இஸ்லாமியரும் அரசியல் பிரவேசமும்

 உலக நாடுகள் அனைத்திலும் பெரும்பான்மை மக்கள் பிரிவினரும் சிறுபான்மை மக்கள் பிரிவினரும் வாழ்கின்றனர். இதில் பெரும்பான்மைக்கு கிடைக்கிற முக்கியத்துவம் சிறுபான்மை சமூகத்திற்கு வழங்கப்படுகின்றதா என்றால் சந்தேகமே. சிறுபான்மை என்றால் என்ன என்பதை பார்த்தோமானால் ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அல்லது நாட்டில் வாழ்கின்ற மனிதக் குழுமம் அதே நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மைச் சமூகத்தில் இருந்து இன, மத, மொழி, சிந்தனை ரீதியாக வேறுபடும் போது அவர்களை சிறுபான்மை‟ என அழைப்பர். Oxford ஆங்கில அகராதியின் விளக்கத்தின் படி “இனம், சமயம், மொழி முதலானவற்றில் சமூகத்தின் ஏனையோரில் இருந்து வேறுபட்ட ஒரு சிறு மனிதக் குழுமம்” சிறுபான்மையினர் ஆவர் (A small group of people separated from the rest
of the community by a different in race, religion,language etc)

www.edutamil.com

 

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை பாகுபாட்டு தடுப்பு பாதுகாப்புக் குழு, “ஒரு மக்கள் கூட்டத்தில் பெரும்பான்மையாளருடைய இன, சமய, மொழி மரபுகளில் நின்றும் வேறுபட்ட இன, சமய, மொழி மரபுகளை அல்லது கூறுகளைப் பெற்று அவற்றைப் பாதுகாப்பதற்கு ஆர்வம் உடையவர்களே சிறுபான்மையினர்” எனக் கூறுகின்றது. மேலும் “ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மனிதக் குழு, அதே பிரதேசத்தில் வாழும் பெரும்பான்மை இனத்திலிருந்து மொழி, இனம், சமயம், சிந்தனை என்பவற்றால் வேறுபட்டு வாழும் போது அவர்கள் சிறுபான்மையினம்” என அழைக்கப்படுவதாக மௌலானா மௌதூதி குறிப்பிடுகிறார்.

முஸ்லிம் சிறுபான்மையினர் எனக் கூறப்படுவோர், முஸ்லிம் அல்லாத நாடுகளில் பிரஜா உரிமை பெற்றோர் அல்லது இஸ்லாமிய நாடுகளின் பிரஜாவுரிமையுடனோ இன, மொழி, சமய, கொள்கை ரீதியாக, வேறுபட்ட சமூகங்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்கள், முஸ்லிம் சிறுபான்மையினர் ஆவார்கள்.

 இஸ்லாமிய ~ரீஆவினை அடிப்படையாகக் கொண்டு உலக நாடுகளை இரு வகைப்படுத்தலாம்.

1. தாருல் இஸ்லாம்: முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள்

2. தாருல் குப்ர்: இஸ்லாமல்லாத நிலம் தாருல் குப்ர் ஆகும்.

இந்த நாடுகளில் வாழ்பவர்கள் முஸ்லிம் சிறுபான்மையினர் என அழைக்கப்படுகின்றனர்.  மேற்கூறப்பட்ட பிரிப்பு, நம்பிக்கையினை அடியொட்டியதாக உருவாக்கப்படவில்லை. மாறாக குறித்த பூமி எந்த சட்டத்தால் ஆளப்படுகின்றதோ அதை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றது. இந்த வகையில் இறை சட்டத்தால் ஆளப்படும் பூமியை நாம் தாருல் இஸ்லாமாகக் கொள்ளலாம். இறை சட்டமல்லாத சட்டங்களால் ஆளப்படும் பூமி தாருல் குப்ராகும்.

எகிப்து, இந்தியா போன்ற நாடுகளை முஸ்லிம்கள் வெற்றி கொண்டபோது அங்கு முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்தார்கள். எனினும் அப்பூமி தாருல் இஸ்லாமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அங்கு வாழ்ந்த பெரும்பான்மை மக்கள் ஆரம்பத்தில் பெரியளவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையிலும் அது இறை சட்டத்தால் ஆளப்பட்டது. மாறாக லெபனான் சிரியாவை உள்ளடக்கிய„ ~hம்‟ தேசம் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டிருந்த போதிலும் இறை சட்டத்தால் அப்பூமி ஆளப்படாமையினால் அது தாருல் குப்ராகக் காணப்பட்டது.

