எழுத்துக்களின் பரம்பல் |
அறிமுகம்
தமிழ் மொழிப்பரம்பல் காலகட்டங்களை நாம் ஆரம்ப காலம் இடைக்காலம் தற்காலம்; என்ற அடிப்படையில் ஆராயலாம். இந்த மொழிப்பரம்பல் கோட்பாட்டை முதன் முதலில் முன்வைத்தவர் தொல்காப்பியராவார். இவருக்கு பின் நன்னூல் ஆசிரியரான பவனந்தி முனிவரும் இவருக்கு பின் ஆ.வேலுபிள்ளை, ஆறுமுகநாவலர் மற்றும்; பேராசிரியர் நுஃமான் ஆகிய சமகால இலக்கணக்காரர்களும் தற்கால மொழி ஆய்வுகளை மேற்கொண்டு மொழிப்பரம்பல் கோட்பாட்;டை விரிவுபடுத்தினர்.
தமிழ்ச் சொற்களில் முதலில் இடம்பெறக் கூடிய எழுத்துக்கள் முதல்நிலை எழுத்துக்கள் என்றும் சொற்களின் இறுதியில் இடம்பெறும் எழுத்துக்கள் இறுதிநிலை எழுத்துக்கள் என்றும் சொற்களில் இடையில் இடம்பெறும் எழுத்துக்கள் இடைநிலை எழுத்துக்கள் என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கூறப்பட்ட எழுத்துக்கள் தொடர்பாக இலக்கணக்காரரர்களிடையே பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்து வருவதை நாம் காணமுடியும்.
முதல்நிலை எழுத்துக்கள்
முதல்நிலை எழுத்துக்கள் பற்றிய விளக்கத்தை முதன்முதலில் முன்வைத்தவர் தொல்காப்பியர். இவர் தனது தொல்காப்பியத்தில் மொழி முதல் நிலை எழுத்துக்கள் பற்றி பின்வரும் சூத்திரத்தை குறிப்பிடுகின்றார்
‘‘பன்னிரு உயிரும் மொழிமுதல் ஆகும்
உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா’’
(சூத்திர இலக்கம் – 59)
அதாவது பன்னிரு உயிர் எழுத்துக்களும் மொழிக்கு முதல் வரும் என்கிறார் எடுத்துக்காட்டாக
அ – அன்னை உ – உடல் ஐ – ஐயம்
ஆ – ஆமை ஊ – ஊமை ஒ – ஒழுக்கம்
இ – இரும்பு எ – எரும்பு ஓ — ஓடை
ஈ – ஈகை ஏ – ஏழை ஒள – ஒளடதம்
2.3 மேலும் ‘உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா’
இதன்படி உயிர்மெய் எழுத்துக்கள் முதலில் வரும் என்றும் உயிர்மெய் அல்லாத அதாவது தனிமெய்கள் (க் , ச், ட் , ப்) மொழிக்கு முதலில் இடம்பெறாது எனக் குறிப்பிடுகின்றார்.
தொல்காப்பியரின் கருத்துப்படி புள்ளிபெற்ற மெய்கள் மொழிக்கு முதலில் வராது என்ற கருத்தானது தற்காலத்தில் மாற்றம்பெற்றுள்ளதை காணலாம் ஏனெனில் பிறமொழி சொற்களை குறிப்பதற்கு தனிமெய்கள் மொழிக்கு முதலில் இடம்பெறுகிறது.
உதாரணம் – ஸ்பெயின் , ஸ்டிக்கர்,
தொல்காப்பியத்திற்கு பின்னர் இலக்கணம் வகுத்த நன்னூலார் தொல்காப்பியத்துடன் சில இடங்களில் ஒன்றுபட்டும் சில இடங்களில் வேறுபட்டும் முதன்நிலை கோட்பாட்டை முன்வைக்கின்றார். நன்னூலார் தொல்காப்பியத்தை போன்றே உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டும் மொழிக்கு முதலில் வரும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்.
