபெருங்காப்பியமான கம்பராமாயணத்திலும் எவ்வகையான காப்பிய பண்புகளை கொண்டு காணப்படுகிறது என்பதை நாம் ஆராய்தல் மிக முக்கியமாகும். கம்பராமாயணமானது, இராமனது வரலாற்றைக் கூறும் நூல் ஆகும்.. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கற்பு நெறி நின்று வாழவேண்டும் என்ற உண்மையை ஏகபத்தினி விரதனாம் – இராமன் மூலம் தெரிவிக்கின்றது. பிறன் மனைவியை விரும்பினால் அவனும் அவனைச் சார்ந்த சுற்றமும் குலமும் அழிந்துவிடும் என்பதை இந்நூல் விளக்குகின்றது. பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப என்னும் நீதி (கிளை ஸ்ரீ சுற்றம்) இந்நூல் மூலம் உணர்த்தப்படுகிறது.

இந்த நூல் குலோத்துங்க சோழனின் ஆணைப்படி கம்பர் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும். இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும், கம்பர் தனக்கே உரித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச்சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர், தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார்.

(வடசொல் கிளவி வடஎழுத் தொரீ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே”) (தொல்காப்பியம், எச்சவியல்,)

மூல இலக்கியமான வடமொழி இராமாயணத்திலிருந்து சில மாறுபாடுகளோடு கம்பர் இந்நூலை இயற்றியிருந்தார். கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால், இது கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது. கம்பராமாயணம் பாலகாண்டம்,

அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய உத்திர காண்டம் என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய ஒட்டக்கூத்தர்” இயற்றினார் என்பர். தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பரின் காலத்தில் (கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு) உச்சநிலையினை அடைந்தது என்பர். இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் தமிழுக்குக் கதி” (கம்பராமாயணம் திருக்குறள்) என்பர்.  கம்பரின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு. கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் நெடுகிலும் மின்னி மிளிர்கின்றன. “வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணூற ;றாறே (யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை 96)” என்றொரு கணக்கீடும் உண்டு. கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. அணி, பொருள், நடை ஆகியவற்றால் சிறந்து விளங்குவது. சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு தமிழ்ப்பண்பாட்டோடு இயைந்து விளங்குவது

காப்பியத்துறையில் கம்பராமாயணம் எனும் பொருத்தப்பாட்டை பார்ப்போம் எனில் காப்பியத்திற்கு தேவையான அனேகமான இலக்கணங்கள இதில் இடம்பெற்றிருப்பதை காணலாம்.

2.1 கவிச்சிறப்பு

ஒரு காப்பியத்திற்கு பொருத்தவரை ஒரு முறையான தொடக்கம், கதையோட்டம், முடிவு என்ற வகையில் இரசணை மிக்கதான அமைக்கப்படுதல் வேண்டும். அப்போதுதான் ஒரு படைப்பு வாசகன் மனதில் நீங்காத இடம்பெறக்கூடியதாக இருக்கும். கம்பராமாயணமானது மிகச்சிறந்த ஒரு படைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கம்பனின் கவித்துவ ஆற்றலை நாம்  நுகரக்கூடியதாக உள்ளது. கம்பனின் ரசனைச்சுவை மிக உயர்ந்ததாகவே கம்பராமாயணத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது. இதனையே கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பின்வருமாறு புகழ்கிறார். “கம்பராமாயணத்தை பாவின் சுவை கூடல் மொண்டெழுந்து கம்பன் பாவில் பொழிந்த தீம்பால் கடல்”;

அத்துடன் பாரதி இப்படி சொல்கிறான். “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவனைப் பொல், இளங்கோவைப்போல் பூமிதனில் எங்கும் கண்டதில்லை” இது வெறும் புகழ்ச்சி அல்ல என்று கம்பனின் கவித்துவத்தை எடுத்துக்காட்டுகிறான்.