உலக முஸ்லிம் சிறுபான்மையினரை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம்.

1. பாரம்பரிய முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள். உதாரணமாக, போல்கன் நாடுகளில் வாழும் முஸ்லிம் சமூகங்கள்

2. புலம்பெயர் முஸ்லிம் சிறுபான்மையினர். உதாரணமாக, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன் போன்ற   மேற்கத்தேய நாடுகளில் வாழும் முஸ்லிம் சமூகங்கள்.

உலகிலுள்ள கண்டங்களில் பரப்பளவில் மிகப்பெரியது ஆசிய கண்டமாகும். மொத்தமாக இக்கண்டத்தில் 51 தேச அரசுகள் உள்ளன. 440 கோடி மக்கள் வாழ்கின்றனர். இக்கண்டத்தில் 27 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் 118 கோடி மக்கள் உள்ளனர். அதே போன்று முஸ்லிம் அல்லாத நாடுகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகியவற்றில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றனர்.  உலகிலையே அதிக முஸ்லிம்கள் கொண்ட நாடு இந்தோனேசியா ஆகும். அங்கு 25 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

இந்தோனேசியா, பாகிஸ்தான் பங்களாதேஸ், ஈரான், துருக்கி, ஈராக்,மலேசியா, உஸ்பகிஸ்தான்,சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், யெமன், சிரியா, கஸகஸ்தான், அஜர்பைஜான்,தாஜிகிஸ்தான், ஜோர்தான், கிரிகிஸ்தான், துரக்மேனிஸ்தான், லெபனான்,ஓமான்,குவைத், கட்டார்,பஹ்ரைன், புரூனை, மாலைத்தீவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பலஸ்தீன் என்பன முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளாகும்.

இவற்றை பிராந்தியங்களாக பிரித்து நோக்கும்போது தென்மேற்கு ஆசியாவில் 35 கோடி முஸ்லீம்களும் தென்கிழக்காசியாவில் 37 அரைக்கோடி முஸ்லிம்களும் தெற்காசியாவில் 51 கோடி முஸ்லிம்களும் மத்தியாசியாவில் 7 கோடி முஸ்லிம்களும் வாழ்கின்றனர்.

ஆசியாவில்  உள்ள 24 நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையனராக வாழ்கின்றனர். அதில் இந்தியா இலங்கை, சீனா பிலிப்பைன்ஸ் குறிப்பிடத்தக்களவு வாழ்கின்றமை கவனிக்கத்தக்கது. இவ்வாறாக சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் அரசியலில் எவ்வாறு பங்குக்கொள்கின்றனர் என்பதை நோக்குதல் கட்டாயமானதாகும்.

இலங்கையை பொருத்தவரை இலங்கையின் இரண்டாவது சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் நாடு பூராகவும் பரந்து வாழ்கின்றனர். அன்மைய சனத்தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம் இலங்கையின் மொத்த சனத்தொகையில் முஸ்லிம்கள் 9.7 சதவீதமாகும். எனினும் இவர்களுள் சுமார் முப்பது சதவீதமானோர் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களிலுமே வாழ்கின்றனர். வரலாற்று ரீதியாக பெரும்பான்மை சிங்கள மக்களுடனும் தமிழர்களுடனும் மிக நெருக்கமான சமூகப் பிணைப்பினைக் கொண்டுள்ளனர். முஸ்லிம்களுள் பெரும்பான்மையானோர் தமிழ் மொழியினைப்  பேசுகின்ற போதிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் சிங்கள மொழியினையும் தமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர். வர்த்தகம் மற்றும் விவசாயம் போன்றவற்றை தமது பிரதான ஜீபனோபாயமாகப் பயன்படுத்தும் முஸ்லிம்கள் இலங்கையின் ஏனைய சமூகத்தவர்களுக்கு முன்மாதிரியாக வாழ முயற்சித்திருக்கின்றனர். சமய அடிப்படையில் இலங்கை முஸ்லிம்கள் என்ற பொதுவகைப்பாட்டினை இவர்கள் பெற்றுள்ள போதிலும் தெற்கு முஸ்லிம்களுக்கும் கிழக்கு முஸ்லிம்களுக்கும் அவர்களது அரசியல், பொருளாதார, கலாசார நடைமுறைகளில் சில வேறுபாட்டு அம்சங்களும் தனித்துவங்களும் உள்ளன. தெற்கு முஸ்லிம்கள் சிங்கள சமூகத்துடன் இரண்டரக் கலந்து வாழ்ந்த அனுபவத்தினைக் கொண்டிருக்க, கிழக்கு முஸ்லிம்கள் தமிழர் பாராம்பரியத்துடன் தமது கலாசார நடைமுறைகளை இணைத்து வாழ்ந்து வந்துள்ளனர். தெற்கு முஸ்லிம்களின் அரசியல் போக்கிலிருந்து கிழக்கின் அரசியல் பல அடிப்படையில் வேறுபட்டு நிற்பதற்கு இவ்வம்சமும் ஒரு காரணம் என்பர்