‘ச’கரம்
சகரத்தை பொருத்தவரை தொல்காப்பியர்
“சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அ ஐ ஒள எனும் மூன்றலங் கடையே”
சகரம் அ, ஐ, ஒள எனும் மூன்று உயிரைத் தவிர ஏனைய உயிருடன் சேர்ந்து வரும். என தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
உதாரணம் : சால்பு, சிறப்பு, சீறுக, சுருட்டு, சூழ்க, செயல், சேவடி, சொர்க்கம், சோறு
என்றாலும் தொல்காப்பியர் முதலில் வராது என்று கூறிய ச , சை , சௌ ஆகிய எழுத்துக்கள் சங்க, சங்கமருவிய கால இலக்கியங்களில் இடம்பெற்றிருப்பதை நாம் காணலாம். உதாரணமாக – சட்டி , சக்கரம்
ஆனால் சகர வகைப்பாட்டில் நன்னூலார் தொல்காப்பியரை விட மாற்றுக்கருத்தை தெரிவித்துள்ளார் அதாவது சகர மெய்யானது பன்னிரெண்டு உயிர் எழுத்துக்களுடன் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும் என்கிறார்.
‘பன்னீ ருயிருங் கசதந பமவய
ஞஙவீ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல்’ – (சூ – 102)
அதாவது உயிர்மெய் எழுத்துக்களில் க்,ச்,த்,ந்,ம்,ப் இவ் ஆறு தனிமெய்யும் உயிர் உடன் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும் எனக் கூறுகிறார்.
‘வ’கரம்
வகரத்தை பொருத்தவரை வு வூ வொ, வோ ஆகிய நான்கு வகரங்களும் தவிர்ந்த ஏனைய எட்டு வகர மெய்களும் மொழிக்கு முதலில் வரும் என தொல்காப்பியரும்
(தொல் – 63), பவனந்தி முனிவரும் (நன்-103) தனது சூத்திரங்களில் வாயிலாக குறிப்பிடுகின்றனர்.
தொல்காப்பிய சூத்திரம் –
‘உ ஊ ஒ ஓ என்னும் நான்குயிர் வ என் எழுத்தோடு வருதலில்லை’ என்ற சூத்திரத்தில் கூறப்படுகிறது
நன்னூல் சூத்திரம்
உஊ ஒஓ வலவொடு வம்முதல். (48)
ஆனால் வராது என்று கூறிய வகர மெய்கள் தற்காலத்தில் பிறமொழி சொற்களை குறிப்பதற்கு மொழிக்கு முதலில் பயன்படுகிறது
உதாரணம் – வோட் , வொட்சன் , வொய்ஸ் ,
‘ய’கரம்
யகரத்தை பொருத்தவரை ‘ஆவோ டல்லது யகர முதலாகா’ என்ற சூத்திரத்தின் படி யகரம் ஆகாரத்துடன் மட்டும் மொழி முதல் வந்தது என்று தொல்காப்பியம் கூறுகிறது
உதாரணம் – யான் , யாண்டு
என்றாலும் யவனர் முதலிய சொற்களை சங்க இலங்கியங்களிலே காணமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
பவனந்தி மனிவர் ய,யா,யு.யூ,யோ,யொ யௌ ஆகிய ஆறு யகர மெய்களும் உயிருடன் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும் என குறிப்பிடுகிறார்.
“அஆ உஊ ஓஒள யம்முதல்.” (104)
உதாரணம் – யவம் , யாண்டு , யுகம் , யூகம் , யோகம், யௌவனம்
தற்காலத்தில் யூன் யூலை என்று மாதத்தை குறிக்கவும் பயன்படுகிறது.
‘ஞ’கரம்
ஞகர மெய்களில் தொல்காப்பியர் ஞா , ஞி , ஞொ ஆகிய உயிர்மெய் எழுத்துக்கள் மாத்திரமே மொழிக்கு முதலில் வரும் எனக் குறிப்பிடுகின்றார்.
(‘ஆ எ ஓ எனும் மூவுயிர் ஞகாரத் துரிய’)
உதாரணம்- ஞானம் , ஞெகிழு , ஞொல்கிற்று
பவனநந்தி முனிவர் ஞ, ஞா ,ஞி, ஞொ ஆகிய நான்கு எழுத்துக்கள் மாத்திரமே மொழிக்கு முதலில் வரும் என்கிறார்.
“அஆ எஒவ்வோ டாகு ஞம்முதல்” – (105)
தற்காலத்தை பொருத்தவரை பேராசிரியர் நுஃமான் ஞகரம் ஆகாரத்துடன் மட்டுமே தற்கால தமிழில் பயன்படுத்தப்படுகிறது என சுட்டிக்காட்டுகிறார்.
