சமுதாயத்தின் நிலைக்கண்ணாடி இலக்கியம்

சமுதாயத்தின் நிலைக்கண்ணாடி இலக்கியம்
இலக்கியம்

இலக்கியங்கள் சமூகத்தின் முகம் பார்க்கும் நிலைகண்ணாடியாகும். ஒவ்வொருவரும் அவரவர் காலத்தினை மீட்டி பார்க்கவும் சமுதாய தன்மைகளை அறிந்து கொள்ளவும்; இலக்கியங்கள் உதவுகின்றன. குவிலென்ஸ் போன்ற கருவிகள் திரைப்படம் பிடிக்க உதவுவது போல மனிதனின் நடத்தைகளையும் மக்களின் வாழக்கை பாங்கையும் இலக்கியம் படம்பிடித்து காட்டுகிறது.

தொன்று தொட்ட காலம் தொடக்கம் நடைபெறும் சமூக மாற்றம், அதன் பிரதிபலனாக சமூகத்தில் அல்லது தனிமனித வாழ்வில் ஏற்படும் அல்லது திணிக்கப்படும் மாற்றங்கள், அதனை உள்வாங்க அல்லது மறுதலிக்க அல்ல அதனுடன் இசைவாக்கமடைய மனித குலம் நிர்ணயிக்கப்படும் பொழுது புதிய வாழ்வியல் முறைகள் தோன்றுகின்றன. அந்த புதிய வாழ்வியலில் இருந்து புதிய இலக்கியங்கள் பிறக்கின்றன.

அந்தவகையில் இலக்கியம் என்பது, லஎயம் என்ற வட சொல்லிலிருந்தே இலக்கியம் என்ற சொல் தோன்றியதாக கூறப்படுகிறது. மேலும் இலக்கியம் என்பது  இலக்கு + இயம் + இலக்கியம் ஆகும். அதாவது இலக்கு – நோக்கம், கொள்கை, குறிக்கோள், இலட்சியம் எனும் மொழிக் கருத்துக்களையும் இயம்— இயம்புவது, கூறுவது, வெளிப்படுத்துவது எனும் மொழிக் கருத்துக்களையும் குறித்து நிற்கின்றன. அறிந்த கருத்துக்களையும் உணர்ந்த உணர்ச்சிகளையும் பிறருக்கு எடுத்துக்கூற உதவுகின்ற ஒரு கருவி மொழியாகும். அம்மொழியைப் பேசுகின்ற மக்களது கொள்கைகளையும் குறிக்கோள்களையும் எடுத்தியம்புவது இலக்கியங்கள் ஆகும். எனவே தான் இவ்விலக்கியங்கள் ஒரு சமுதாயத்தின் போக்கு, ஒரு சமுதாயத்தின் இலக்கு, ஒரு சமுதாயத்தின் இலட்சியம், ஒரு சமுதாயத்தின் நிலைக்கண்ணாடி என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது.

இலக்கியம் மனிதனின் சமூகவயப்பட்ட பண்பொழுக்கத்தைக் கூறுவதுடன் அவன் சமூகவயமாகும், முறைமையையும் எடுத்தியம்புகிறது. தனிமனிதன் அனுபவங்களை மட்டுமின்றி அவ்வனுபவங்களின் உட்பொருளையும் இலக்கியம் தெளிவுறுத்துகின்றது என லியோ லொவெந்தால். குறிப்பிடுகிறார்

இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் இருக்கும் உறவினை டி போனால்ட் என்பவர் “சமுதாயத்தைச் சொல்லில் வடித்தளிப்பதே இலக்கியம்” என்று கூறுகிறார். இலக்கியத்தையும் சமூகத்தையும் பொருத்தவரை ஒரு படைப்பாளி தோற்றம் பெறுவதற்கு அடிப்படையாக அமைவது சமூகமாகும். ஏனெனில் படைப்பாளிக்கு தேவையான படைப்பாக்கததை சமூகம் கொடுக்கிறது. படைப்பின் கரு சமூகத்திலிருந்தே எடுக்கப்படுகிறது. அத்துடன் படைப்பை நுகர்பவன் சமூகத்திலிருந்தே தோன்றுகிறான். சமூகத்திற்கு தேவையான ஆக்கத்தினை படைப்பாளன் பொருத்தமான முறையில் இலக்கியமாக படைத்து வளங்குகிறான். இவ்வாறாக சமூக நிலைமைகளை நாம் இலக்கியங்களினூடாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

“மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ 

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் 

ஜகத்தினை அழித்திடுவோம்.”                                    -பாரதி-

என்ற பாரதியின் பாடல் அக்கால மக்களின் நிலையை எடுத்தியம்புகிறது. அக்காலத்தில் வறுமை என்ற கொடிய மிருகம் சமூகத்தில் தலைவிரித்தாடியதை அடுத்தே பாரதியின் பார்வை வறுமையின் பக்கம் திரும்பியதுடன் மக்கள் சாரந்த இலக்கியங்களையும் படைக்க முற்பட்டான். இதுவே அவன் வாழ்ந்த காலத்தில், மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்பட்டது எனில், இவனுடைய பாடல்களும் அதனை மையப்படுத்தியே அமைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவேதான் ஒரு படைப்பாளி உருவாகுவதற்கும் அவன் எப்படியாப்பட்ட படைப்பாளியாக இருக்க வேண்டும் என்பதும் அக்குறிப்பிட்ட சமூகமே முடிவு செய்கிறது.

காலம் காலமாக தோற்றம் பெற்ற இலக்கியங்களின் வரலாற்று பக்கங்களை, நாம் சற்று திருப்பி பார்த்தோமானால், சமூகத்தின் விளைவாக இலக்கியத்தின் தோற்றுவாயை அவதானிக்கலாம்;. அத்துடன் சமூகத்திற்கும் இலக்கியத்திற்கும் இடையிலான தொடர்பினையும் நாம் அறியக் கூடியதாக இருக்கும். சங்ககால சமுதாயமானது காதலுக்கும் வீரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த ஒரு சமுதாயமாக விளங்கியதனாலேயே இக்காலத்தில் எழுந்த இலக்கியங்களும் காதலையும் வீரத்தையும் பிரதிபலிக்கும் இலக்கியங்களாக தோன்றின. பத்து பாட்டும் எட்டுத்தொகையும் இக்கால மக்களின் வாழ்வியலைப் புலப்படுத்தும் மிகமுக்கிய இலக்கிய நூல்களாகும்.  நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு கலித்தொகை, அகநானூறு ஆகிய தொகை நூல்கள் காதலையும் பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு முதலிய தொகை நூல்கள் வீரத்தையும் பாடின. அவ்வாறே ஆற்றுப்படை நூல்களும், மதுரைக்காஞ்சியும் மன்னர்களின் கொடைத் தன்மையினையும் வீரத்தையும் பாட முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகியன காதலைப் பாடின. இவ்வாறு சங்ககால மக்களின் அக வாழ்வையும், புறவாழ்வையும் அக்காலத்திலே தோன்றிய இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன. இன்றும் நாம் சங்ககால வாழ்க்கை முறையினை தெளிவாக அறிந்து வைத்திருப்பதற்கு காரணம் அக்காலத்தில் மக்களை அடிப்படையாக கொண்டு எழுந்த இலக்கியங்களின் உதவியினாலே ஆகும்.

அவ்வாறே இதனையடுத்து வருகின்ற காலகட்டத்தில் அதிகமாக ‘அறம்’ பேசப்படுவதை நோக்கலாம். சங்கால இலக்கியம் எவ்வாறு அக்கால காதல், வீரம் ஆகிய சமூக நிலைமைகளை எடுத்தியம்பியதோ அதுபோல் சங்கமருவிய காலமானது அறம் எனும் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த காலமாக விளங்குகிறது. இக்காலத்தில் திருக்குறள், நாலடியார் ஆசாரக்கோவை நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, இன்னாநாற்பது போன்ற பல அற நூல்கள் தோற்றம் பெற்றன. இத்தன்மையானது சங்க காலத்தில் வெறுப்புற்று இருந்த மக்கள் பதிய பாதையை வேண்டி நின்ற தருணம் களப்பினரினால் அவர்களுக்கு அறம் என்ற தத்துவ பாதை திறக்கப்பட்டதுடன். சங்ககால பண்புகள் மறைந்து அறம் மேலோங்கியதை அறியக் கூடியதாக இருந்தது. இந்த இலக்கியங்கள் ஊடாக உண்மையாக சங்க கால மக்களின் வாழ்க்கையையும் சங்கமருவிய கால வாழ்க்கை பாங்கையும் ஒப்பிட்டு நோக்க கூடியதாக இருந்தது. மக்கள் அதிகமாக அமைதியை விரும்பினர். இதன் காரணமாக மக்களுக்கு ஏற்றவகையில் இலக்கியங்கள் படைக்கப்பட்டன. அக்கால சமூகத்தின் தேவையை அறிந்தே படைப்பாளிகளும் படைப்புக்களை படைத்தனர் என்பது தெளிவாக தெரிகிறது. இதனூடாக சமூகத்தின் பங்களிப்பு இலக்கியம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது எனக் கூறலாம்.