இலங்கையில் முஸ்லிம் அடையாளத்திற்கான பலமான அரசியல் உந்துதல் 19ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரான காலப்பகுதியிலேயே உருவானது. வர்த்தகத்தில் மேம்பட்டிருந்த முஸ்லிம் உயர்குழாமினரின் எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவும் சமூக ரீதியாக பலம் பொருந்தியவர்களாகவும் விளங்கிய தமிழர் சமூகத்திலிருந்து வேறுபட்டு தமது சமூக அரசியல் நலன்களைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. எனினும் இக்கால முஸ்லிம் சமூக அரசியல் கொழும்பை மையமாகக் கொண்ட தெற்கின் அரசியலாகவே அமைநதிருந்தது.

இலங்கையின் அதியுயர்  சபையான பாராளுமன்றத்தின் பிரதான பணி நாட்டுக்குத் தேவையான சட்டங்களை  வகுப்பதாகும். இந்த அடிப்படையில் இலங்கையில் சட்டங்களை வகுத்தளிக்கும்  மன்றம் ஆரம்பத்தில் சட்டசபை (Legislative Council)  எனவும், பின்னர் அரசுப்  பேரவை(State Council) என்றும், பிரதிநிதிகள் சபை, பாராளுமன்றம்  என்றெல்லாம் நாமமிட்டு அழைக்கப்பட்டு வந்துள்ளது

சட்டசபையில்  முஸ்லிம் பிரதிநிதித்துவம் இலங்கை பிரத்தானியாவின்  குடியேற்ற நாடாக விளங்கிய காலத்தில் 1833-ம் ஆண்டில் சட்ட சபை  (Legislative Council)  ஸ்தாபிக்கப்பட்டது. இச்சபையில் அப்போது இந்நாட்டில்  வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாக செர் பொன்னம்பலம் இராமநாதன்  நியமிக்கப்பட்டார். 1833-ம் ஆண்டிலிருந்து சுமார் 56 ஆண்டுகள்  முஸ்லிம் பிரதிநிதி எவரும் சட்டசபையில் அங்கம் பெற்றிருக்கவில்லை. 19ம் நூற்றாண்டின் பிற்காலப் பகுதியிலேயே முஸ்லிம்கள் சட்டவாக்க சபையில் அரசியல் பிரதிநிதித்துவத்தினை எதிர்பார்த்தனர். 1880களில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் முஸ்லிம்கள் தேசாதிபதி சேர் ஆர்தர் கோர்டனிடம் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தனர். அறிஞர் சித்திலெப்பை தனது முஸ்லிம் நேசன் பதிப்பின் மூலம் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான அவசியத்தினை வெளிக்கொண்டு வந்தார். 1886 செப்டம்பர் 8இல் வெளிவந்த அவரது முஸ்லிம் நேசன் இதழ் பின்வருமாறு குறிப்பிட்டது:

“இரண்டு இலட்சம் முஸ்லிம்கள் நாட்டில் வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் சட்டவாக்கத்தில் பிரதிநிதித்துவத்தினைப் பெற்றிருக்கவில்லை. முஸ்லிம்களினை விடவும் குறைவான எண்ணிக்கையில் உள்ள பறங்கியர்களும் கோப்பி உற்பத்தியாளர்களும் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கின்றனர்.”