கம்பராமாயணத்தில் இடம்பெறக்கூடிய ஒரு சிறிய சம்பவத்தின் வாயிலாகவும் மேற்கூறப்பட்ட கம்பனின் ரசணையை நாம் அறியலாம். அதாவது தாடகையின்மேல் இராமன் எறிந்த அம்பு அரக்கியின் வலிமையை உருவிக் கொண்டு சென்றதுமட்டும் அல்லாமல், அடுத்து இருந்த மலையையும் மரங்களையும் மண்ணையும் உருவிக்கொண்டு சென்றது. என பாடலில் உரு, உருவி என்ற சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறுவதன் வாயிலாக, அம்பு பலவற்றை உருவிக்கொண்டு செல்லும் காட்சியைப் படம் பிடித்துக் காட்டி விடுகிறான் கம்பன்;. நெஞ்சம் நன்கு உணருமாறு செய்துவிடுகிறான்

அலைஉருவக் கடல் உருவத் தாண்டகைதன் நீண்டுயர்ந்த

நிலைஉருவப் புயவலிமை நீஉருவ நோக்கையா:

உலையுருவக் கனல்உமிழ்கண் தாடகைதன் உரம்உருவி

மலைஉருவி மரம்உருவி மண்உருவிற்று ஒருவாளி

இவ்வாறாக ஒரு காப்பியத்திற்கு உயிர் ஊட்டக்கூடிய இரசணையை மிக்கதாக அமைந்ததுடன் தமிழ் காப்பியத்துறையில் இரசணை என்றால் கம்பராமாயணம் தான் எனும் கூற்றையும் நிலைநிறுத்திய ஒரு காப்பியமாகும்.

2.2 பாடுபொருள்

ஒரு காப்பியத்தின் நடுநாயகமான பொருள,; பாடுபொருள் எனப்படுகிறது. கதை நிகழ்ச்சிகள் அனைத்தும் எதனை மையமாகக் கொண்டு பின்னப்படுகின்றதோ அது பாடுபொருள் என குறிக்கப்படுகின்றது. கம்பராமாயணத்தை; எடுத்துக்கொண்டால், இராவண வதம் அதன் பாடுபொருள். கதை நிகழ்ச்சிகள் அனைத்தும் அத்தலைமை பொருளை மையமாகக் கொண்டே பின்னப்படுகின்றன. அத்துடன் இதன் உள்ளுறை பொருளாக அறம் காணப்படுகிறது. இராவணன் அறத்திற்கு எதிராக நிற்கின்றான் அவனுடைய வீழ்ச்சி அறத்தின் வெற்றியாக கொள்ளப்படுகிறது. இதனை நாம் வேறொரு முறையாக சொல்வதாக இருந்தால் சீதையின் கற்பு திறத்திற்கு கிடைத்த வெற்றி எனலாம். இதனை எடுத்த எடுப்பிலே

“ஆசலம்பொறி ஐம்பொறி வாளியும்

காசு அலம்பு முலையவர் கண்எனும்

பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்

கோச வம்புனை ஆற்றுஅணி கூறுவோம்”

என்று சீதையின் கற்பின் தறத்தை பாராட்டுகிறான் கம்பன். அறம், தர்மம், கற்பு மற்றும் இதர சமூக விழுமியங்களை எடுத்தியம்பக் கூடிய மிகச்சிறந்த ஒரு காப்பியமாக கம்பராமாயணம் திகழ்கிறது.

கம்பராமாணயம் வடமொழி தழுவலாக அமைந்தாலும் தமிழ்நாட்டிற்கு பொருத்தமான கதைக்களங்களையும் மாற்றியமைத்தான். தமிழ் மரபுகளுக்கே உரித்தான பண்புகளை சிறிதளவேனும் பிசகாமல் படைக்கப்பட்டுள்ளமை காப்பியத்துறையின் கம்பராமாயணத்தின் தனித்துவத்தை அறியலாம். எடுத்துக்காட்டாக – வாலி இறந்த பிறகு அவனுடைய மனைவி தாரையைச் சுக்கிரீவன்

தன் மனைவியாக்கிக் கொண்டான் என்பது வால்மீகி இராமாயணத்தில் உள்ள கதை. ஆனால் கமபர் தம் நூலில், கணவரை இழந்த பின் தாரை, மங்கல அணி துறந்து துயரமே வடிவாக விதவை வாழ்வு நடத்துவதாக காட்டியுள்ளார்.

