கல்வி ஆய்வுச் செயன்முறை

அறிமுகம்

இன்று அனைத்துத் துறைகளிலும் ஆய்வு என்பது முக்கியம் பெற்றும் பிரபல்யமடைந்தும் வருகிறது. ‘ஆய்’ எனும் வினைச்சொல்லில் இருந்து ஆய்வு எனும் பதம் மருவியது. ஒன்றை மீண்டும் மீண்டும் தேடுவதையே நாம் ஆராய்ச்சி என்கிறோம் (சித்திரபுத்திரன் மற்றும் சண்முகம் 2005). ஆராய்ச்சியானது, பல துல்லியமான விஞ்ஞானத் திறன்களை உள்ளடக்கியதொரு விசாரணை என தங்கசாமி (2012) ஆய்வுக்கு விளக்கம் தருகிறார். புலமைசார்ந்த இதேபோன்று Cresswel (2011) சிறிய தர்க்கரீதியான (காரணகாரிய) படிமுறைகளைக் கொண்ட ஒரு செயன்முறையினை ஆய்வு என்கிறார். இவர்கள் கூறுவது போன்று, ஓர் ஆய்வானது, அது சிறியதாகவோ பெரியதாகவோ இருப்பினும் பல்வேறு ஒழுங்கு முறையான கட்டங்களையும் படிநிலைகளையும் கொண்டதாக விளங்குகிறது. ஆய்வுகளில் ஈடுபடும் நபர்கள், இந்தப் பல்வேறான கட்டங்களையும் படிநிலைகளையும் சரிவரப் புரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும். இந்தவகையில், கல்விப்புலத்தில் உள்ளவர்களினைக் கருத்தில் கொண்டு. கல்வியியலில் ஆய்வுச் செயன்முயன்முறை இக்கட்டுரையில் எடுத்து நோக்கப்படுகிறது. முதலில், கல்விசார் ஆய்வு பற்றிய அறிமுகத்தையும் அதனைத் தொடர்ந்து ஆய்வுச் செயன்முறைகளின் பல்வேறு படிநிலைகளையும் நோக்குவோம்.

கல்வி சார் ஆய்வுகள் (Educational Researches)

ஒரு தலைப்பு அல்லது எழுவினா தொடர்பாக எமது விளக்கங்களை அதிகரித்துக் கொள்வதற்காக தகவல்களை சேகரித்து பகுப்பாய்வு செய்யும் ஒரு செயன்முறையாக ஆய்வினை என Cresswel (2011) வரைவிலக்கணம் செய்கிறார் இந்தவகையில், கல்விப்புலத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் (Problems), எழுவினக்கள் (Issues) தொடர்பாக கவனம் செலுத்தி அவை தொடர்பாக மேலதிக விளக்கங்களைப் பெரும் பொருட்டு மேற்கொள்ளப்படும் சகலவிதமான ஆய்வுகளும் கல்விசார் ஆய்வுகள் எனப்படும்.

கல்வியியலில் பல்வேறு கிளைத்துறைகள் காணப்படுகின்றன. இவற்றுள், கல்வி உளவியல், கல்வி சமூகவியல், கல்வி முகாமைத்துவம். ஆசிரியர்கல்வி, கல்விசார் வழிகாட்டலும் ஆலோசனை கூறலும், தொலைக்கல்வி கல்வியின் அடிப்படைகள். முன் பிள்ளைப் பருவக் கல்வி. ஆரம்பக் கல்வி, விஞ்ஞானக் கல்வி, கல்விசார் கணிப்பெட்டும் மதிப்பீடும், கலைத்திட்டமும் போதனையும்.

ஒப்பீட்டுக் கல்வி, கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், கல்வித் தொழினுட்பம், கல்வியில் பால்நிலை, கல்வி சார் நிருவாகம், விசேட கல்வி, தொழில்சார் கல்வி என்பன அவற்றுள் சிலவாகும். தேவைகள்