1889-ம்  ஆண்டு ஒக்டோபர் 29-ம் திகதி முதன் முதலாக கௌரவ எம்.ஸீ. அப்துல் ரஹ்மான்  அவர்கள் சட்ட சபைக்கு நியமிக்கப்பட்டார்கள். இலங்கை முஸ்லிம்களின்  வரலாற்றில் சட்ட சபைக்கான முலாவது முஸ்லிம் பிரதிநிதித்துவ நியமனம்  இதுவேயாகும். அப்துல் ரஹ்மான் அவர்களின் தந்தை முஹம்மத் காஸிம் போய்  இந்தியாவின் சூரத் எனுமிடத்திலிருந்து வந்த ஒரு வர்த்தகராவார். அப்துல்  ரஹ்மான் அவர்களும் இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒரு பெரு  வர்த்தகராவும், சரக்குக் கப்பல்;கள் பலவற்றின் சொந்தக்காரராகவும்  விளங்கினார். கௌரவ அப்துல் ரஹ்மான் அவர்களே கொழும்பு மாநகர சபைக்கு  நியமிக்கப்பட்ட முலாவது (1876 – 1879) முஸ்லிம் அங்கத்தவர் என்பதும் இங்கு  குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலிருந்து  காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.எம். ஷரீப் (ஷரீப் புறக்டர்) சட்டவாக்க சபைக்கு  நியமிக்கப்பட்டார். 1900-ம் ஆண்டு ஷரீப் புறக்டர் பதவியிலிருந்து விலகவே  டபிள்யூ.எம். அப்துல் ரஹ்மான் அவ்விடத்துக்கு நியமிக்கப்பட்டார். 1917இல ; என்.எச்.எம்.அப்துல் காதர் சட்டமன்றத்திற்கான முஸ்லிம் பிரதிநிதியாக நியமிக்கப்படும் வரை அவர் பதவிவகித்தார். இவர் 1923 வரை சட்ட மன்றப் பிரதிநிதியாக இருந்தார். இது காலம் வரை  சட்டசபைக்கு முஸ்லிம் உறுப்பினர்கள் நியமன அங்கத்தவர்களாகப்  பிரிதிநிதித்துவம் செய்தார்களேயன்றி முஸ்லிம்களால் வாக்களிப்பின் மூலம்  தெரிவுசெய்யப்படவில்லை.

ஆனால் இதற்கு பிறகு முஸ்லிம்களின் வாக்குரிமை 1924-ம்  ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம்  முஸ்லிம்கள் தேர்தலில் வாக்களிப்பின் மூலம் 03 பிரதிநிதிகளைத்  தெரிவுசெய்வதற்கான உரிமை அரசாங்கத்தினால் அதிகார பூர்வமாக  வெளியிடப்பட்டது. முஸ்லிம்களில் அவர்களின் வருமானம் பொதுவான  படிப்பறிவு தகைமைகளைத் தகுதியாகக் கொண்ட ஆண்கள் மாத்திரம் வாக்களிப்பதற்கான  உரிமை பெற்றார்கள். 1924-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 04  முஸ்லிம்கள் போட்டியிட்டு, அவர்களில் மூவர் வெற்றிபெற்றனர். எச்.எம்.  மாக்கான் மாக்கார், டாக்டர் ரீ.பி. ஜாயா, என்.எச்.எம். அப்துல் காதர்  ஆகியோரே வெற்றி பெற்றோராவர். 1931-ம் ஆண்டு சட்ட சபை, அரசுப் பேரவை  எனப் பெயர் மாற்றமடைந்து முதலாவது அரசுப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத்  தேர்தலில் மட்டக்களப்பு தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட சேர் முஹம்மத்  மாக்கான் மாக்கார் மாத்திரமே வெற்றி பெற்றார். காலித் சுல்தான் அவர்கள்  நியமன உறுப்பினராக அரசுப் பேரவைக்கு நியமிக்கப்பட்டார். கிழக்கு  மாகாணத்தில் தேர்தலின் மூலம் முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செர்  மாக்கான், மாக்கார் முதலாவது அரசுப் பேரவையில் தொடர்பாடல் மற்றும் மராமத்து  அமைச்சராகவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக  ஆரம்பித்த முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவமானது காலத்துக்குக் காலம்  வளர்ச்சி கண்டு வந்தது.