மேலும் சீதையும், இராமனும் திருமணத்திற்கு முன் கண்டு காதல் கொண்டதாக வால்மீக கூறவில்லை. கம்பர் அவர்களின் திருமணத்தை காதல் மணமாக அமைத்துக் காட்டியுள்ளார். மிதிலை நகரத் தெரு வழியே இராமன் நடந்துசென்ற போது கன்னிமாடத்தில் நின்றிருந்த சீதை அவனைக் கண்டாள் என்றும், இராமனும் அவனைக் கண்டாள் என்றும் கூறி அவர்களுக்குள் காதல் வளர்ந்து வந்தாக விளக்கியுள்ளார். இவ்வாறாக தமிழ் மரபுக்கு ஏற்ப காப்பியத்தை மாற்றிமைத்தான்

2.3 காம்பீரியம்

கம்பரின் கவித்துவத்தின் உயர்ச்சி காரணமாக ஐயர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இனி கம்பனுடைய கவிதையை ஒரே வார்த்தையில் வர்ணிக்க வேண்டுமானால் அதன் சிறந்த குணம் காம்பீரியம் என்று சொல்லுவோம்” (குப்புசாமி, 2003: 51) முதலில் கூறப்பெற்ற இரசனைத் திறனும் செய்யுளின் காம்பீரியமும்  உலக மகா கவிகள் பலரிலிருந்தும் கம்பனை வேறுபடுத்தி, அவனைத்  தனித்துவமான கவிச்சக்கரவர்த்தியாக நிலைநிறுத்துகின்றன என்பது

ஐயர் முடிவு. இதனை,

“ரஸவாதிகளுக்கும் அகப்படாத ஆயிரத்தெட்டு மாற்றுத் தங்கத்துக் 

கிணையான கம்பீரமான செய்யுட்களும், அவற்றைப் பொருந்த 

அமைத்து வைக்கும் ரசனைத் திறனுமே கம்பனைப் பிராகிருதமான 

கவிகளினின்றும், அவன் சாதியைச் சேர்ந்த கலைவல்லாளரான 

வால்மீகி, வியாசர், ஹோமர், மில்தன் முதலியோரினின்றும் 

வேறுபடுத்தித் தனிச்சிறப்புத் தருகின்றன” (மணி, 2009: 106).

எனத் தெரிவிக்கிறார்.

மேற்கூறப்பட்ட கூற்று தமிழ் காப்பிய வரலாற்றில் கம்பராமாயணத்தின் தனித்துவத்தை அடையாளப்படுத்துகிறது.

2.4 கட்டமைப்புத்திறன்

“காப்பிய நிகழ்ச்சிகள் அனைத்தும் மையக் கதைகளோடு ஒருங்கு இணைக்கப்படுகின்ற திறத்தைக் கட்டமைப்புத் திறன்” என்று வ.வெ.சு குறிப்பிடுகின்றார். கதைக்களத்தில இடம்பெறுகின்ற அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளும்; காப்பிய பாடுபொருளுக்கு துணைபுரிவதாக காணப்படும். இதனை கம்பராமாயணத்தில,; இராவணன் வீழ்ச்சி பாடுபொருளாக இருப்பதால் காப்பிய  நிகழ்ச்சிகள் அதனை நோக்கி உருவாவதைக் கம்பர் ஆங்காங்கு குறிப்பிட்டு செல்கிறார். இராவணனை அழிப்பதற்காகப் பரம்பொருளான திருமால் அயோத்தியில் தசரதன் மகனாக அவதரிக்கின்றான். மனிதனாக நடிக்கின்றான். இதனைக் கம்பர் காப்பியம் முழுவதிலும் மறவாது நினைவுறுத்திக் கொண்டு செல்லுகிறான். எல்லா நிகழ்ச்சிகளிலும் இப்பாடு பொருள் ஊடுருவி நிற்பதைக் காணலாம்;.

பாலகாண்டத்தில், முனிவனின் வேள்வியைச் சிதைக்க முனைந்த தாடகையை இராமன் கொல்லுகின்றான். இராமன் ஏவிய கணை அவள் மார்பில் ஊடுருவிச் செல்ல, அவள் தரையில் வீழ்கின்றாள். அவளுடைய வீழ்ச்சி இராவணன் வீழ்ச்சிக்கு முன்னறிவிப்பாக இருப்பதாகக் கம்பர் பாடுகின்றார். இராவணன் இறுதியை முன்னரே அறிவிப்பது அவனுடைய “வெற்றிக் கொடி அறுந்து வீழ்ந்ததைப் போன்று தாடகை வீழ்ந்தாள”; எனக் கம்பன் உவமிக்கும் பொழுது காப்பியப் பாடு பொருள் நினைவூட்டப்படுகின்றது.