உதாரணம் – ஞாயிறு , ஞாலம் , ஞாபகம் , ஞானம்
அத்துடன் ஞமலி ஞிமிறு , ஞோள்கு போன்ற பழந்தமிழ் சொற்கள் தற்காலத்தில் பாவனையில் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
‘ங’கரம்
நன்னூலார் ங னம் ஆனது இடத்தை குறித்து நிற்பதால் ஏ,யா எனும் வினா எழுத்துக்களை அடுத்தும் அ , இ , உ எனும் சுட்டெழுத்துக்களை அடுத்தும் மொழிக்கு முதலில் வரும் என
“சுட்டியா வெகர வினாவழி யவ்வை
யொட்டி ஙவ்வு முதலா கும்மே.” – (சூ -106).
சூத்திரத்தின் ஊடாக எடுத்துகாட்டுகிறார்.
உதாரணம் – அங்ஙனம் , இங்ஙனம்
தற்காலத்தை பொருத்தவரை தொல்காப்பியம் மற்றும் நன்னூலில் மொழிக்கு முதலில் வராது எனக்குறிப்பிட்ட பல எழுத்துக்கள் இன்று மொழிக்கு முதலில் வருவதாக சமகால மொழியியல் ஆய்வாளரான போராசிரியர் நுஃமான் அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்
ட , ற , ர , ல ஆகிய எழுத்துக்கள் முதலில் வருகின்றது
உதாரணம் –
ட – டம்லர், டை, டொக்டர், டோச், டூப்பு,
ற – றம்புட்டான், றாத்தல், றோட்டு,
ர – ரசம், ரசனை, ரீங்காரம், ரீல்,
ல – லயம், லவ், லாம்பு, லில்லி, லீலை, லுங்கி, லூசு, லைன்
ஜ,ஷ,ஸ,ல ஆகிய கிரந்த எழுத்துக்கள் தமிழில் முதலில் வருகின்றது
ஜ – ஜனம், ஜல்லிக்கட்டு, ஜனநாயகம்,
ஷ – ஷரத்து, ஷரீயத்து
ஸ – ஸலாம், ஸாஸ்திரம்
ஹ – ஹர்தால், ஹராம், ஹஜ், ஹிம்சை, ஹோமியோபதி
மெய் எழுத்துக்கள் சொல்லின் முதலில் வருவதில்லை என இலக்கணக்காரர்கள் கூறினாலும் அவைகள் தத்தம் பெயரை குறிக்கும் போது மொழிக்கு முதலில் வருகின்றது.
உதாரணம் – ஙகரம், ணனரம், ழகரம்,
அத்துடன் தற்காலத்தில் பிரெஞ்சு நாட்டு பெயர்களை குறிப்பிடும் போது ழகரத்தை முதன்நிலையில் பயன்படுத்துகின்றனர்
உதாரணம் – ழான் லக்கான், ழீன் பால்
இதனைப்போலவே மெய் எழுத்தக்களும் தற்காலத்தில் மொழிக்கு முதலில் வருகின்றது
உதாரணம் – ஸ்பெயின், ஸபூன்
இடைநிலை எழுத்துக்கள்
சொல்லாக்கத்தில் சொல்லின் இடையில் தனித்தோ பிற எழுத்துக்களுடன் இணைந்தோ வரக்கூடிய எழுத்துக்கள் இடைநிலை எழுத்துக்கள் எனப்படும். மெய் எழுத்துக்கள்
இரட்டித்து அல்லது பிற மெய்களுடன் இணைந்து சொல் இடையில் வருவதை இடைநிலை
மெய்மயக்கம் என்று தமிழ் இலக்கண ஆசிரியர்கள் கூறுவர்.
இடைநிலை மெய்மயக்கம் இரண்டு வகைப்படும் என்கிறார் தொல்காப்பியர்
“அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின்
மெய்மயக் குடநிலை தெரியுங்காலை”
01. உடன்நிலை மெய்மயக்கம் : ஒரே மெய் இரட்டித்து வருவது உடன்நிலை
மெய்மயக்கம் எனப்படும்
02. வேற்று நிலை மெய்மயக்கம் : வெவ்வேறு மெய்கள் இணைந்து வருவது வேற்றுநிலை மெய்மயக்கம் எனப்படும்.