இலங்கையின் சுதந்திரத்திற்கு பிந்திய முஸ்லிம்களின் அரசியல் பங்கேற்றினை நோக்குவோமானால் இக்காலகட்டத்தில் தேசிய கட்சிகளில் 1960, 1970களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பதியுத்தீன் மஹ்மூட், 1980களில் ஐக்கிய தேசியக் கட்சியில் டாக்டர் எம்.சீ.எம்.கலீல் மற்றும் ஏ.சீ.எஸ்.ஹமீட் போன்றோர் செல்வாக்குள்ளவர்களாகத் திகழ்ந்தனர். பொறுப்புள்ள அமைச்சுக்களை சிங்கள அரசாங்கத்திடமிருந்து பெறுமளவிற்கு இவர்களது அரசியல் அணுகுமுறை அமைந்திருந்தது. 1989 – 1994 காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியினைச் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதியாகிய எம்.எச்.முஹம்மட் பாராளுமன்றத்தில் சபாநாயகராகப் பதவிவகித்தார். தேசியக் கட்சிகளில் அங்கம் பெற்றிருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் தாம் சார்ந்த மக்களின் பிரச்சினைகளை அரசியல் அரங்கிற்குக் கொண்டுவந்த போதிலும் அவர்கள் அங்கம் வகித்த பெரும்பான்மைக் கட்சிகளின் கொள்கைகளிலிருந்து அவர்களால் முழுவதுமாக விடுபட்டிருக்க முடியவில்லை. தமது கட்சி நலன்களிலும் தமது அரசியல் இருப்பிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இதனால் முஸ்லிம்களின் கரிசனைகளை தெளிவாக எடுத்துரைப்பதற்கான வாய்ப்பு வரையறுக்கப்பட்டிருந்தது. பெரும்பான்மைக் கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் நட்புறவு அல்லது ஆதரவு சட்டங்கள் தமது சமூகத்தின் நலன்களைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானது எனக்கருதினர். எடுத்துக்காட்டாக சேர் ராசிக் பரீட் வெள்ளிக் கிழமை தினங்களில் முஸ்லிம்கள் ஜூம்மாக் கடமையினை நிறைவேற்றுவதற்கு வசதியாக தொழுகை நேர விடுமுறைச் சட்ட மூலத்தினைக் கொண்டுவந்தார். எனினும் இன ரீதியான அரசியல் கருக்கொண்டிருந்த பிரதேச முஸ்லிம் நலன்களை ஏற்பதில் இவ்வரசியல் தலைமைகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியது.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் , பாராளுமன்றப் , பிரதிநிதித்துவம் பற்றி நாம் ஆய்வு செய்யும்போது, 1947ஆம் ஆண்டு இடம்பெற்ற சுதந்திர இலங்கையின் முதலாவது பராளுமன்றத்திற்கான தேர்தலில் கிழக்கு மாகாணம் நான்கு பேரை பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பியது. ஏ.ஆர்.எம்.அபூபக்கர், ஏ.எல்.சின்னலெவ்வை, எம்.எஸ்.காரியப்பர், எம்.எம்.இப்றாஹிம் ஆகியோரே அந்நால்வரும் ஆவர். இவர்கள் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய மூன்று மாவட்டங்களின் முஸ்லிம் பெரும்பான்மை இடங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அபூபக்கர் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டார். சின்னலெவ்வை மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்புத் தொகுதியிலிருந்தும், காரியப்பர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியிலிருந்தும் (தற்போதய அம்பாரை மாவட்டத்தில் உள்ளது.) பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். எம்.எம்.இப்றாஹிம் சுயேட்சை பேட்பாளராகப் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் (தற்போதய அம்பாரை மாவட்டத்தின்) பொத்துவில் தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டார்.