இதனைப்போன்றே இறுதியில் இராமன் கணைகளால் இராவணன் வீழ்கின்றான். முக்கோடி வானாளும் முயன்றுடைய பொருந்தவமும் உடைய வீரன் மண்ணிலே வீழ்ந்து கிடக்கின்றான். அப்பொழுது அவன் மனைவி மண்டோதரி அவன் மேல் விழுந்து அழுது புலம்பும் பொழுது, கதை முழுவதையும் ஒன்றாக இணைத்து அவள் வாயிலாகப் பேச வைக்கின்றார் கம்பர்.

‘காந்தையருக்கு அணி அனைய சானகியார்

பேரழகும், அவர்தம் கற்பும்,

ஏந்துபுயத்து இராவணனனார் காதலும், அச்

சூர்ப்பனகை இழந்த மூக்கும்

வேந்தர்பிரான், தயரதனார் பணிதன்னால்

வெங்கானில் விரதம் பூண்டு

போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார்

பெருந்தவமாய்ப் போயிற்று அம்மா”  

இவ்வாறாக காப்பியத்தில் இடம்பெற வேண்டிய கட்டமைப்பு எனும் இலக்கணத்தை கச்சிதமாக கையாண்டுள்ளான் கம்பன்.

2.5 மனித உணர்ச்சி வெளிப்பாடு

அடுத்து கம்பனின் தனித்தன்மையாக, மனித உணர்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டும் கம்பனின் இயல்பைக் காட்டுகிறார் ஐயர். “மனித இதயத்தின் உணர்ச்சிகளையும் பாவங்களையும், இயக்கங்களையும் வர்ணிக்கையில் கம்பன் வால்மீகியைத் தனக்குப் பின்னே வெகு தூரத்தில் நிறுத்தி விடுகிறான்” (குப்புசாமி, 2003: .51) என்கிற ஐயர், இதற்கு உதாரணமாக, பூக்கொய் படலம், உண்டாட்டுப் படலம், உலாவியற் படலம், பரசுராமப் படலம் ஆகியவற்றிலுள்ள செய்யுட்கள் அனைத்தையுமே சுட்டலாம் என்கிறார்.

2.6 கதையோட்டம்

காப்பியம் எழுதப்படும் வேளையில் அதன் விருவிருப்பான கதைக்களம் காப்பியத்திற்கு உயிரூட்டத்தை தரும். முதல், இடை, கடை அழகுற அமையப்பெறுதல் வேண்டும். இராமாயணக் கதையின் முதற்பகுதியாக விளங்குவது மந்தரை சூழ்ச்சியாகும். அதற்குமுன் நிகழும் நிகழ்ச்சிகள் அம்முதல் பகுதிக்குத் துணையாகின்றன. இராமன் அரசு துறந்து காடு புகுதலும், முனிவர்களைச் சந்தித்தலும் இம்முதற் பகுதியின் விளைவுகளாகும்.

இடைப்பகுதி, சூர்ப்பனகை சூழ்ச்சியில் தொடங்குகின்றது. கரதூடணர் வதையும், இராமன் சுக்கீரிவன் நட்பும் இவ்விடைப் பகுதியின் விளைவுகளாகின்றன. இலங்கைப் படையெடுப்பின் மூலமாக இராவணன் கொல்லப்படும் நிகழ்ச்சி கதையின் இறுதிப் பகுதியாகும்.; இராமனாக அவதரித்ததன் நோக்கம் இங்கு நிறைவேற்றப்படுகின்றது. அரக்கர்களின் அழிவு, நல்லவர்களின் வாழ்வாக அறத்தின் வெற்றியாக அமைகின்றது. இவ்வாறு முதல், இடை, கடை என்னும் முப்பகுதிகளும் ஒன்றோடொன்று இணைந்து முழுக்கல்லில் செதுக்கிய சிற்பத்தைப் போன்று தமிழ் காப்பிய வரலாற்றில் கம்பராமாயணம் முழுமை பெற்றதாக திகழ்கிறது.

2.7 காப்பியத்தின் தொடர்பழகு

அத்துடன் காப்பியத்தின் முன்னும் பின்னும் நிகழ்கின்ற செயல்கள் பேசும் பேச்சுக்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு, ஒன்றின் விளக்கமாகவோ, வளர்ச்சியாகவோ நினைவூட்டலாகவோ அமைந்த காப்பியத்தின் தொடர்ச்சியை நினைவூட்டும்.  ‘இராமாயணத்தை முழுமையாக, ஒவ்வொரு பாடலையும் முழுமையின் பாகமாக, ஒவ்வொரு சொல்லையும் பாகத்து பாகமாக உறவு முறையோடு காண வேண்டும்” இதுவே காப்பியத் தொடர்பழகு என்று வ.சு.ப.மாணிக்கம் கூறுகிறார். தொடர்பழகினால் காப்பியம் ஒருமைக் கோலம் பெறுகின்றது.