இவ்வாறு வரையறுக்கும் தொல்காப்பியல், உடநிலை மெய்மயக்கத்தில் எந்த எந்த எழுத்துக்கள் மயங்கும் என்றும் வேற்றுநிலை மெய்மயக்கத்தில் எந்த எந்த எழுத்துக்கள் மயங்கும் என்பதை தெளிவாக வரையறுத்துள்ளார். எடுத்துகாட்டாக
“மெய்ந்நிலைச் சுட்டி னெல்லா வெழுத்துந்
தம்முறட றாம்வரூஉம் ரழவலங் கடையே”
என்பதன் மூலம் ர், ழ் தவிர்ந்த ஏனைய எல்லா மெய்களும் உடன்நிலை மெய்மயக்கத்தில் வரும் என்கிறார். இதனைபோன்றே நன்னூலாரும் கீழ்வரும் சூத்திரங்கள் மூலம் இடைநிலை எழுத்துக்கள் தொடர்பாக விடயங்களை எடுத்துக்காட்டியுள்ளார.;
சதப வொழித்த வீரேழன் கூட்டம்
மெய்ம்மயக் குடனிலை ரழவொழித் தீரேட்
டாகுமிவ்விருபான் மயக்கு மொழியிடை
மேவு முயிர்மெய் மயக்கள வின்றே – (நூற்பா – 105)
பொதுவாக 12 உயிர் எழுத்துக்களும் சொல் இடையில் வருகின்றது
எடுத்துக்காட்டாக
அ – கடல் , அவலம் ஆ – எல்லாம்
இ – நிறம், பணிவு ஈ – தீமை
உ – அருள் ஊ – பூட்டு
எ – வெள்ளி ஏ – போவேன்
ஐ – இளைஞன் ஒ – கொடுமை
ஓ – இரவோடு ஒள – சௌரம்
மேலும் ங தவிர்ந்த 17 மெய் எழுத்துக்களும் சொல்லின் இடையில் இரண்டு உயிர்களுக்கு இடையில் தனித்து வருகின்றன. எடுத்துக்காட்டாக
க – நகல் ச – பசங்க ட – இடம் த – காதல்
ப – சபதம் ற – இறைவன் ஞ – வளைஞன் ண – இலக்கணம்
ந – பெறுநர் ம – காமம் ன – வன்மை ய – இயல்
ர – மரம் ல – பலம் வ – கவன் ள – குளம்
ழ – எழு
இவ்வாறாக மேற்கூறப்பட்ட இடைநிலை எழுத்துக்களானது இரண்டு வகையாக பிரிபடுகிறது என நன்னூலாரும் குறிப்பிடுகிறார்.
1.0 உடன்நிலை மெய்மயக்கம்
ஒரே மெய் இரட்டித்து வருவது உடன்நிலை மெய்மயக்கம் எனப்படும். ர ழ தவிர்ந்த 16 மெய்களும் சொல் இடையில் இரட்டித்து வரும் எடுத்துக்காட்டாக
க்க் – சொல்லாக்கம் ச்ச் – பேச்சு
ட்ட் – மட்டம் த்த் – சுத்தம்
ப்ப – கப்பி ற்ற் – வெற்றிலை
ங்ங் – இங்ஙனம் ஞ்ஞ் – விஞ்ஞானம்
ண்ண் – தண்ணீர் ந்ந் – செந்நெறி
ம்ம் – அம்மா ன்ன் – தன்னை
ய்ய் – செய்ய ல்ல் – முல்லை
வ்வ் – இவ்விதம ள்ள் – பள்ளம்
கிரந்த எழுத்துக்களும் சொல்லின் இடையில் இரட்டித்து வருகிறது எடுத்துக்காட்டு
ஹஜ்ஜு, லஜ்ஜை, பஜ்ஜி
வேற்றுநிலை மெய்மயக்கம் –
வெவ்வேறு மெய்கள் இணைந்து வருவது வேற்றுநிலை மெய்மயக்கம் எனப்படும்