1952 பொதுத் தேர்தலில் முஸ்லிம்கள் சார்பாக சட்டமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டோர் தொகை சடுதியாக அதிகரித்திருந்தது. இதன்படி கிழக்கின் நான்கு அங்கத்தவர்கள் உள்ளடங்கலாக ஏழு பேர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஏ.ஏ.சின்னலெவ்வை என்பவர் மட்டக்களப்புத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு பிரதிநிதிகள் சபைக்குத் தெரிவானார். கல்முனைத் தொகுதியின் பிரதிநிதியாக ஏ.எம்.மேர்சா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். இத் தேர்தலில் எம்.எஸ்.காரியப்பர், எம்.எல்.காரியப்பர் ஆகிய இருவரும் கல்முனைத் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டனர். சுயேட்சை வேட்பாளரான எம்.ஈ.எச் முஹம்மத்  அலி மூதூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

1956ஆம் ஆண்டு இலங்கையில் புதிய சிந்தனைகள் எழுச்சியடைந்த காலமாகும். கிழக்கின் முஸ்லிம் அரசியலில் புதிய சில மாறுதல்கள் ஏற்பட்டன. கல்முனைத் தொகுதியின் எம்.எஸ்.காரியப்பர், பொத்துவில் தொகுதியின் எம்.எம்.முஸ்தபா ஆகியோர் தேர்தலில் தமிழ் தேசியத்துடன் கைகோர்த்தனர். தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். வெற்றி பெற்ற மறு கனமே காரியப்பர் ஆளும் மக்கள் ஐக்கிய முன்னணியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். மறுபுறத்தில் வழமைபோல் மாக்கான் மாக்கார் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார்.

முஹம்மத் அலி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தொகுதியில் வெற்றி பெற்றார். பண்டார்நாயக்காவின் கொலைக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டிருந்தது. இவ்வமைச்சரவை மாற்றத்தின் போது எம்.எஸ்.காரியப்பர் நிதியமைச்சுக்கான பாராளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டதுடன், தபால், ஒளிபரப்பு, தகவல், கலாசார அலுவல்கள் மற்றும் சமூக சேவை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பொத்துவில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.எஸ்.காரியப்பரின் மருமகனான எம்.எம்.முஸ்தபா நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். ஒன்பது அமைச்சர்களைக் கொண்டதாக அமைக்கப்பட்ட தஹாநாயக்காவின் காபந்து அமைச்சரவையில் கிழக்கு மாகாணம் இரு முஸ்லிம் அமைச்சர்களைப் பெற்றிருந்தமை முஸ்லிம்களின் அரசியல் முக்கியத்துவம் எடுத்துக்காட்டப்படுகிறது.

1965 தேர்தலில் நிந்தவூர் தொகுதியில் எம்.எம்.முஸ்தபா எம்.ஐ.அப்துல் மஜீத் இதனை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.எல்.அப்துல் மஜீத் மூதூர் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்முனைத் தொகுதியில் எம்.சி.அஹமத் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினூடாக பாராளுமன்றம் நுழைந்தார். கடந்த தேர்தலைப் போன்று பொத்துவில் தொகுதியில் எம்.ஏ.அப்துல் மஜீத் வெற்றி பெற்றார். 1977 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியீட்டியது. இத்தேர்தலில் கணிசமான தொகை முஸ்லிம் உறுப்பினர்களும் வெற்றி பெற்று பாராளுமன்றம் வந்தனர்.

1977 இலிருந்து 1989 வரையான இப்பாராளுமன்றத்தில் சுமார் 16 பேர் முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகக் கடமையாற்றியிருந்தனர்.

இவர்களுள் பலர் ஏற்கனவே பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர்களாக இருக்க, கிழக்கு மண்ணைச் சேர்ந்த பல புதிய முகம்களும் பாராளுமன்றம் நுழைந்தது. எம். எம்.எல்.அஹமத் பரீத் மற்றும் ஏ.ஆர் மன்சூர் ஆகியோர் கிழக்கின் அப்புதிய முகம்களாக இருந்தனர்.

இவ்வாறாக சிறுபான்மையினராக இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் பங்கேற்பானது அன்று தொடக்கம் இன்றுவரை அப்படியே காணப்படுகிறது எடுத்துகாட்டாக 2020 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலை குறிப்பிடலாம.; இத்தேர்தலில் 9.83 சதவீதம்  புதியவர்கள் தெரிவாகியுள்ளனர். அவர்களில் மூன்று பேர் முஸ்லிம்களாவார்கள். ஹாபிஸ் நஸீர் அஹமத் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் எம்.முஸர்ரப்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலும் புத்தளத்தில் அலிசப்ரி றஹிம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலும்  பெற்றுள்ளனர். இத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முஜிபுர் ரஹ்மான் எஸ்.எம். மரிக்கார். ஆகியோர். வெற்றி பெற்றுள்ளனர். மூத்த முஸ்லிம் அரசியல் தலைவரான ஏ.எச்.எம். பௌசி கொழும்பு மாவட்டத்தில் 418683 வாக்குகளைப் பெற்று 7ஆவது இடத்தை பெற்றார்.