இதற்கு அடுத்த காலமான பல்லவர் கால இலக்கியங்கள் முக்கியமாக பக்தியினை கருவாக கொண்டு காணப்பட்டது. இதற்கு பிரதான காரணம் அக்காலத்தில் சமூகத்தின் தேவை பக்தியாக இருந்தமையே ஆகும். அத்துடன் இக்காலத்தில் ஆலயங்களில் வளர்ச்சியும் அதிகமாக காண்பட்டமையால் இயல்பாகவே பக்தி இலக்கியம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தது. இதற்கு சான்றாக அமைந்த சைவசமயம் மற்றும் வைணவ சமய நூல்களை குறிப்பிடலாம். உதாரணமாக தேவாரம், திருவெம்பாவை, நாச்சியார் திருமொழி போன்ற இலக்கியங்களை காணலாம். அத்துடன் தமிழ் மொழியின் இன்பசுவையை தரக்கூடிய திருவாசகம் எனும் தமிழ் இலக்கியமும் இக்காலத்திலையே தோற்றம் பெற்றது. ஆகவே பக்தியின் மோகத்தில் இருந்த மக்களிடையே சிறு ரசனையும் இருந்திருக்கிறது என்பதை நாம் திருவாசகத்தின் ஊடாக விளங்கிகொள்ளலாம். இவ்வாறாக மக்களுக்கு அக்காலகட்டத்தில் எது தேவையோ அதன் அடிப்படையிலையே இலக்கியமும் படைக்கப்பட்டது என்பதை  நாம் அறியலாம்.

இதற்கு அடுத்த காலகட்டமான சோழர்காலம் பல்வேறு துறைகளில் இலக்கியம் படைக்கப்பட்டது. காப்பியத்துறை, பொதுமக்கள் சார் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், இலக்கண நூல்கள் மற்;றும் சமய இலக்கியங்கள் போன்ற பல துறைகளிலும் இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக கம்பராமாயணத்தை பார்த்தோமானால் இது வடமொழி தழுவலாக இருந்தாலும் அதனை கம்பன் இயற்றும் போது அந்நாட்டு அரசனை, தன்னுடைய நாயகனாக கொண்டே கம்பராமாயணம் படைக்கப்பட்டது என்றொரு பரவலான கருத்து காணப்படுகிறது. இந்த இடத்தில் கம்பன் இவ்விலக்கியம் படைப்பதற்கு சமூகத்தில் இருந்து ஒரு எடுத்துகாட்டு தேவைப்பட்டுள்ளது. அதற்காக சமூகத்தின் ஒரு தலைவனை நாயகனாக கொண்டு இலக்கியத்தை படைத்தான். அத்துடன் தமிழ் சமூகத்தில்; காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள் சமூக நம்பிக்கைகள் அனைத்தையுமே நாம் கம்பராமாயணம் உட்பட ஏனைய இலக்கியங்களிலும் காணலாம். எடுத்துக்காட்டாக சகோதரத்துவம், நட்பு, அன்பு, மரியாதை, விருந்தோம்பல், காதல், குடும்பம், நீதி, அறம், பெரியோரை மதித்தல் போன்ற அனைத்துமே காப்பியத்தில் நாம் காணலாம். எனவேதான் சமூகம் தான் ஒரு படைப்பாளிக்கு தனது படைப்புக்களை படைக்க வழிசமைக்கிறது எனலாம்.