2.1 தமிழ் சொற்களில் க,ச,த,ப தவிரந்த 14 மெய்களும் சொல் இடையில் குறிப்பிட்ட சில பிற மெய்களுடன் இணைந்து வரும். இதனையே நன்னூலார் “டறமுன் கசப மெய்யுடன் மயங்கும்”; (நூற்பா: 113) எனக் குறிப்பிடுகிறார்
எடுத்துக்காட்டாக
டக் -வெட்கம்
றக் – பற்கள்
டச் -சொல்லாட்சி
டப் -நுட்பம்
ற்ப் – நற்பு
ம, ப இரண்டும் சேர்ந்தும் மயங்கும்
ம – வம்பு ,தம்பி)
ந,த ஆகிய எழத்துக்களும் ஒன்றாக மயங்கும்
ந்த் – பந்தம்
ந்த் – வந்து
ப்,ற்,க்,ச்,ம் ஆகியவற்றுடன் சேர்ந்து ன கரம் மயங்கும் இதனையே நன்னூலார்
ணனமுன் னினங்கச ஞபமய வவ்வரும் (நன்னூல்-: 114)
ன்ப் – மான்பு ன்ற் – சென்று
ன்க் – நன்கு ன்ச் – வன்செயல்
ன்ம் – தன்மை
ப்,ற்,க்,ம் ஆகிய மெய்களுடன் ண் மயங்கும்
ண்ப் – வெண்பா ண்ட் – கண்டேன்
ண்க் – விண்கலம் ண்ம் – பெண்மை
ஞ, ச வுடன் இடைநிலையில் மயங்கும்
உதாரணம் – ஞ்ச் – கஞ்சன்
ங, க வுடன் மயங்கும்
உதாரணம் – ங்க் – பங்கு , நுங்கு
க, ச, த, ப, ம, வ ஆகியவற்றுடன் ய மயங்கும்
யக் – பேய்கள் ய்த் – செய்த
ய்ச் – பொய்சொல் ய்ப் – செய்ப
ய்ம் – தூய்மை ய்வ் – தெய்வம்
க.த,ப,ம,வ ஆகியவற்றுடன் ர கரம் மயங்கி அடையில் இடம்பெறும்
ர்க் – சேர்க ர்த் – சேர்தல்
ர்ப் – மார்பு ர்ம் – நேர்மை
ர்வ் – சோர்வு
க,ப,வ,ய ஆகியவற்றுடன் ல மயங்கும்
லக் – நல்கு ல்ப் – சால்பு
லவ் – செல்வம் ல்ய் – கல்யாணம்
க,ப,வ ஆகியவற்றுடன் ள மயங்கும்
ள்க்-கொள்கை
ள்ப் – கொள்பவன்
ள்வ்-கள்வன்
க,த,ப,மவ ஆகியவற்றுடன் ழ கரம் இடையில் மயங்கும்
ழ்க் -வாழ்க்கை
ழ்த் – வாழ்த்து
ழ்ப் -வீழ்பவர்
ழ்ம் – தாழ்மை
ழ்வ் – வாழ்வு
வ,யவடன் மயங்கும்
வ்ய் – காவ்யம் – தற்காலத்தில் காவியம் என சொல்லப்படுகிறது
தற்காலத்தி; ல் க, த, ப ஆகிய வல்லினங்கள் வேற்றுநிலை மெய்மயக்கங்களில் இடம்பெறுகிறது
க்த் -யுக்தி
க்ன் – அக்னி
த்ம் -ஆத்மா
த்வ் – தத்வம்
ப்த் – நிசப்தம்
ஸ்ப், ஸ்ல், ஸ்ம், ஸ்த், ஷ்ட், ஷ்ண் முதலிய இடைநிலை மெய்மயக்கங்கள் தமிழில் கலந்த பிறமொழி சொறகளில் கலந்து காணப்படுகிறது
உதாரணம் – இஸ்லாம், கஷ்டம், நஷ்டம், விஷ்னு
மேற்கூறப்பட்டதை விடவும் மூன்று மெய்கள் ஒன்றாக மயங்கும் இடைநிலை எழுத்துக்களும் காணப்படுகிறது.