விசுவாமித்ர முனிவனின் பின்னே தயரதன் இராமனை அனுப்பியதை உவமிக்கப் புகுந்த கம்பர் ‘மன்னன் இன்னுயிர் வழிக்கொண்டாலென” என்று உயிர் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உவமையைக் கூறினார். இராமன் தாடகையை அழித்து முனிவன் வேள்வியைக் காத்து, வில்லையிறுத்துச் சானகியைக் கரம்பற்றவிருக்கும் வேளையில், மிதிலைக்கு வந்த தயரதன் இராமனைச் சந்திப்பதை உவமிக்கின்ற புலவர் முன்னர்க் கூறிய உவமையை மறவாது

‘தேவரும் தொழுகழல் சிறுவன் முன்பிரிவது ஓர்

ஆவிவந் தென்னவந்து, அரசன் மாடு அணுகினான்”

என்று அமைப்பார். முன்னர்க் கூறிய உவமைக்குப் பொருத்தமாக நூற்றுக்கணக்கான பாடல்களுக்குப் பின்னர் ‘பிரிந்த உயிர் உடலைமேவியதென்று” உரைத்து உவமையை முழுமையாக்கும் தொடர்பழகு சிறப்புடையதாக அமைகிறது.

2.8 காண்டங்களின் அமைப்பு

காப்பியப் பெரும்பிரிவுகளாகச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் பெயர்களைத் தண்டியலங்காரம் கூறுகின்றது. கம்பருடைய காப்பியம் வால்மிகி காப்பியத்தைப் போலன்றி ஆறு காண்டங்களுடன் நிறைவு பெறுகின்றது. கம்பராமாயணத்தின் பெரும்பிரிவுகளான காண்டப் பெயர்கள் வால்மீகத்தை ஒட்டியே பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம் சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனப் பெயர் பெறுகின்றன. இராமனுடைய இளமைப் பருவ நிகழ்ச்சிகளை விளக்குவது பால காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் தவிர ஏனைய அயோத்தியா, ஆரணிய, கிட்கிந்தா காண்டங்கள் அவ்வவ்விடங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் தலைமை கருதிப் பெயர் பெறுகின்றன. யுத்த காண்டம் இராம இராவணப் போரைக் குறிக்கின்றது. சுந்தரகாண்டம் இலங்கையில் நிகழினும் அப்பெயர் பெறவில்லை. இராமன் நேரடியாகப் பங்கேற்காத காண்டம் இக்காண்டம். காப்பியத் தலைவன், தலைவியரின் ஞான சௌந்தரியத்தை, அழகைப் புலப்படுத்துவதால் சுந்தரகாண்டம் என்னும் பெயர் பெற்றது என்பர். யுத்த காண்டம் என்னும் பெயர் தமிழ் இலக்கண மரபுக்குப் பொருந்தவில்லை என்று கூறி, அது இலங்கை காண்டம் என்று பெயரிடப்பட்டிருக்க வேண்டும் என்று முருகப்பா என்பவர் கூறுவார். இவ்வாறாக காப்பியத்துறையில் தண்டியலங்காரம் கூறும் காப்பிய இலக்கணத் தன்மைகளை கொண்டு கம்பராமாயணம் மிளர்வது சிறப்பாகும்.

2.9 கற்பனை வளம்

வடமொழி இராமாயணத்தில் சொல்லாதவற்றை விளக்கி அழகுபடுத்துவதிலும் கம்பருக்குச் சிறப்பு உண்டு. வால்மீகர் சொன்னவற்றையே புதிய அழகோடு விளக்கிக் கூறுவதிலும் கம்பருக்குச் சிறப்பு உண்டு. இயற்கைக் காட்சிகளை எடுத்துரைக்கும் வருணனைப் பகுதிகளிலும் கம்பரின் தனித்திறமை கம்பராமாயணத்தில் விளங்குகிறது.

