www.edutamil.com |
ஒரு பொருளைத் தொகையளவாற் குறிப்பிடுதல் என்பதிலிருந்து அளவீட்டின் பெறுபேறுகள் எப்பொழுதும் எண்களில் மட்டுமே தரப்படும். எண்களினாற் குறிப்பிடப்படுகின்ற பலவகையான அளவீடுகள் ஒவ்வொன்றும்
- பெயர் அளவிடை
- வரிசை அளவிடை
- ஆயிடை அளவிடை
- விகித அளவிடை
என்னும் நான்கு வகை அளவீடுகளில் ஏதாவது ஒன்றில் உள்ளடக்கப்படும்
பெயர் அளவிடை: பல்வேறு வகைகள் அல்லது வகுப்புக்களைக் குறிக்கின்ற எண்கள் பெயர் அளவிடையினுள் அடங்கும். அதாவது இவ்வெண்கள் பொருள்களைச் சுட்டி நிற்கும் பெயர்களாக அல்லது குறியீடுகளாகத் தொழிற்படுவனவேயன்றித் தமக்கிடையே வேறு எத்தகைய தொடர்பையும் கொண்டிரா. ஓட்டப்போட்டியில் பங்குபற்றுவோருக்கு வழங்கப்படும் எண்கள், வீட்டு எண்கள், வங்கிக் கணக்கு எண்கள், மோட்டார் வண்டி எண்கள், தேர்வுக ளுக்கு வழங்கப்படும் சுட்டெண்கள், தொலைபேசி எண்கள், அஞ்சற்பெட்டி எண்கள் போன்றவை இவ்வகையைச் சாரும்.
வரிசை அளவிடை: தமக்கிடையே ஓர் உயர்வு தாழ்வு ஒழுங்கு நிலையை மட்டும் புலப்படுத்தும் தொடர்பினைக் கொண்டு காணப்படும் அளவீடுகள் வரிசை அளவிடையினுள் அடங்கும். போட்டி ஒன்றில் பங்கு பற்றியோரின் இறுதி நிலையைத் தெரிவுபடுத்தும் 1,2,3,4…. என்கின்ற வரிசைநிலைகள், வகுப்பிலே மாணவரின் தேர்ச்சி நிலையை சுட்டிக் காட்டும் 1,2,3,4…..என்னும் வகுப்பு நிலைகள் போன்ற அளவீடுகள், இவ்வகையினுட் கருதப் படும். இவ்வகை அளவீடுகளைக் குறிக்கும் எண்கள் பெரியது அல்லது சிறியது, உயர்வு அல்லது தாழ்வு, கூடியது அல்லது குறைந்தது போன்ற தொடர்புகளைச் சுட்டிக்காட்டவல்லனவே தவிர ஒன்று மற்றதிலிருந்து எவ்வளவினால் வேறுபட்டதெனக் காட்டும் இயல்பி னைக் கொண்டிரா. உதாரணமாக வகுப்புச் சோதனை ஒன்றில் முதலாவது நிலையிலுள்ள பிள்ளை இரண்டாம் நிலையிலுள்ள பிள்ளையிலும் பார்க்க ஒரு புள்ளி மட்டும் கூடுதலாகப் பெற்றுள்ள தெனக் கொள்வோம். இதிலிருந்து, இரண்டாம் நிலையிலுள்ள பிள்ளை மூன்றாம் நிலையிலுள்ள பிள்ளையைவிட எத்தனை புள்ளி கள் கூடுதலாகப் பெற்றிருக்கும் எனக் கூறிவிட இயலாது. சில சமயம் புள்ளி வித்தியாசம் ஒன்றாகவும் இருக்கலாம் அல்லது மிகப் பெரிய தொகையாகவும் இருக்கலாம். இவ்வகை அளவிடையில் பூச்சிய நிலையென ஒன்றைக் குறிப்பிடுதல் வழக்கில் இல்லை.
ஆயிடை அளவிடை: தர்க்கரீதியாக அல்லது எதேச்சையாக வரையப்பட்ட பூச்சியநிலை, சமஅலகுகள் ஆகிய இரண்டு முக்கிய இயல்புகள் கொண்டது ஆயிடை அளவிடையாகும். இங்கு தனிப்பூச் சியம், அதாவது அளவிடப்படும் பண்புக்கூறு முற்றாக அற்ற நிலை என்பது கிடையாது. நாம் பெறுகின்ற கல்வி அளவீடுகளுள் பெரும் பாலானவை இவ்வகையினுட் காணப்படுகின்றன. சதமளவை பாகையில் வெப்பநிலையைக் குறிக்கும் எண்கள், பாட அடைவுப்புள்ளிகளைக் குறிக்கும் எண்கள் என்பன இவ்வகை அளவீடுகளுக் கான உதாரணங்களாகும். 50°C வெப்பநிலை என்பது 25°C வெப்ப நிலை என்பதன் இருமடங்கு வெப்பத் தன்மையைப் புலப்படுத்துவ தாக கொள்ள முடியாது. இது போன்று கணிதபாடத் தேர்வில் 80 புள்ளிகளைப் பெறும் மாணவனின் கணிதத்திறனானது 40 புள்ளிக ளைப் பெறும் மாணவனின் கணிதத்திறனின் இரு மடங்கு எனக் கொள்ளவும் முடியாது. நீரின் உறைநிலை 0°C எனக் குறிப்பிடும் போது 0 என்பது வெப்பத் தன்மையற்ற நிலையை குறிப்பிடவில்லை. இதேபோன்று கணித பாடத்தில் ஒரு மாணவன் 0 புள்ளியைப் பெற்றால், அது மாணவனிடம் கணிதபாட அறிவு அற்ற நிலையை குறிப்பிடவில்லை. இங்கு, பூச்சியம் என்னும் நிலை சில நடைமுறைச் சாத்தியங்களின்பாற் பெறப்பட்டதேயாகும்.
விகித அளவிடை : ஆயிடை அளவிடையிற் காணப்படும் சம அலகுகள் என்னும் இயல்புடன் தனிப்பூச்சியம் என்னும் இயல்பி னையும் கொண்டதே விகித அளவிடையாகும். இங்கு பூச்சியம் என்பது, அளவிடப்பட்ட தன்மை அல்லது பண்புக்கூறு அற்ற நிலை மையை குறித்து நிற்கும். பெரும்பாலான பௌதிக அளவீடுகள் இந்த வகையைச் சாரும்.
கீழ்வரும் தலைப்புக்கள் வாசித்து பயன் பெறுங்கள்