சொற்களில் ய்,ர்,ழ் ஆகிய மெய்கள் வரும்போது மூன்று மெய்கள் வருவதை காணலாம்
ய்க்க் – நாய்க்குட்டி
யச்ச்-காய்ச்சல்
ய்த்த்-காய்த்த
ய்ப்ப் – வாய்ப்பு
ய்ந்ந்-தோய்ந்த
ய்ங்க் – வேய்ங்குழல்
ர்க்க-பார்க்கிறேன்
ய்ர்ச – தேர்ச்சி
ர்த்த்-பார்த்து
ர்ப்ப் – ஆர்ப்பாட்டம்
ர்ந்த்-சேர்ந்தேன்
ழ்க்க் – வாழ்க்கை
ழ்ச்ச்-சூழ்ச்சி
ழ்த்த – வீழ்த்தி
ழ்ப்ப்-காழ்ப்பு
ழ்ங்க் – பாழங்கிணறு
ழ்ந்த் – வாழ்ந்த
இறுதிநிலை எழுத்துக்கள்
சொல்லின் இறுதியில் வரும் எழுத்துக்கள் இறுதிநிலை எழுத்துக்களாகும். ஆரம்பகால கட்டத்தின் தொல்காப்பிய கூற்றுக்களை ஆராய்ந்தோம் எனில் உயிர் எழுத்துக்களில் ஒள தவிர்ந்த ஏனைய எழுத்துக்கள் மொழி இறுதியில் வரும் என்று முதல் சூத்திரத்தில் கூறும் தொல்காப்பியர் தொடர்ந்து வரும் சூத்திரத்தில் க, வ வுடன் இணைந்து ஒள வரும் எனக் குறிப்பிடுகின்றார்.
“உயிர் ஒள எஞ்சிய இறுதி யாகும்”
“கவவோ டியையின் ஒளவு மாகும்’
உதாரணம் – (க் ூ ஒள) (வ் ூ ஒள) – ஆகிய இரு சொற்களாக மாத்திரம் இடம் பெறும் என்கிறார்.
உதாரணம் :
அ – விள, உ – பாடு ஐ – அவனை
ஆ – பலா, ஊ – பூ ஒ-நோ
இ – கிளி, ஏ – நானே ஓ – போ
ஈ – தீ, எ – சே(எ)
இவ்வாறு கூறிய தொல்காப்பியர் தொடர்ந்து வரும் சூத்திரங்களில் இவற்றுக்கான வரையறைகளைக் கூறுகின்றார். அவை வருமாறு. எ, ஒ தனித்து மொழி இறுதியில் வருமே ஒழிய மெய்யுடன் இணைந்து வராது அத்துடன் தன் பெயரை சுட்டுகின்ற சந்தர்ப்பத்தில் மாத்திரம் மொழிக்கு இறுதியில் வரும் என்று கீழ்வரும் சூத்திரத்தில் மூலம் குறிப்பிடுகின்றார்
‘எ என வருமுயிர் மெய்யீராகாது’
அதனைப்போன்றே ஒ கரம் பொருத்தவரை புள்ளிப்பெற்ற ந நகரம் மாத்திரம் இணைந்து (ந் ூ ஒ – நொ) என்று மொழிக்க இறுதியில் இடம்பெறும் என்கிறார். ஏனைய சந்தர்ப்பங்களில் மொழிக்கு இறுதியில் ஒகரம் இடம்பெறாது என கூறுகிறார்.
சூத்திரம்
‘ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே’
(நொ என்பது – வலி, வருத்தம், துன்பம் எனும் பொருளை குறிக்கும்)
மேலும் ஏ, ஓ ஞகர மெய்யுடன் சேர்ந்து இறுதியில் இடம்பெறாததை
‘ஏ, ஓ எனுமுயிர் ஞகாரத் தில்லை’ என்று கூறுகிறார்.
அவ்வாறே ஏ காரத்துடன் உ, ஊ வும் ந, வ வுடன் இறுதியில் வராது என்பதை
‘உ ஊ காரம் நவவொடு நவிலா’ என்று கூறுகின்றார்.
மெய்யெழத்துக்களை பொருத்தவரை
“ஞணநம னயரல வழள வென்னும்
அப்பதி னொன்றே புள்ளி யிறுதி’ – (சூ-78)
என்ற சூத்திரத்தில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய பதினொரு தனி மெய்களும் மொழி இறுதியில் இடம்பெறும் என்கின்றார்
உதாரணம் :
உரிஞ், மண், பொருந், திரும், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வேள், நிலன்
இதனைத் தொடர்ந்து இவற்றுக்கான சில வரையறைகளைக் கூறுகின்றார். அவை வருமாறு நகரம் பொருந், வெரிந் ஆகிய இரு சொற்களிலும் ஞகரம் உரிஞ் எனும் சொல்லிலும் வகரம் அவ், இவ், உவ், தெவ் ஆகிய சொற்களிலுமே மொழிக்கு இறுதியில் வரும் என்று கூறுகின்றார்.