கற்பனை வளம் இப்படி மிளிர்கிறது. மருத நிலத்தை (வயல் சார்ந்த நிலத்தை) வருணிக்கும் இடத்தில், ஓர் அரசன் அல்லது அரசி கலைமண்டபத்தில் வீற்றிருப்பதுபோல் மருதம் கலையின் சூழலில் வீற்றிருப்பதாகக் கூறுகிறார். குளிர்ந்த சோலையில் மயில்கள் தோகைவிரித்து நடனம் ஆடுகின்றன. தாமரைகள் விளக்குகள்ஏந்துவனபோல் செந்நிற அரும்புகளையும் மலர்களையும் ஏந்துகின்றன் வானத்து முகில்கள் முழவுபோல் ஒலிக்கின்றன.  குவளைமலர்கள் மலர்ந்துள்ள காட்சி, நாட்டியத்தைக் காணவந்தோரின் கண்கள் நோக்குதல்போல் உள்ளது; பொய்கைகளின் அலைகள் நாட்டிய அரங்கின் திரைகள்போல் உள்ளன நாட்டியத்துக்கு ஏற்ற பாடல்களைப் பாடுவனபோல் வண்டுகள் ஒலிக்கின்றன இத்தகைய கலையரங்கிலே மருதம் என்னும் அரசி வீற்றிருந்தாள் என்கிறார்.

அத்துடன் கம்பராமாயணத்தில் அதிமான இடங்களில் கற்பனை வளத்தில் மூழ்கி நாம் கற்பனை கவியை உணரக்கூடியதாக இருக்கும். கோசல நாட்டு வளமான வாழ்வை வர்ணிக்கும் இடத்தில் கம்பர் ஒப்பற்ற கற்பனையில் ஈடுபடுகிறார். பெண்கள் எல்லோரும் அழகு வடிவங்களாக விளங்குகிறார்களாம். அவர்கள் பொருட்செல்வம், கல்விச்செல்வம் இரண்டும் நிரம்பியவர்களாம். அதனால் கோசல நாட்டில், துன்புற்று வந்தவர்களுக்குக் கொடுத்து உதவுவதும் நாள்தோறும் விருந்தினரை உபசரிப்பதும் தவிர, வேறு நிகழ்ச்சிகள் இல்லையாம். மக்களின் வாழ்வில் குற்றங்கள் இல்லாமையால், எமபயம் இல்லை. மக்களின் மனம் செம்மையாக இருப்பதால் சினம் கொண்டு விதிக்கும் தண்டனை இல்லை, நல்ல அறம் தவிர, வேறு ஒரு தீமையும் இல்லாமையால் உயர்வு உண்டே தவிர வீழ்ச்சி அல்லது கேடு இல்லை.

 மக்களிடையே பொருள்களைக் கவர்ந்து செல்லும் கள்வர் இல்லாமையால், பொருள்களுக்குக் காவல் இல்லை. கொடுத்தால் பெற்றுக் கொள்ள வறியவர் இல்லாமையால், கொடுக்கும் கொடையாளர்களுக்கு நாட்டில் இடமில்லை. கல்லாதவர்கள் இல்லாதபடியால், கற்று வல்லவர்கள் என்று யாரையும் சிறப்பித்துக் கூற இடம் இல்லை; எல்லா மக்களும், எல்லா வகைச் செல்வமும் பெற்று விளங்குவதால், செல்வம் இல்லாதவர்கள் இல்லை செல்வம் உடையவர்களும் இல்லை. நாட்டில் வறுமை இல்லாத காரணத்தால், வண்மை (வள்ளல் தன்மை)

என்பதற்கு இடம் இல்லாமல் போயிற்று. பகைவர் என்று யாரும் இல்லாமையால், எதிர்த்துத் தாக்கும் வலிமையும் இல்லாமற் போயிற்று. யாரும் பொய் பேசாமையால், உண்மை என்பது சிறப்பாக விளங்கவில்லை. பலவற்றைக் கேட்டு அறியும் அறிவு எல்லோரிடமும் ஓங்கியிருப்பதால், அறிவின் சிறப்புக்கும் தனியிடம் இல்லை.

“வண்மை இல்லைஓர் வறுமை இன்மையால்

திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்

உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்

ஒண்மை இல்லைபல் கேள்வி ஓங்கலால்”

இது கோசல நாட்டுச் சிறப்பைக் கூறும் வருணனையாக இருந்த போதிலும் பொதுவாக நாட்டின்  எதிர்காலத்தைப்பற்றிய பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு பெரும்புலவர் கண்ட ஒப்பற்ற  கற்பனைக் காட்சியாக  இது அமைந்தள்ளது.