இதனைபோன்றே நாயக்கர் காலத்தில் அதிகமாக மக்கள் வாழ்க்கையுடன் இணைந்த இலக்கியங்கள் தோற்றம் பெற்றது. எடுத்துகாட்டாக பள்ளு இலக்கியங்களை குறிப்பிடலாம். இதன்போது புலவர்களாகிய படைப்பாளிகள் சமூகத்துடன் ஒன்றித்து இருந்தமையாலும் மக்கள் ஆட்சியாளர்களின் மீது கொண்டிருந்த வெறுப்பினாலும் அதற்கு ஏற்றவகையில் இலக்கியங்கள் படைக்க புலவர்கள் முற்பட்டார்கள்.

19ம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் செய்யுள் நடையை கடந்த, இலகுவாக புரிய கூடிய உரைநடை பக்கம் வாசகன், தனது கவனத்தை செலுத்தினான். இதற்கு காரணம் அச்சு இயந்திரங்களின் வருகையே ஆகும். இந்த காலகட்டத்தில்தான் பல்வேறு நவீன கவிஞர்களின் வருகையை நாம் அவதானிக்கலாம். ஏனெனில் சமூகத்தின் பிறநாட்டவர்களின் ஆதிக்கம், அதிகமாக காணப்பட்டதன் விளைவாக அவர்களில் இருந்து விடுபடுவதற்காக மக்கள் ஏங்கி தவித்து கொண்டிருந்தனர். இதனையே கருவாக கொண்டு கவிஞர்கள் போரட்டம் மிக்க, விடுதலை மிக்க படைப்புக்களை படைக்க முற்பட்டனர். அத்துடன் மக்களின் உண்மை நிலையையும், சமுதாய மக்கள் வாழ்வில் மேடுபள்ளங்களையும் வெளிச்சம் போட்டு காட்டக்கூடியதான இவர்களுடைய இலக்கியங்கள் அமைந்தன. எடுத்துக்காட்டாக பாரதி, பாரதிதாசன் பாடல்களை நாம் குறிப்பிடலாம்.

ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்

உதையப்பராகிவிட்டால் ஓர் நொடிக்குள் – ஓடப்பர் 

உதையப்பர் எல்லாம் மாறி

ஒப்பொப்பர் ஆயிடுவார் உணரப்பாநீ

-பாரதிதாசன் –

அத்துடன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியற் துறை வளர்ச்சியால் மானிட நடத்தைகளை எடுத்துக்காட்ட, பல்வேறு துறைகள்  வளர்ச்சிக்கண்டன. உதாரணமாக சமூகவியல், உளவியல், மானிடவியல், வரலாற்றியல், பொருளாதார இயல், மொழியியல், நாட்டுப்புறவியல் என்பவற்றை கூறலாம். இதன் காரணமாக அனைத்து விடயங்களையும் இலக்கியத்துடன் இணைத்து பார்க்கும் முறையும் வளர்ச்சி கண்டது. இதற்கு காரணம்  இலக்கியமும் ஒரு சமுதாயத்தின் அங்கமாக கருதியதே ஆகும். இதன் அடிப்படையிலையே திறனாய்வு கோட்பாட்டின் மூலம், இலக்கியத்தையம் சமூகத்தையும் இணைக்கும் வகையில், சமூகவியல் திறனாய்வு முறையும் வளர்ச்சி கண்டது.

சமூகவியல் அணுகுமுறை இலக்கியத்திற்கும் சமூகத்திற்குமான உறவினைச் சமூகத்தின் பிற அடிப்படை அலகுகளான குடும்பம், மதம், அரசு. கல்வி, நீதிமன்றம், பொருளாதாரம், உறவு முதலியவற்றோடு இணைத்து தனது கோட்பாட்டை விளக்க முற்படுகிறது. இதனால் இலக்கியத்துறையில் சமூகவியல் திறனாய்வு செல்வாக்கு பெற்று விளங்குகிறது

இவ்வாறாக வரலாற்று பக்கங்களை பார்க்கும் சமூகத்தின் வெளிபாடே இலக்கியம் என நாம் கூறலாம். வரலாற்றுப் பக்கங்களை போன்றே தற்காலத்திலும் தொழில், சாதி, வர்க்கம், மொழி, பால் முதலியவற்றின் அடிப்படையில் இலக்கியங்கள் தோற்றம் பெறுகின்றன. வாழ்வினைச் சித்தரித்தல் வேண்டும் என்ற நோக்கில் அப்பிரிவினருடன் வாழ்ந்து அவர்களின் விவரங்களை திரட்டி அவற்றின் அடிப்படையில் இலக்கியம் படைக்கப்படுவதையும் காணலாம். சு.சமுத்திரம் வாடாமல்லி என்ற நாவல் மூலம் அலிகளின் வாழ்க்கையினையும், ச.பாலமுருகன் சோளகர் தாடடி மூலம் பழங்குடியினர் வாழ்வுத் துயர விடயங்களையம் சித்தரிக்க முயன்றனர்.