இங்கு குறிப்பிட்ட கல்வியியல் கிளைத்துறையில் இருந்து காலத்தால் முனைப்பு பெறும் பிரச்சினைகள், எழுவினாக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்ப்படும் ஆய்வுகளை கல்வியியல் ஆய்வுகள் எனலாம். இவ்வாய்வுகள், மாணவர் கற்றல், மாணவர் நடத்தைகள், வகுப்பறை இயக்கச் செயற்பாடுகள், ஆசிரியர் கற்பித்தல் செயற்பாடுகள், ஆசிரியர் திறன்கள் மற்றும் தேர்ச்சிகள், ஆசிரியர் பயிற்சி, கலைத்திட்டத் திட்டமிடல், கலைத்திட்ட விருத்தி, கலைத்திட்ட அமுலாக்கம். பாடசாலை முகாமைத்துவம். அதிபர் தலைமைத்துவம், என கல்வியுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய இன்னோரன்ன சுல்வியுடன் சார்ந்ததாக மேற்கொள்ளப்படுவனவாக காணப்படலாம். மேலும், கல்விசார் அறிவு. கற்றல்-கற்பித்தல் செயன்முறைகளின் முன்னேற்றம், அதற்குத் தேவையான கருவிகள், கற்றல்-கற்பித்தல் முறைகளைத் விருத்தி செய்தல் போன்றவற்றினை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் விசாரணைத் துறையே கல்விசார் ஆய்வு எனவும் கல்வியியல் ஆய்வுகளுக்கு விளக்கம் தரப்படுகின்றது.

கல்வியியல் ஆய்வு நோக்கங்கள்

கல்விசார் ஆய்வுகள் பல்வேறு நோக்கங்களின் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக கல்விப்புலத்தில் காணப்படுகிற நடைமுறைகளை மேம்படுத்தல். தற்போதைய அறிவில் காணப்படும் இடைவெளிகளை நிரப்புதல், தற்போதைய அறிவினை விரிவாக்குதல், கல்விசார் விடயங்களில் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவினை மீண்டும் பரிசோதித்துப் பார்த்தல். ஏற்கனவே பிறரால் விருத்தி செய்யப்பட்ட அறிவுக்கு மேலும் தனிநபர்களின் பங்களிப்புக்களைச் சேர்த்தல், கொள்கை வகுப்பாளர்களுக்கு கல்விசார் நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இனங்கண்டு புதியகண்டுபிடிப்புக்களை அறிவித்தல் போன்றன இதன் சில நோக்கங்களாகும்.

கல்விசார் ஆய்வுச் செயன்முறை

கல்விசார் ஆய்வுச் செயன்முறைக்கு Cresswel (2002) பின்வருமாறு விளக்கம் தருகிறார். ‘ஓர் ஆய்வுப் பிரச்சினையை அல்லது எழுவினாவை இனங்காண்பதில் இருந்து தொடங்கும் ஒரு சுழற்சி (வட்ட) படிநிலைகளைக் கொண்ட செயன்முறையே கல்விசார் ஆய்வுச் செயன்முறை ஆகும். இச்செயன்முறையில் பின்வரும் ஆறு படிநிலைகளை Cresswel (2011) ஆறு வகையான ஆய்வுப் படிமுறைகளை குறிப்பிட்டுக் காட்டுகின்றார். அவையாவன.

  1. ஆய்வுப் பிரச்சினையை இனங்காணுதல் (Identifying a research problem)
  2. சார்பிலக்கிய மீளாய்வு (Reviewing the literature)
  3. ஆய்வு நோக்கங்களை குறிப்பிடுதல் (Specifying a purpose for research)
  4. தரவுகளை சேகரித்தல் (Collecting data)
  5. தரவுகளை பகுப்பாய்வு செய்து அவற்றுக்கு விளக்கமளித்தல் (Dati analyzing and interpreting)
  6. ஆய்வினை அறிக்கைப்படுத்தலும் மதிப்பீடு செய்தலும் (Reporting and evaluating research)

ஆய்வுப் பிரச்சினையை இனங்காணுதல்

கல்வியில் ஓர் ஆய்வுப் பிரச்சினையை கண்டறிவது ஆய்வுச் செயன்முறையில் மிக முக்கியமான படியாகும். நன்கு வரையறுக்கப்பட்ட ஆய்வுப் பிரச்சினை உங்கள் ஆய்வுக்கான திசையை தீர்மானிக்கிறது. மேலும், உங்கள் ஆய்வு முயற்சிகளை ஆர்வமுள்ள ஒரு பகுதியில் கவனம் செலுத்த உதவுகிறது. கல்வியில் ஒரு ஆய்வுப் பிரச்சினையை கண்டறிய உதவும் படிகள் வருமாறு

நீங்கள் ஆய்வினை மேற்கொள்ள விரும்பும் கல்வியியலின் கிளைத்துறை தொடர்பாக போதுமான விளக்கங்களை பெற்றுக் கொள்ளுங்கள். மேலே பல்வேறு கல்வியியல் துறைகள் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளன. இவற்றுள், உங்கள் அனுபவம். விருப்புகள், ஆர்வம் போன்றவற்றின் அடிப்படையில் உங்களுக்கு பரிச்சியமான கல்வித்துறைபற்றி மேலும் விளக்கங்களை பெற்றுக் கொள்ளுங்கள். குறித்த துறையில் தற்போதைய காலகட்டத்தில் முனைப்பு பெறும் அம்சங்கள். எழுவினாக்கள் போன்றன தொடர்பாக தேடித் பாருங்கள். இதற்காக குறித்த துறையில் வெளிவந்துள்ள அண்மைக்கால ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் போன்றவற்றை வாசிக்க வேண்டி ஏற்படும்.