2.10 சுவைப்படக்கூறும் தன்மை

இக்காப்பியத்தில் மற்றுமொரு சிறப்பு கதைப்போக்கில் நிகழ்ச்சிகளை விளக்கி செல்வதாகும். அனுமன் சீதையைக் கண்டபின் கி~;கிந்தைக்குத் திரும்பிவந்து இராமனிடம் செய்தி கூறுகிறான். “இலங்கையில் கணவனைப் பிரிந்து தவம் புரியும் ஒரு நங்கையை மட்டும் காணவில்லை, ஐயா ! நல்ல குடிப்பிறப்பு என்ற ஒன்று, பொறுமை என்ற பண்பு ஒன்று, கற்பு என்ற பெயருடையது ஒன்று அங்கு மகிழ்ந்து நடம் புரிவதைக் கண்டேன்” என்று தன் ஆர்வமும் மகிழ்ச்சியும் சீதையின் உயர்வும், தூய்மையும் ஒருங்கே புலப்படும் வகையில் இராமனிடம் எடுத்துரைக்கிறான். மேற்கூறப்பட்ட உரையாடல் நேரடியாக ஒரு கதை நடைபெறுவதை போன்ற உணர்வினை ஏற்படுத்துவது கம்பராமாயணத்தின் சிறப்பாகும்.

2.11 உணர்ச்சி நடை

காப்பியத்தில் வரக்கூடிய பாத்திரங்கள் அனைத்தினதும் உணர்ச்சி வெளிப்பாடுகளை நாம் பொருளை பார்க்காமல் கூட புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். கதை மாந்தர்களின் உணர்ச்சிகளுக்கும் பண்புகளுக்கும் ஏற்றவாறு பாட்டுகளின் ஓசைகள் பல்வேறு வகையாக வேறுபடுதலை அவருடைய காவியம் முழுதும் காண்கிறோம். சூர்ப்பணகையின் ஒயிலான நடையையும் கவர்ச்சி தரும் மயக்கத்தையும் விளக்கும் பாடல்

பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்

செஞ்செவிய கஞ்சநமிர் சீறடியள் ஆகி

அஞ்சொலின் மஞ்ஞையென அன்னமென மின்னும்

வஞ்சியென நஞ்சமென வஞ்சமகன் வந்தாள் 

 இதனைப்போன்றே இராவணனுடைய மான உணர்ச்சியும் கடுஞ்சினமும் புலப்படுத்தும் பாடல்:

சுட்டது குரங்கெரி சூறை யாடிடக்

கெட்டது கொடிநகர் கிளையும் நண்பரும்

பட்டனர் பரிபவம் பரந்த தெங்கணும்

இட்டதில் வரியணை இருந்த தென்னுடல்

இவற்றில் காணப்படும் நடையும் ஓசையும் பாத்திரங்களில் உணர்ச்சிகளை படம்பிடித்து காட்டுகின்றன. இராவணன் போர்க்களத்தில் விழுந்து மாண்டு கிடக்கும் காட்சியைக் கூறும் இடத்திலும் இவ்வாறு ‘அடங்க’என்ற ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பக் கூறி, அதன் ஒலியால் இராவணனது வீரம் முதலிய எல்லாம் அடங்கிய காட்சியை நெஞ்சில் பதியவைக்க கூடியதாக கம்பராமாயணம் பாடல் காணப்படுகிறது.

வெம்மடங்கள் வெகுண்டனையை சினம்அடங்க மனம்அடங் வினையு வீயத்

தெம்மடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க மயல்அடங்க ஆற்றல் தேயத்