இவ்வாறாக சமூக நிலைமைகளை இலக்கியங்கள் வெளிகொணர்ந்தாளும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இலக்கியத்திற்கான ஏற்பு சாதகமாக அமையும் என்ற எதிர்ப்பார்க்க முடியாது. எதிர்பலைகளும் உருவாகும். அதிகாரம் படைத்தவர்களின் அதிகாரம் இலக்கியங்களின் தோற்றுவாய்க்கு எதிராகவும் இருக்கலாம். ஒரு படைப்பை “சமூக அமைதியை குழைக்க கூடியது, குறிப்பிட்ட பிரிவினர்க்கு பாதகமானது, போராட்டத்தை ஏற்படுத்தக் கூடியது”  போன்ற விதத்தில் பல எதிர்ப்புக்கள் வந்து படைப்புக்களை தடைசெய்யக் கூடிய வாய்ப்பும் உண்டு. எடுத்துக்காட்டக பாரதியாரின் கனவு, ஆறில் ஒரு பங்கு ஆகிய படைப்புக்கள் ஆங்கிலேயரால் தடைசெய்யப்பட்டது. இதனைப்போன்றே மேரி டெய்லர்  என்ற இங்கிலாந்து பெண்மணி எழுதிய “இந்தியச் சிறை ஒன்றில் சில ஆண்டுகள்”  என்ற ஆங்கில புத்தகம் அவசரக்கால ஆட்சி காலத்தில் தடைசெய்யப்பட்டது. இவ்வாறாக சமூகத்தில் எல்லா இலக்கியங்களும் மக்களால் போற்றப்படுவதில்லை.

இலக்கியம் என்பது மொழியுடன் கூடியதான சமூகம் எனச் சொல்லப்படுகிறது. மேற்கூறப்பட்ட விடயங்களில் இருந்து இலக்கியம் சமூகத்தில் இருந்து தோற்றம் பெற்றாலும் சமூகமும், இலக்கியம் காட்டும் சமூகமும் ஒன்றல்ல என்பதை உணர்தல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட இலக்கியம் சமுதாயத்தை சித்தரிப்பதற்கு தனக்கு தேவையான உத்திகளை பயன்படுத்துகிறது. இலக்கியம் பொதுவாக அழகியல் ரீதியாக சமூகத்தை புரிந்துக்கொள்ள பயன்படும் ஒரு சாதனம் ஆகும். எனவே இலக்கியத்தில் இருப்பவை எல்லாம் சமூகத்தில் இருந்தவை என்றோ, சமூகத்தில் இருப்பவை எல்லாம் இலக்கியத்திலும் இருக்கும் என்றோ நாம் யோசித்தல் கூடாது. எனவே சமுதாய சித்தரிப்பு என்பது ஒரு படைப்பாளியின் ஆணுகுமுறைக்கு ஏற்ப அமையக்கூடியது. இதனையே தி.சு நடராசன் “எழுத்தாளர்களின் பின்புலம், நோக்கம்,சமுதாயத் தேவை ஆகியவற்றிற்கு எற்ப சமுதாய சித்தரிப்பு அமையும் என வயைiறுக்கிறார்.

இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்குமான தொடர்பு ஒவ்வொரு கால கட்டத்திலும் மாற்றம் பெற்றுக்கொண்டு வருகிறது. சமுதாய மதிப்புக்களையும் இலக்கியம் தாங்கி படைக்கப்பட்டதை அவதானிக்கலாம். ஆனால் பழங்காலத்தில் பின்பற்றப்பட்ட சமூக மதிப்புக்களை நவீனகாலத்திலும் அப்படியே பயன்படுத்தினால் படைப்பாளன் இன்னும் நவீன காலத்தில் கால் பதிக்கவில்லை என்று அர்த்தம். ஆனால் இதற்கு மாறாகவே இலக்கியங்களும் கால மாற்றத்திற்கு ஏற்ப சமூக மதிப்புக்களை மாற்றம் அடையச் செய்திருப்பதை காணலாம். அதாவது சமூகத்துடன் ஒன்றிணைந்தே பயணிக்கிறது. எடுத்துகாட்டாக, சங்ககால இலக்கியங்களில் மிகமுக்கியமாக கூறப்பட்ட மானம் எனும் விழுமியம் சங்கமருவிய காலத்திலும் திருக்குளின் வாயிலாக பிரதான இடம் கொடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வந்த காலங்களிலும் இது பின்பற்றப்பட்டது. ஆனால் நவீன காலத்தில் மானம் என்ற விழுமியத்தினால் மக்கள் பின்தள்ளப்படுகிறார்கள் எனக்கருதிய மு.வரதராசனார் திருக்குறளில் உள்ள மானம் என்ற அதிகாரத்தையே எடுத்துவிட வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். இவ்வாறு ஒரு காலத்தில் சமூக வளர்ச்சிக்கு காரணமாக இருந்த விழுமியம் மற்றொரு  காலத்தில் அச்சமூகத்திற்கு பாரமாகி விடுகிற சூழலும் எற்பட்டுவிடுகிறது. இவ்வாறு ஒரு விழுமியத்தை உன்னதம் எனக் கட்டியெழுப்பவதும் இலக்கியம்தான்;;: அது இன்றைய காலத்தில் பாதமாகி விட்டது என்றுக்கூறி மதிப்புக்களை உருவாக்கி மக்கள் மத்தியில்; சேர்ப்பதும் இலக்கியமாகத்தான் இருக்கிறது.

மேலும் ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம், ஒருத்திக்கு ஒருவன் என்ற விழுமியத்தை உருவாக்க நினைத்த சங்ககாலத்தின் பெண்ணின் குணமாக தொல்காப்பியத்தில் இப்படி வகுத்தார்.

“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்

 நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” 

 

ஆனால் பாரதியார் இதனையே இப்படி கூறுகிறார்

“நாணமும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம்”

 

அவரைத் தொடர்ந்து பாரதிதாசன்

“அச்சமும் நாணமும் இல்லாத பெண்கள் 

அழகிய தமிழ் நாட்டின் கண்கள்’  என பதிவு பண்ணுகிறார். இவ்வாறு பெண் விடுதலை சிந்தனைகள் பரவிய இருபதாம் நூற்றாண்டிற்கேற்பச் சமூக விழுமியங்களை மாற்றி படைக்கின்ற பணியினை இலக்கியம் மேற்கொள்வதை காணமுடிகிறது.

இவ்வாறாக ஒரு படைப்பாளி தோற்றம் பெறுவதற்கு அடிப்படை காரணமாக அமைவது சமூகமாகும். சமூகமே ஒரு படைப்பாளியை உருவாக்குகிறது. அந்த படைப்பாளி தனக்கு தேவையான படைப்பாக்கத்தை சமூகத்தில் இருந்தே பெற்றுக்கொள்கிறான். செந்தமிழ் பேசிய காலம் தொடக்கம் பேச்சத்தமிழ் வரையான அனைத்து இலக்கியங்களுமே சமூகத்தை சார்ந்ததாகவே அமைந்துள்ளது. சமூக விழுமியங்களை அறிந்து கொள்வதற்கு படைப்பாளியின் படைப்புக்கள் சமூகத்திற்கு தேவைப்படுகிறது. அத்துடன் ஒவ்வொரு செயலுக்கும் அல்லது ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கும் ஒரு பின்புலம் உண்டு. ஒரு தனி மனிதனின் மகிழ்ச்சிக்கும், துயரத்திற்கும் ஒரு பின்புலம் உண்டு. அதைப்போல, சமுதாயத்தின் விளைபொருளாகிய இலக்கியம் தோன்றுவதற்கும் உறுதியாக ஒரு பின்புலம் உண்டு என்பதை இதனூடாக நாம் உணரலாம். இருந்த போதிலும் இலக்கியம் வேறு சமூகம் வேறு என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். சமூகம் சாரந்த இலக்கியம் படைக்கும் போது இலக்கியத்திற்கு ஏற்ற இரசணையுடனும் அழகியலுடனும் படைக்கப்படுதல் கட்டாயமானதாகும். எனவே இலக்கியமானது சமூகத்துடன் இணைந்து இருப்பதுடன் அதற்குரிய நியதியும் தனித்துவமும் கொண்டாதாகவே காணப்படும்.

Leave a Comment