அத்தோடு மகரம் மயங்கி னகரமாக ஒலிக்கும் இடத்திலும் மயங்காத ஒன்பது இடத்திலும் ன் மொழி இறுதியில் வரும்.
உதாரணம் : நிலம் – நிலன் பிலம் – பிலன் உகின், செகின், விழன், பயின், அழன், புழன், குயின், கடான், வயான்.
மெல்லினத்தில் ங் ஒருபோதும் மொழிக்கு இறுதியாக வருவதில்லை என தொல்காப்பியர் கூறுகிறார்.
நன்னூல் –
இறுதிநிலை எழுத்துக்கள் இதற்கு அடுத்த கட்டமான அதாவது தொல்காப்பியத்திற்கு அடுத்த காலமான இடைக்காலத்தில் தமிழின் மாற்றத்திற்கு ஏற்ப தொல்காப்பியரின் கூற்றுக்கு ஏற்ப பின்வருமாறு விளக்குகிறார். இவர் தொல்காப்பிர் கூறியதை விட சற்று மாற்றமாக பன்னிரு உயிரும் மொழிக்கு இறுதியில் வரும் என்கிறார்.
ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
சாயு முகரநா லாறு மீறே. (நன் – 107)
அதாவது மெய்யெழுத்துக்களில் வல்லினம் தவிர்ந்த மெல்லினத்தின் ங் தவிர்ந்த இடையினம் 6 உம் மொழிக்கு இறுதியில் வருவதுடன் குற்றியலுகரம் ஒன்றும் மொழிக்கு இறுதியில் வந்து மொத்தமாக 24 எழுத்துக்கள் மொழிக்கு இறுதியில் வரும் என அடையாளப்படுத்துகிறார்.
உதாரணம் – ஆ, ஈ, ஊ, எ , ஏ, ஐ, ஓ எனவும்
(விள, பலா, கரி, தீ, கடு, பூ, சேஎ, தே, தை, நொ, போ, கௌ)
எனவும் உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய். வேர், வேல், தெவ், வீழ், வாள், அஃகு என வரும்.
தற்காலத்தை பெருத்தவரை பவனந்தி முனிவரின் இக்கருத்தானது முரண்படுவதை காணலாம். ஏனெனில் தற்காலத்தில் எ காரம் ஒ காரம் என்பன மொழிக்கு இறுதியில் வருவதில்லை என்றும் அவை தம்பெயரை குறிக்கும் போதும,; உயிர் அளபெடையின் போதும் மொழிக்கு இறுதியில் இடம்பெறும் என்கின்றனர் உரையாசிரியர்கள் அத்துடன் ஒள காரமானது இன்றைய தமிழில் மொழிக்கு இடையில் இடம்பெறுவதில்லை. மேலும் இலக்கணக்காரர்களால் மொழிக்கு இறுதியில் வராது எனக்கூறிய வல்லின எழுத்துக்கள் தற்காலத்தில் மொழிக்கு இறுதியில் இடம்பெறுவதை அவதானிக்கலாம்
உதாரணம் –
க் – ஈராக்
ட் – டூயட்
ச் – டோர்ச்
த் – பக்தாத்
ப் – லோலிபப்
ற் – பெப்பர்மின்ற்
மற்றும் பிறமொழி பெயர்களை குறிக்கும் போது கிரந்த எழுத்துக்கள் மொழிக்கு இறுதியில் இடம்பெறுகிறது
ஜ் – ஜோர்ஜ்
ஷ் – சுரேஷ்
ஹ் – நிக்காஹ்
ஸ் – பீரிஸ்
இதேபோன்று நகரம் தமிழில் ரஜினிகாந், விஜயகாந் போன்ற பெயர்களில் இறுதியில் இடம்பெறுவதை காணலாம.;
இதனை போன்றே ங கரம் பெயர்களையும் இடங்களையும் குறிக்க பயன்படுகிறது.
உதாரணம் – ஹொங்கொங் , பீக்கிங் , மாஒ சேதுங்