தம்அடங்கு முன்வரையும் தலை அடங்க நிலைஅடங்கச் சாய்த்த நாளின்

மும்மடங்கு பொலிந்தனஅம் முறைதுறந்தான் உயிர்துறந்த முகங்கள் அம்மா

“பொல்லாத சிங்கம் கோபம் கொண்டு எழுவது போன்ற இராவணனுடைய சினம் அடங்கியது, மனம் அடங்கியது, வினையும் அழிந்தது,  பகைவர்கள் அழிவதற்குக் காரணமான நீண்ட கைகளின் வீரச்செயல் அடங்கியது, அவனது காம மயக்கம் அடங்கியது, ஆற்றல் தேய்ந்தது, தம் புலன்கள் அடங்கிய முனிவர்களையும் தலைமை அடங்குமாறும் தவநிலைமை அடங்குமாறும் அடக்கிய அந்தக் காலத்தில் இராவணன் முகங்கள் பெற்றிருந்த பொலிவைவிட, இன்று அவன் உயிர் துறந்து வீழ்ந்து கிடக்கும்போது அந்த முகங்கள் மூன்று மடங்கு பொலிவு பெற்றுவிட்டன” என்கிறார். அந்த இராவணனுடைய வீரமும் சினமும் செயலும் முதலான எல்லாம் அடங்கிய காட்சியைக் கண்டு கம்பருடைய உள்ளமே உணர்ச்சி வயப் பட்டதனால், இவ்வாறு ஒரு சொல்லே திரும்பத் திரும்ப அமைந்து உள்ளத்தைத் தொடுகிறது எனலாம். இவ்வாறு கம்பராமாயணம் முழுதும் ஒவ்வொரு பகுதியும் சொல் நயமும் பொருள் நயமும் கற்பனை வளமும் நிரம்பிச் சுவைமிகுந்த காப்பியமாய்த் திகழ்கிறது.

2.12 பாத்திரப்படைப்பு 

கம்பராமாயணத்தில் பாத்திர படைப்பில் கம்பன் வால்மீகியை விடவும் மிஞ்சி நிற்பதை காணலாம். கம்பன் பாத்திரங்களை தமிழ் பண்பாடு வெளிப்படும் விதமாகவே படைத்துள்ளான். வால்மீகி பாத்திரங்களில் பல்வேறு குறைப்பாடுகள் காணப்பட்டாலும் கம்பனின் படைப்பில் அக்குறைப்பாடு அற்று நாயகப் பாங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று  ஐயர் சுட்டிக்காட்டுகிறார். இதற்கு உதாரணமாக அவர் சீதையின் பாத்திர வார்ப்பைத் தமது கட்டுரையில் கூறிச் செல்லுகின்றார். மாரீசன் பொய்க்குரலிட்டுச் சத்தம் செய்தவுடன் இராமனுக்கு உதவிக்கு செல்லாத இலக்குவனைப் பார்த்து, சீதை சொல்லும் வார்த்தைகளை, வால்மீகியிடமிருந்தும் கம்பனிடமிருந்தும் எடுத்துக்காட்டும் ஐயர், கம்பன் எவ்வாறு வார்த்தைகளை அளவாக நிறுத்துப் போடுகிறான் என்பதைச் சுட்டுகிறார்.

வான்மீகியின் சீதை “என்னைச் சுவீகரிக்க வேண்டும் என்றே தான் நீ இராமனிடம் செல்லாமல் இங்கே நிற்கிறாய்” என்றும், “நீ தனியாக இராமனைப் பின்தொடர்ந்து காட்டுக்கு வந்திருப்பதைப் பார்த்தால் என்னைக் காமித்தோ, அல்லது பரதனுடைய ஏவுதலினாலோதான் வந்திருக்கிறாய் என நினைக்கிறேன்” என்றும் இலக்குவனிடம் கூறுகின்றாள் (குப்புசாமி, 2003: 53, 54). ஆனால் கம்பனுடைய சீதை இவ்வாறு அபசுரமான வார்த்தைகளைச் சொல்வது இல்லை எனக்கூறும் வ.வே.சு.ஐயர், ‘குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன் மற்றை வாள் அரக்கன் புரி மாயையால் இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல் நிற்றியோ இளையோய் ஒரு நீ”  என்று கம்பன் காட்டும் சீதை நாகரீகமாக உரையாடும் பான்மையை எடுத்துக்காட்டுகின்றார். இவ்வாறாக நாகரீக பாங்கில் பாத்திர படைப்பின் சிறப்பை கம்பராமாயணத்தில் பாரக்கலாம்.

முடிவு

இவ்வாறாக கம்பணினால் படைக்கப்பட்ட கம்பராமாயணம் மேற்கூறப்பட்ட எல்லா அம்சங்களிலும் சிறந்து விளங்குவதுடன், தமிழ் மரபிற்கு பொருத்தமான கதைக்களத்தையும், காப்பிய மரபுகளை பின்பற்றியும் படைக்கப்பட்ட மிகச்சிறந்த காப்பியம் எனலாம். எனவேதான் இன்று வரையும் தமிழ் காப்பிய வரலாற்றில் தனித்துவமிக்க காப்பியமாக கம்பராமாயணம் விளங்குகிறது.

Leave a Comment