தற்போதுள்ள இலக்கியத்தை மீளாய்வு செய்தல்: நீங்கள் ஆய்வுக்காக தெரிவு செய்த கல்வித்துறையில் தற்போது எவ்வாறான ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் செய்யப்படாமல் விடுபட்ட விடயங்கள் காணப்படுகின்றனவா? (தற்போதைய ஆய்வு இடைவெளி) அல்லது தற்போதைய ஆய்வுகளில் வரையறுக்கப்பட்ட அல்லது முரண்பட்ட தகவல் உள்ளனவா, பதிலளிக்கப்படாத ஆய்வு வினாக்கள் காணப்படுகின்றதா? அல்லது மேலும் ஆய்வுக்கான வாய்ப்புகள் உள்ள பகுதிகள் காணப்படுகின்றதா? என்பதை கண்டறியும் நோக்கில் சார்பிலக்கிய மீளாய்வை மேற்கோள்ளல் வேண்டும்.

ஆய்வு நிபுணர்களுடன் கலந்தாலோசித்தல்: நீங்கள் கற்கும் பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் உள்ள ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் அல்லது கல்வித்துறை நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெறவும். இது சாத்தியமான ஆய்வு பிரச்சனைகளை கண்டறிய உதவும். கல்விச் சூழமைவினை பரிசீலித்து பார்த்தல் நீங்கள் ஆய்வு செய்ய விரும்பும் கல்விச் சூழமைவு, ஆய்வுக்காக தெரிவு செய்த ஆய்வுப் பிரச்சினையை மேற்கொள்வதற்குப் பொருத்தமானதா என உறுதிசெய்து கொள்ளுங்கள்.

சமூக எழுவினாக்கள் அல்லது காலத்தால் முக்கியம் பெறும் எழுவினாக்களை இனங்கண்டு அவற்றை முன்னிலப்படுத்தல் : கல்வி பெரும்பாலும் பரந்த சமூக மற்றும் சமூக பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட வேண்டி உள்ள தற்போதைய சமூக அக்கறைகள், கொள்கை மாற்றங்கள். நடைமுறைகள், அல்லது கல்வி சார்ந்த சவால்களை கண்டறிந்து அவற்றை ஆய்வு செய்ய முயற்சி செய்தல், உதாரணமாசு, தற்காலத்தில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு அல்லது புதிய கற்பித்தல் முறைகள், எண்ணிம (டிஜிட்டல்) திறன்கள், STEM கல்வி முறை, செயற்கை நுண்ணறிவு, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் personalized learning, Augmented learning, flipped classroom, blended learning விடயங்கள் எனலாம்

கல்வியியல் ஆய்வு

ஆய்வின் முக்கியத்துவத்தைக் கவனியுங்கள்: நீங்கள் மேற்கொள்ளவுள்ள ஆய்வுப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை மதிப்பிடுங்கள். உங்கள் ஆய்வு ஏற்கனவே இருக்கும் அறிவுக்கு பங்களிக்குமா? கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அல்லது ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இது நடைமுறை தாக்கங்களை ஏற்படுத்துமா? போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி ஆய்வின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்து கொள்க.

ஓர் ஆய்வுப் பிரச்சனை கூற்றினை எழுதுக: மேற்கூறிய வழிகாட்டல்களின் அடிப்படையில் ஆய்வுப் பிரச்சினையொன்றை நீங்கள் கண்டறிந்ததும், நீங்கள் ஆராய விரும்பும் பிரச்சினையொன்றை, அதன் தொடர்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை தெளிவாக வரையறுக்கும் வகையில் அதனை ஆய்வுப் பிரச்சினைக் கூற்றாக எழுதிக் கொள்ளக.

முழு அளவிலான ஆய்வில் ஈடுபடுவதற்கு முன். உங்கள் ஆய்வுப் பிரச்சனை மற்றும் ஆய்வு முறையியல்களை களை சோதிக்க ஒரு சிறிய முன்னோடி ஆய்வினை மேற்கொண்டு குறித்த பிரச்சினை உண்மையில் காணப்படுகின்றதா, குறித்த ஆய்வினை மேற்கொள்ள மூடியுமா என பரீட்சித்து பார்க்கலாம்.

Leave a Comment