இத்தேர்தலில் களுத்துறை மாவட்டத்துக்கு தேசியப்பட்டியல் மூலம் மூவர் தெரிவாகியுள்ளனர். நீதி அமைச்சர் அலிசப்ரி களுத்துறையைச் சேர்ந்தவர். இம்தியாஸ் பாக்கிர் மாக்காரும் மர்ஜான் பளிலும் பேருவளையைச் சேர்ந்தவர்களாவார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திகாமடுல்ல கண்டி திருமலை மாவட்டங்களில் முஸ்லிம் அபேட்சகர்களை நிறுத்திய போதும் ஒருவரும் வெற்றிபெறவில்லை. திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட றிஸ்லி முஸ்தபா 4373 வாக்குகளையும் அஸ்பர் உதுமாலெப்பை 3411 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

இவ்வாறாக பிரித்தானியர் காலத்தில் ஆரம்பித்த முஸ்லிம் பிரதிநிதிகளின் அரசியல் பங்கேற்பானது சிறுபான்மை என்றிராமல் இன்றுவரை அப்படியே காணப்படுவதானது இலங்கை அரசியலில் சிறுபான்மையான முஸ்லிம்களின் தாக்கத்தை அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் உலகில் மிகவும் வளமானதும் ஒப்பீட்டு ரீதியில் குறைந்த சனத் தொகையை கொண்டதுமான ஐரோப்பாக் கண்டத்தில் மொத்தமாக 37 நாடுகள் உள்ளன. அதில் 16 க்கும் மேற்பட்ட நாடுகளில் இரண்டாவது சமயமாக இஸ்லாமும் இரண்டாம் பெரும்பான்மையான மக்கள் குழுவாக முஸ்லிம்களும் உள்ளனர். மொத்தமாக 13 முதல் 18 மில்லியன் முஸ்லிம்கள் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் சிறுபான்மையாக வாழுகின்றனர். எனினும், 2003இல் அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள சனத்தொகை கணிப்பீட்டு அறிக்கை, ஐரோப்பிய முஸ்லிம்களின் எண்ணிக்கை 23 மில்லியன் எனக் குறிப்பிடுகின்றது. இந்த நாடுகளிலும் நாம் இஸ்லாமியர்களின் அரசியல் பங்கேற்பினை காணக்கூடியதாக உள்ளது.

நமது அன்மைய நாடான இந்தியாவிலும் முஸ்லிம்களின் அரசியல் பங்கேற்பினை காணலாம். 14.2மூ வீதம்மே கொண்ட முஸ்லிம்களில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற லோக்சபாவிற்கு  27 முஸ்லிம்கள் தெரிவுசெய்யபட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக அப்துல் காலிக், பத்ருதீன் யஜ்மல் அலி கயிசீர் போன்றவர்களை குறிப்பிடலாம்.

இதனைப்போன்றே பெறும் கிறிஸ்தவ நாடான இத்தாலி நாட்டிலும் இஸ்லாமியர்களின் அரசியல் பங்கேற்பினை காணலாம். இத்தாலியில் 8 முஸ்லிம்கள் அரசியலுடன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதை காணலாம். உதாரணமாக சுமாயா அப்துல் காதர், அலி ரசீட், மொஹமட் போன்றவர்களை குறிப்பிடலாம்.

இவ்வாறாக நேபாளம் , சீனா, பிலிப்பைன்ஸ், பூட்டான், பிஜீத் தீவுகள், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் நாம் முஸ்லிம்களின் பங்கேற்பினை காணக்கூடியதாக உள்ளது. ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து உலக நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக காணப்பட்ட போதிலும் அரசியல் ரீதியாக இவர்களின் பங்குப்பற்றும் தன்மையானது ஏனைய சிறுபான்மை சமூகத்தை விடவும் சிறப்பாக காணப்படுகிறது எனலாம்.

Leave a Comment